RSS
Hello! Welcome to this blog. You can replace this welcome note thru Layout->Edit Html. Hope you like this nice template converted from wordpress to blogger.

சுந்தரமூர்த்தி வாத்தியார் .



                                          
                          கண்ணன்,  பள்ளிக்குப் போவதற்காக நெல் வயல்களின் வரப்பின் மேல் தட்டுத்தடுமாறி ஓடி,  பஸ் ஸ்டாப்பை  வந்தடைந்தான். குலுங்கி நெளிந்து வந்த அரசு  பஸ், கோட்டை மேடு பஸ்டாப்பிற்கு வந்ததும் நின்றது. எச்சில் துப்புவதற்காகத் தன் சீட்லிருந்து  எழுந்த சுந்தரமூர்த்தி வாத்தியார் , கீழிறங்கித் துப்பினார். கண்ணன்  பஸ்ஸில்  ஏறி, சுந்தர மூர்த்தி வாத்தியார் அமர்ந்திருந்த  சீட்ல் போய் அமர்ந்தான். 

சுந்தரமூர்த்தி வாத்தியார், "தம்பி, இங்க நா உட்கார்ந்திருந்தேன். எந்திரிக்கிறியா?"என்று சொல்ல. கண்ணன், "முடியாதுங்க.. உங்கள யாரு எழுந்து போச்சொன்னா" என்று அவருடன் வாக்குவாதம் செய்தான். பக்கத்தில் இருந்தவர்கள் எவ்வளவு சொல்லியும் அவன் கேட்ட பாடில்லை. அலங்காநல்லூர்  பஸ்ஸ்டாண்டு வந்ததும் பஸ் நின்றது.

பஸ்லிருந்து கீழே இறங்கியவுடன் கண்ணைப் பார்த்து கேட்டார் சுந்தர மூர்த்தி வாத்தியார் .

" தம்பி!எந்த ஸ்கூலு ", 

"கரட்டு ஸ்கூலு, அதுக்கு என்னாவாம்?", 

" இல்ல சும்மா கேட்டேன் தம்பி நீங்க போங்க " என்று  கூறிவிட்டு பள்ளிக்குச் சென்றார் சுந்தரமூர்த்தி வாத்தியார் .

                         அலங்காநல்லூர் பள்ளி மிக எழில் சூழ்ந்த பள்ளி. எங்குப் பார்த்தாலும்  பச்சைக் குடையை நிறுத்தி வைத்தது போல்  ஆங்காங்கே புங்க மரங்கள் நின்று காட்சி தரும்.   அம்மரங்களின் மேல் உள்ள குருவிகளும் காக்கைகளும் கச்சேரிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கும். பள்ளி, மிக உயரமான குன்று மேல் இருப்பதால், மேகக் கூட்டங்கள் பள்ளியின் மொட்ட மாடியை வருடிச் செல்லும். சுற்றுவட்டாரத்தில் எந்தக் கிரமாத்திலிருந்து பார்த்தாலும் பள்ளி  நன்றாகத்  தெரியும். இந்தப் பள்ளியை 'கரட்டு ஸ்கூல்' என்று செல்லமாகவே அழைப்பார்கள்.


                                  இந்தப் பள்ளியிலே இருபதுவருடமாக வேலை பார்த்து வருகிறார் சுந்தர மூர்த்தி வாத்தியார். நல்ல வளத்தி, சுருட்ட முடி, அவர் தலையில் உள்ள நரை முடியை வைத்தே அவரின் வயதை அறிந்து கொள்ளலாம். இவருக்குப் பயப்படாத மாணவர்களே இருக்க முடியாது. எந்தச் சேட்டை பண்ணினாலும் அடிக்க மாட்டார். ஆனால் அதற்குப் பதிலாக சேரில் எப்படி அமர்கிறோமோ அப்படி நிற்கச்  சொல்லுவார்.  கால் இரண்டும் சற்று நேரத்திற்குப் பிடித்துக்கொள்ளும். அது ஒரு மாதிரியான வலியாக இருக்கும். "இது ஆசனம் தான் தண்டனை அல்ல"   என்று மழுப்புவார். இதற்குப் பயந்துகொண்டே யாரும் தவறுசெய்ய யோசிப்பார்கள். மாதந்தோறும் விடுப்பு எடுக்காத மாணவர்களுக்குத் தன் செலவுலேயே பேனா, பென்சில் என்று வாங்கிக் கொடுப்பார். மாணவர்கள் புத்தகப் புழுவாக இருப்பதை விரும்ப மாட்டார். ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களைப் படித்து வரச் சொல்லி மாணவர்களிடம் வினாக்களைத் தொடுப்பார். 


                                தான் படிக்கப்போகிற கரட்டுப் பள்ளியில் தான், சுந்தரமூர்த்தி வாத்தியார் வேலை பார்க்கிறார் என்பது கண்ணனுக்குத் தெரியாது. இதுவரை கோட்டமேடு கிராமத்தில் படித்துவிட்டு இப்பொழுது தான் அலங்காநல்லூருக்குப் படிக்க வந்திருக்கிறான். போனவாரம் தான் இவனின் அப்பா பள்ளியில் சேர்த்துவிட்டுப் போனார்.  

                          'நமக்கு எந்த வாத்தியார் வரப் போகிறாரோ' என்ற எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தனர் ஒன்பதாம் வகுப்பு 'டி' பிரிவு மாணவர்கள். அதில் கண்ணனும் ஒருவன். சுந்தர மூர்த்தி வாத்தியார் அறைக்குள் வந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து " குட் மானிங் சார் "  என்று சொல்லிவிட்டு அமர்ந்தனர்.  

                                       சுந்தரமூர்த்தி வாத்தியாரைப் பார்த்தவுடன் கண்ணின் டவுசர் நனைந்து விட்டது. ஒவ்வொருவரைப் பற்றியும் விசாரித்து கொண்டே வந்தார், கடைசியாக இவனிடம் வர,  

"சார் நீங்க யாருனு தெரியாம பஸ்ல அப்படிப் பேசிட்டேன் மன்னிச்சிடுங்க சார்..."

                           " கவலைப் படாதெ நா ஒன்னும் செய்யல, தவற உணர்வதே பெரிய விஷயம். இனிமே யாரிடமும் அப்படி நடந்துக்காதெ  " என்று சொல்லி அவன் முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டு, அன்று அனைவருக்கும் அறிவுரைகளை வழங்கினார். 

                          ஒரு நாள் சமூக அறிவியலில், ஒரு பாடத்தை "நாளை படித்து வாருங்கள்" என்று அவர் சொன்னார். ஒரு சில மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்கள் அனைவரும் படித்திருந்தார்கள். சில மாணவர்களில் கண்ணனும் ஒருவன். அதற்குத் தண்டனையாக சேரில் அமர்வது போல் நின்றான். கால் வலி தாங்காமல் அழுதுவிட்டான். அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

                       அன்று, மணி  மூணு இருக்கும். கும்பகர்ணனைப் போல்  தூங்கிக்கொண்டு இருந்தான்  கண்ணன். "டே சார் வந்துட்டாரு டா" என்று  அவன் நண்பன் பூபதி எழுப்ப, 'டக்' என்று எந்திரித்தான். பக்கத்தில் இருந்த மாணவர்கள் அனைவரும் ஏளனம் செய்து சிரித்தனர். இவன் சொன்னது பொய் என்று தெரிந்ததும் மீண்டும் தனது தூக்கத்தைத் தொடங்கினான். 

 "கண்ணா ..கண்ணா எந்திரிப்பா ....." என்று மீண்டும் எழுப்ப 
" டே பேசமா போடா... " 
" நா தான் சாருடா.... " 
" சொன்னா கேக்க மாட்டீயா...  ஒன்ன...." என்று சொல்லி அடிக்க கையை ஓங்க, அவன் முன் சுந்திரமூர்த்தி வாத்தியார். 

 "சார் அடிச்சிடாதீங்க ..பால் யாவாரம் பார்க்குறோம். காலையில நாலு மணிக்கே எந்திரிச்சு பால் ஊத்தப் போனேன்  அதனால தான் சார்.. அசந்து தூங்கிட்டேன்"  என்று கண்ணன் சொன்ன வார்த்தைகள், கோபமாக இருந்த அவர் மனசையும் சாந்தப் படுத்திருச்சு. ஒருவனை அழைத்து டீ வாங்கிட்டு வரச் சொல்லி கொடுத்தார்.  கூச்சப்பட்டுக் கொண்டே குடித்து முடித்தான்.

                                       காலாண்டுத்தேர்வு முடிந்தது. இந்தத் தேர்வின் முடிவில், ப்ராகிராஸ் கார்ட்டை அனைவருக்கும் கொடுத்தார் சுந்தரமூர்த்தி வாத்தியார். அருண் என்பவன் பஸ்ட் ரேங்க் எடுத்திருந்தான். கண்ணன் மூணு பாடங்களில் பெயில். கண்ணன் இப்படி மார்க் வாங்குவதற்கு அவனின் குடும்பச் சூழ்நிலைதான் காரணம் என்பதை அறிந்த  சுந்திரமூர்த்தி வாத்தியார் ஒரு முடிவு செய்தார். இனிமேல் எது சொல்லிக்கொடுத்தாலும் நல்ல படிக்காத மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து,  அவர்களுக்கு புரிந்து விட்டால், அனைத்து மாணவர்களுக்கும் புரிந்து விடும் என்கிற புதுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 

                                அசோகரின் கலிங்கப் போரைப் பற்றி பாடம் நடத்திக்கொண்டு இருந்தார் சுந்தரமூர்த்தி வாத்தியார். ஆனால் கண்ணன், "காலைல யாரோ ஒரு ஆளு பாலுக்குப் பணம் தரலயே! யாரா இருக்கும்?" என்ற சிந்தனையில் மூழ்கி இருந்தான். கண்ணின் சிந்தனை வேறு பக்கம் செல்கிறதை அறிந்த  சுந்திரமூர்த்தி வாத்தியார், 

                                "கண்ணா, அசோகரின் வாழ்க்கையில் மாற்றத்தை தந்த போர் எது? என்று கேட்க,

திறு திறு என்று முழித்த கண்ணன், " கா..கா.. "

" சொல்லு...சொல்லு...கரெக்ட் தான்"

"கார்கில் போர் சார்" என்று கண்ணன் சொல்ல வகுப்பறையே குலுங்கிச் சிரித்தது.

                                          அனைத்து மாணவர்களையும் அமைதியாக இருக்கச் சொல்லி விட்டு பேசினார். அறிவு என்னும் தீ யை பற்றிக்கொள்ளும் மாணவர்களின் வகை மூணு எனவும். நன்றாக புரிந்துகொள்ளும் மாணவர்கள், கற்பூரம் போல் உடனே பற்றிக்கொள்வார்கள் என்றும், சற்றுக் குறைவாக புரிந்து கொள்ளும் மாணவர்கள் மரம் போல் கொஞ்சம் பற்றிக் கொள்ள தாமதம் ஆகுமென்றும், புரிந்து கொள்ளும் தன்மை யில்லாதவர்களைப் பச்ச வாழைமர பட்டையுடன்  ஒப்பிட்டும் கூறினார்.  மேலும்,

                                      "கண்ணா! நீ பச்சவாழை மரப்பட்டை, இன்னம் காயாம இருக்க, காஞ்சப்பறம் பாரு, கற்பூரத்தை விட, சும்மா கப் னு பத்திக்கவ, இவன்க கேலி செய்றத நினைச்சு வருத்தப் படதெ..." னு சுந்தரமூர்த்தி வாத்தியார் சொன்ன அட்வைஸ் அவனுக்கு புது தெம்பைக் கொடுத்தது.

                                         புது நம்பிக்கையுடன் பள்ளிக்கு வந்தான், அன்றாட வீட்டுப் பாடத்தை அன்றே முடித்தான். பாடத்தை நன்றாகக் கவனித்தான். சுந்தரமூர்த்தி வாத்தியார் கேட்கும் கேள்விகளுக்கு 'டாண்.... டாண்'னு பதில் சொன்னான். மாதந்தோறும் விடுப்பு எடுக்காமல் பேனா பென்சில் என்று பரிசைப் பெற்றான். இது கண்ணவா.!.... என்று அனைத்து மாணவர்களையும் ஆச்சரியப் பட வைத்தான்.

                                கண்ணன், அரையாண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் பாஸ் பண்ணினான். "இன்னும் உன்னால் நல்லாப் படிக்க முடியும்" என்று  சுந்திரமூர்த்தி வாத்தியார் கண்ணனைப் பாரட்டினார்.

                                          ஒரு நாள், பூபதி விளையாட்டுப் போக்க, காம்பஸ் கருவிய எடுத்து கண்ணன் உட்காருகிற இடத்தில வைக்க, அதன்மேல் கண்ணன் உட்கார, நறுக்கென்று குத்தியது, வலி தாங்காம கத்தி விட்டான். எந்த மாணவர்களையும் அடிக்காத சுந்திரமூர்த்தி வாத்தியார் பூபதியை பிரம்பை எடுத்து அடித்து விட்டார். உடம்பெல்லாம் தடித்துவிட்டது. 


                                           பூபதியின் அப்பா  குமரேசன் அந்த ஊரு சேர்மனின் தம்பி. அன்று  பள்ளிக்கு வந்து பெரிய ரகலையே பண்ணிவிட்டார். "ஏம் பிள்ளைய எப்படியா அடிக்கப் போச்சு, அரசாங்கமே அடிக்க கூடாதுனு சொன்னப்ப நீ எப்படியா அடிச்ச? உன்ன என்ன பண்றேனு பாரு" என்று சுந்தரமூர்த்தி வாத்தியாரைப் ஏசிவிட்டுப் போனான். 


                                         பள்ளி தலைமையாசிரியரும், "உங்களுக்கு என்னங்க வந்துச்சு அவங்களுக்குள்ள சண்டை போடவாங்கே கூடிக்கிவாங்கே  நீங்க எதுக்கு அடிக்கிறீங்க. அந்தாளு என்ன பண்ணப் போறாரோ. சி .ஒ வரைக்கும் போனா பெரிய பிரச்னை ஆயிடும் அப்பறம் நா ஒன்னும் செய்ய முடியாது " என்று கடிந்து பேசினார். அப்போது தான் "ஏன்டா இந்த வாத்தியார் வேலைக்கு வந்தோம்"னு  வேதனைப் பட்டார் சுந்தரமூர்த்திவாத்தியார். 


                                குமரேசன் சொன்ன படி, அந்த ஊர் சேர்மன் அரசியல் செல்வாக்கை வைத்து அமைச்சரிடம் பேசி, சுந்தரமூர்த்தி வாத்தியாரை இடைநீக்கம் செய்ய ஏற்பாடு பண்ணினார். இதன் படி சுந்தரமூர்த்தி வாத்தியரை ஒரு மாதம் இடைநீக்கம் செய்தனர். "தவற கண்டிச்சதுக்குக் கெடைச்ச பரிசு இது தானா? " என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, அந்தத் தண்டனையை ஏற்றுக்கொண்டார்.


                                 அதன் பிறகு தன் வேலையை மட்டும் பார்த்தார். அன்றையிலிருந்து எந்த மாணவர்களுக்கும் எந்த தண்டனையும் கொடுப்பதில்லை. படிக்கச் சொல்லுவார் நன்றாகப் புரியும் படி நடத்துவார். "பாடத்தை நடத்திறது ஏ வேலை படிக்கிறது ஒங்க வேலை" என்ற கொள்கையை மட்டும் கையாண்டார். 


                             இதில் மாணவர்களுக்கு உடன்பாடு இல்லை. " நீங்க கேள்வி கேக்கலைனா எங்கனால முன்னமாதிரி படிக்க முடியாது சார்" என்று பூபதி  உட்பட  அனைத்து மாணவர்களும் கெஞ்சிக் கேட்க, மறுபடியும் பழைய சுந்தரமூர்த்தி வாத்தியாரைப் பார்க்க முடிந்தது.

                               அன்று கண்ணன்  வீட்டிலிருந்து தேங்காய், பழங்கள், முதலியவற்றை கொண்டு வந்து  சுந்தரமூர்த்தி வாத்தியாரிடம் கொடுத்தான். "மாணவனிடம் எதிர்பார்க்கிறவன் ஆசிரியரே இல்லை"  என்று   வாங்க மறுத்து, மற்ற வாத்தியார்களுக்கு முன் வேறுபட்டு நின்றார். 


                         முழு ஆண்டுத்தேர்வு முடிவடைந்தது. கோடை விடுமுறைநாட்களில் சுந்தரமூர்த்தி வாத்தியார் ஞாபகம் வரும்போதெல்லாம், அவரின் செல்போனுக்குத்  தொடர்பு கொண்டு பேசிவான். அவரும் இவனிடம் பேசுவதற்காக நேரம் ஒதுக்குவார்.

சுந்தரமூர்த்தி வாத்தியார்  அந்த விடுமுறை நாளில்  தனது சொந்த மாவட்டத்திற்கு ட்ரான்ஸ்பர் கேட்டுயிருந்தார். ட்ரான்ஸ்பரும் கிடைத்தது. 


                                மீண்டும் பள்ளிக்கூடம்  திறந்தது.  முதல்நாள், பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பு மாணவர்களிடமும் மற்றும் சக ஆசிரியர்களிடம் கூறிவிட்டு,  ஒரே கூட்டிலிருந்துவிட்டுப் பிரியும் பறவை போல அந்தப் பள்ளியிலிருந்து விடை பெற்று, வெளியே நடந்து வந்து கொண்டிருந்தார்.

                          அப்பொழுது. கண்ணன், " சார் சார்........... " என்று கூப்பிட்டுக்கொண்டு பின்னாடியே வர, அவனுக்காக நின்றார்.

                              "சார்.. அதுக்குள்ளையும் போறீங்க.  நீங்க சொல்லிக்கொடுத்தனால தான் சார் நல்லாப் படிச்சேன். இப்ப திடீர்னு போறீங்களெ " என்று வருத்தத்துடன் கூறினான்.

                                             " ரெம்ப நாள இங்கெ வேலை பார்த்துட்டேன், முன்ன மாதிரி அலைய முடியல கண்ணா. கடைசி காலக்கட்டத்தில சொந்த ஊருல இருக்கிறதுதான் நல்லது அதத்தான் ஏம் பிள்ளைகளும் விரும்புதுக "

 " உடனே போகணுமா சார் ?" என்று கண்ணீருடன் கூற,

"போகணும் கண்ணா..... அஞ்சு நாளைக்குள்ள ஜாயின் பண்ணனும் இப்ப போனாத்தான் சரியா யிருக்கும். போறதுக்கு முன்னாடி ஒன்னும் மட்டும் சொல்ல விரும்புறேன், படிப்பும் ஒழுக்கமும் உன்கிட்ட இருந்தா எங்க இருந்தாலும் பொழைச்சுக்குவ, படிக்க வேண்டிய வயசுல நல்லாப் படி. இந்த வருஷம்   டென்த் வேற, அம்மா அப்பாவ கடைசி வரைக்கும் பாத்துக்க" என்று அவரும் கண் கலங்கி பேசிவிட்டுப் போனார். அவர் மறையும் வரை அந்த வழியைப் பார்த்துக்கொண்டே இருந்தான் .

                                   மாலை நான்கு மணி  ஆனதும் பெல் அடித்தது. பள்ளி மாணவர்கள் அனைவரும் வீட்டுக் போகிறோம் என்கிற மகிழ்ச்சியில்  சில்வண்டுகளைப் போல ஹே ........ஹே......... என்ற சத்தம்  போட்டு வெளியே வந்தனர். ஆனால் கண்ணன் மட்டும் சுந்தர மூர்த்தி வாத்தியார் பள்ளிய விட்டுப் போன வருத்தத்திலும், அவர் மேல் உள்ள ஆத்மார்த்தமான அன்பினாலும், அவரை மறக்க முடியாம  மெல்ல நடந்து, பஸ் ஸ்டாண்டை அடைந்தான்.

                          பஸ் வந்ததும் வேகமாகப் போய் ஏறி இடம் போட்டான் கண்ணன். அந்த சீட்ல் உட்கார்ந்ததும் சுந்தர மூர்த்திவாத்தியார் ஞாபகம் தான் வந்தது. பஸ் கிளம்பியது. அப்போது பஸ்ஸில் ஒரு  பெண் தன் குழந்தையோடு நின்று கொண்டிருந்தாள். பஸ் போகிற வேகத்தில் அந்தக் குழந்தை அழ ஆரம்பித்து விட்டது.

                                 சீட்லிருந்து எழுந்த கண்ணன்,  குழந்தையோடு நின்றிருந்த பெண்ணை அழைத்தான், "அக்கா இங்கெ வந்து உட்காருங்க"  .



கடிதம்



                                         பணப் பிரச்னையில், அன்று ரவிக்கும் ராஜேஷுக்கும் பயங்கர சண்டை நடந்து கொண்டிருந்தது. ராஜேஷ், "டே! உன்னக் கொல்லாம விட மாட்டேன்டா" என்று சொல்லி  அவன் கழுத்தில் கை வைத்து நெரிக்க, பக்கத்தில் முத்தையா என்கிற பெரியவர்  வீட்டுக்குள் வந்து விலக்கி விட்டார். "ஏப்பா  படிக்க வந்த எடுத்துல இப்படித்தான் சண்ட போடுறதா, இதுக்குத்தான் மதுரயில இருந்து வந்தீகளா, நல்ல பிள்ளைக" என்று சொல்லி சமாதானப் படுத்திவிட்டுப் போனார். இவர்கள் சண்டை போடுவதும் கூடிக்கொள்வதும் புதிதல்ல. சற்று நேரத்தில் கூடிக்கொண்டனர்.


                                        அந்தத் தெருவில் யாரும், யார்வீட்டில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். நகரங்களில் இவ்வாறு இருப்பது சகஜம் தானே. அருகில் உள்ளவர்களிடம் போய்ப் பேசினால் யாரும் முகம் கொடுத்து பேசமாட்டார்கள். இதனால் இவர்கள் வேலை உண்டு, படிப்புண்டு என்று இருந்தனர். முத்தையா, பெரியவர் மட்டும் அவ்வப்போது வந்து சண்டையை விலக்கி விடுவார்.

                                           இவர்கள் இருப்பதோ கீழ் வீடு. மாடி வீட்டிலிருந்து ஒரு பொண்ணு  கீழே இறங்கி தினமும்  பள்ளிக்கூடத்திற்குச் செல்வாள். இவர்களின் வீட்டு வாசப்படியைக் கடந்துதான் செல்ல வேண்டும். அவள் பெயர் ப்ரியா. பண்ணிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். அவள் அப்பா ஒரு முரடன் பகல் எல்லாம் ஓட்டலில் உழைத்துவிட்டு, இரவு ஆனவுடன் குடிக்க ஆரம்பித்துவிடுவார். ப்ரியாவின் அம்மாவிற்கு அவரை சமாளிப்பது தான் வேலை.


                                           அன்று,  ப்ரியா மாடியிலிருந்து கீழே வரும்போது யதார்த்தமாக ரவியைப் பார்த்துத்  திரும்ப, ரவிக்கு மனசுக்குள்  'திக்' என்று இருந்தது. அன்று முதல் ரவி அவளைப் பார்க்க ஆரம்பித்தான். அவள் பள்ளிக்குப் போகும் போதெல்லாம் வெளியே வந்து நிற்பான். ஒரு நாள்,  ராஜேஷிடம் இந்த விஷயத்தை சொல்ல, ராஜேஷ், "மாப்புள இந்தக் காலத்தில் நல்ல பொண்ணு கிடைக்கிறதே!  கஷ்டம், காலேஜ் போனாலே பொண்ணுக கெட்டுப் போயிரும், லவ்வச் சொல்லிரு" என்று காதலுக்கு அடித்தளம் போட்டான். 

                                             அம்மா அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கவக்கிறார்கள்,   என்கிற எண்ணம் துளிகூட ரவியிடம் இல்லாம போச்சு. இதற்கு ராஜேஷும் ஒத்துஊதினான். ரவி, அவளிடம் எப்படிப் போயி பேசலாம் என்று ராஜேஷிடம் யோசனை கேட்க. "எக்ஸமுக்கு +2 புக்கு  தேவைப்படுதுனு சொல்லி பேசுடா" என்று சொன்னான். மாடிப்படியிலிருந்து கீழே இறங்கி வருவாள் என்று தெரிந்து ரவி கீழே காத்திருந்தான். மெதுவாக படியிலிருந்து கீழே இறங்கி வந்தாள் ப்ரியா. ரவியின் முகம் மலர்ந்தது.  பின்னால் அவளின் அப்பாவும்  இறங்கி வந்தார். அவரைப் பார்த்தவுடன் மலர்ந்த முகம் கூம்பிடுச்சு.   அப்படியே வீட்டிற்குள் போய் மறைந்து கொண்டான். நல்ல வேளை ப்ரியாவின் அப்பா, ரவியப் பார்க்கல.

                                    வீட்டில் பார்த்துக்கேட்டால் வம்பாயிடும் என்று தெரிந்ததால், பள்ளிக்குச் செல்லும் வழியில் கேட்க்கலாம் னு  ரவியும் ராஜேஷும் பிள்ளையார் கோயில் அருகில் காத்திருந்தனர். அன்ன நடை போட்டு மெல்ல வந்தாள்.  கதிரவன் ஒளி, அவளின் முகத்தில் அடிக்க,   தங்கத் தாமரையே  நடந்து வந்ததது போல் இருந்தது. ரவி அவளை மறிக்க, ப்ரியா கொஞ்சம் பயந்த உணர்வுடன் அவனைப் பார்த்தாள். "டி.என்.பி.எஸ்.சி எக்ஸமுக்கு படிக்க +2 தமிழ் புக் வேணும் தரமுடியமா?" என்று ரவி  கேட்க,  "இந்தாங்கண்ணா  படிச்சு முடிச்சுட்டு குடுங்க" என்று கூறிவிட்டு தலை குனிந்த படியே போனாள்.

                                   "டே ராஜேஷ், அவ என்னை அண்ணானு சொல்லிட்டாலே டா  " என்று ரவி கூற, "பொண்ணுக எல்லோரிடம் மொத அப்படித்தான் பேசுவாங்க,பேசிப்  பாரு பழகப் பழகப் பாலும் புளிக்கும் மாதிரி நிச்சயம் பேசுடுவா டா"னு சொல்லி உசுப்பேத்திவிட்டான் ராஜேஷ். முதலில் யோசிச்ச ரவி அப்பறம்  அவளை தன் வழியில் கொண்டுவரத் திட்டமிட்டான்.

                                          அதற்கு, ராஜேஷ்  ஒரு யோசனை தெரிவித்தான்.   "அந்தப் புத்தகத்தை திருப்பி கொடுக்கும் பொழுது,  அதில் உன் விருப்பத்தை எழுதி கொடுடா னு" ராஜேஷ் சொல்ல, கடிதம் எழுதினான் ரவி. 'ப்ரியமான ப்ரியாவுக்கு, உன் மேல் எனக்கு பிரியம். என் காதலை ஏற்றுக்கொள். இப்படிக்குப் பிரியமானவன்', என்று எழுதி புத்தகத்தில் வைத்து, அவளிடம் கொடுப்பதற்காக  அதே  பிள்ளையார் கோயிலில்  அருகே நின்று  கொண்டிருந்தனர். ரவி அவளிடம் போய்ப் பேசத் தயங்க, ராஜேஷ் அவளிடம் போய்ப் பேசினான். "ரவிக்கு உன்னைப்  பிடிச்சிருக்காம், ஒ மனசுல என்ன இருக்குனு கேட்கச் சொன்னான்" என்று கூற, ராஜேஷ் கையில் இருந்த புத்தகத்தை வாங்கிக்கொண்டு, "நா அவுங்கள அப்படி நினைக்கலண்ணா" என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். அந்தப் புத்தகத்தினுள் கடிதம் இருந்தது ப்ரியாவுக்குத் தெரியாது. கையில் புத்தகம் வைத்தப்படியே வீட்டிற்குள் நுளைந்தாள்.

                                                  அன்று ப்ரியாவின் அக்கா, மாமா, குட்டிஸ் மிதுளா எல்லாம் வந்திருந்தார்கள். அக்கா.... என்று கட்டிப் பிடித்து சந்தோஷப் பட , மிதுளா ,'சித்தி' என்று தன் மழலை மொழியில் ப்ரியாவை கூப்பிட்டாள்.  ப்ரியாவின்  அப்பா வழக்கம் போல குடித்துவிட்டு வந்திருந்தார். இருந்தாலும் இன்று கொஞ்சம் குறைவு தான். எல்லாரும் சந்தோஷமாகப் பேசிக்கொண்டு இருந்தனர்.

                                             அப்பொழுது கீழே வைத்திருந்த புத்தகத்தை மிதுளா எடுக்க, அதில் இருந்த கடிதம் வெளியே வந்தது. அதை மிதுளா எடுத்து கையால் கசக்க,  ப்ரியாவின் அப்பா, " ஏம்மா இது என்ன பேப்பரு சின்னப் பிள்ளை, விளையாட்டுப் போக்க கிழிக்கப் போகுது" என்று கூறி, அதை எடுத்து  அவர் யதார்த்தமாகக் கடிதத்தைப் பார்த்துவிட்டார். பார்த்த, நிமிடத்திலேயே, "படிக்கப் போறியா?....இல்ல  ல்வ் பண்ணப் போறியா? யாருடி இதக் குடுத்தா?... சொல்லு....சொல்லு..........." என்று  அடிஅடினு அடித்துவிட்டார். எல்லாரும் விலக்கிவிட்டர்கள். அப்படியிருந்தும் துள்ளிக்குதித்த அவர், ஓங்கி  வயிற்றில் உதைக்க, ப்ரியா சுவரில் மோதி அப்படியே கீழே விழுந்தாள். சுவரில், இரத்தம்  வழிந்து கொண்டிருந்தது.

                                      அக்கம் பக்கத்தில்  யாருக்கும் சொல்லாமல்,  இரவோடு இரவா, சடலத்தை அடக்கம் செய்தார்கள். அன்று முதல் ப்ரியாவின் அப்பா தன் மகள சாகடித்துவிட்டோம் என்கிற விரக்தியில் சாப்பாட்டையே மறந்து விட்டார். தன் மகள் புகைப்படத்தைப் பார்த்த படியே இருந்தார்ரவியும், ராஜேஷீம் வீட்டைக் காலி பண்ணனும்முனு முடிவு பண்ணினர். ஆனால் வீட்டு ஓனர் வெளியூர் போனதால அங்கேயே இருக்கிறதா ஆயிடுச்சு.

                                   ஒரு நாள், இரவு 10 மணி இருக்கும். படிக்க போகிறததுக்கு முன் ஆப்பிள் தின்னுவது இவர்களின் வழக்கம்.  கத்தியை எடுத்து ஆப்பிளை நறுக்கினான் ராஜேஷ். இருவரும் தின்றார்கள். அடுத்தப் பழத்தை நறுக்கலாமுனு கத்தியை வச்ச இடத்தில பார்க்க, கத்தியைக் காணோம். வீட்டில் எங்க தேடியும் கிடைக்கல. இருவருக்கும் வாக்கு வாதம் மீண்டும் சண்டை. "நீ தாண்டா எடுத்த"....     " இல்ல நீ தாண்டா எடுத்த."... என்று. ஒரு வழியாகப் படுத்தார்கள். படுக்கும் போது இருவருக்கும் 'கத்திய யாரு எடுத்துருப்பா' என்கிற சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. ரவி தூங்கிட்டான். ராஜேஷுக்கு தூக்கம் வரவில்லை. அந்த நேரத்தில் எங்கேயோ ஒரு ஓலச் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தது. எந்திரித்து வெளியே வந்து பார்த்தான். 

                தெருவில் உள்ள விளக்குகள் அமந்து அமந்து எரிந்தது. ஆயிரக்கணக்கான வெள்ளைக் காகிதங்கள் தெருக்களில் பறந்து கொண்டிருந்தது. அதில் ஒரு காகிதம் பறந்து வந்து ராஜேஷின் முகத்தில் மோதியது. பயந்த உணர்வுடன் அதைப் பார்த்தான். அது ப்ரியாவிற்கு எழுதிய கடிதம். பார்த்த வினாடியிலே இவனின் நாடியின் வேகம் அதிகரித்தது. என்ன செய்வதறியாமல், வேகமாக வீட்டிற்குள் சென்று, சட்டென்று கதவைச்சாத்தினான். ரவியை எழுப்பி அந்தக் கடிதத்தைக் காட்ட, அது வெறும் காகிதமாகவே தெரிந்தது. "டே சும்மா போய்ப்  படுடா, நானேப் பயப்படல நீ எதுக்குப் பயப்பிடுற" னு சொல்லிப் படுத்தான். 

                                           அதிகாலையில்  5 மணிக்கு கண் விழித்தான் ராஜேஷ். அப்பொழுது பக்கத்தில் படுத்திருந்த ரவியைக் காணோம். "எங்க போயிருப்பான் "னு தேடி வெளிய வர, பாத்ரூம்மில் லைட் எரிந்து கொண்டு இருந்தது. "அப்பாடா" என்று பெருமூச்சு விட்டான். வெகு நேரமாகியும் வரவில்லை என்பதால், பாத்ரூம் கதவை மெல்ல திறந்து, உள்ளே  போயிப் பார்க்க, ரவி கத்தியால் குத்தப்பட்டு இருந்தான். அப்படியே ஆடிப்போயிட்டான்.  அவன் வயிற்றில் சொருகப்பட்ட கத்தி, இரவு ராஜேஷ் ஆப்பிளை அறுத்தக்கத்தி. ராஜேஷ் அப்படியே பயத்தில் மயங்கி விழுந்தான்.

                        அந்த இடம் முழுவதும், வெள்ளைத்தாள்கள் பறந்து கொண்டே, ராஜேஷை சுத்திக் கொண்டிருந்தது. அப்பொழுது, "பர்மா காலனியில ஒரு கொல நடந்துருக்கு  உடனே வாங்க சார்" என்று யாரோ ஒரு பெண், தொலைபேசி மூலம் போலீஸிடம் புகார் சொல்லும் குரல்சத்தம், கேட்டுக்கொண்டிருந்தது. 

                                        ராஜேஷ், கண்விழித்துப் பார்க்கையில் சுற்றிலும் போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தனர். பக்கத்தில் ரவியின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அந்த இடத்தில் மக்கள் ஒன்று  கூடி வேடிக்கைப் பார்க்க, போலீஸ்காரர்கள் ராஜேஷை கைது செய்தனர். 

                         கோர்ட்ல் கொலை செய்யப்பட்டதற்குச் சாட்சியமாக ராஜேஷ் கைரேகை பதிந்திருந்த கத்தியைக் காண்பித்தனர். மற்றொரு சாட்சியமாக முத்தையாவை அழைத்தார்கள். "ஐயா, ரெண்டு பேரும் அடிக்கடி சண்ட போடுவாங்கே. ஏற்கனவே ஒரு மொற இப்படித்தான சண்டப் போட்டு ராஜேஷ், ரவி கழுத்த நெருச்சத நா கண்ணால பாத்தேன்" என்று அவர் அளித்த வாக்குமூலம் ராஜேஷுக்கு ஆயுள் தண்டனையை உறுதிசெய்தது. 


                                            ராஜேஷை சிறையில் அடைத்தார்கள். அப்பொழுது ஒரு காகிதம் அவனை நோக்கி வந்தது. அதில் எதோ எழுதிருந்தது. ராஜேஷ் படித்தான். 

                                            "உங்களப் போல ஆளுகனால தான் என்னை மாதிரி நல்ல பொண்ணுகளும் படிக்கிற வயசுல, கெட்டுப் போயிறாங்க.  என்னோடு, அண்ணன் யாரும் பிறக்காதுனால, ரவிய அண்ணன நினைச்சுத்தான் பார்த்தேன். ஆனா ரவி அப்படி நடந்துக்கல,  ரவி பண்ணத் தவறுக்கு ஏ உயிர் போயிடுச்சு. ரவி  மட்டும் தப்பு பண்ணல நீயும் தான். தவறு செய்தவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல, தவறுக்கு உடந்தையாக இருந்தவர்களும், குற்றவாளிகள் தான்" என்று இருந்ததை, ராஜேஷ்  படித்து முடித்தான்.

                                     படித்து முடித்தவுடன், அந்தக் கடிதம் அப்படியே சிறைச்சாலையில் இருந்து வானத்தை நோக்கி பறந்து, சென்று கொண்டிருந்தது. ராஜேஷின் விழிகளில் கண்ணீர்த் துளிகள்  கசிந்தது.


திருடன் போலீஸ்




     போலீஸ்காரர்கள், செல்லூர் திருடன் அழகரின் வீட்டைக் கண்டுபிடித்து விட்டனர். அரசு, சாமி, வேல்,  அன்பு என நான்கு பேர் கொண்ட போலீஸ் படை 'மப்டியில்' அழகர் வீட்டை நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அன்று தீபாவளிப் பண்டிகை. அந்தத் தெருவில் உள்ள மக்கள் எல்லோரும் கொண்டாட்டத்தின் உச்சிக்கு சென்றீருந்தார்கள்.  சின்னக்குழந்தைகளின் கைகளில் மத்தாப்பூ சிரித்துக்கொண்டிருந்தது. ஆங்காங்கே, சங்குச் சக்கரங்கள் அழகாக தரையில் சுத்திக் கொண்டிருந்தன. புஸ்..; என்ற சத்தத்துடன் ராக்கெட்டு விண்ணைக்கிழித்துக் கொண்டு சென்றது. வெடிச்சத்தங்கள் அந்தத் தெருக்களை அதிரச்செய்தன.



                                           அந்த நேரத்தில், அழகர் வீட்டை விட்டு வெளியே வந்தான். போலீஸ்காரர்கள் உசரானார்கள். அவன் வீட்டிலிருந்து அந்தத் தெருவைக் கடந்தவுடன் போலீஸ்காரர்கள் விரட்ட ஆரம்பித்தனர். ஏதோ சத்தம் வருகிறது என்று பின்னாடி திருப்பிப் பார்த்தான்  அழகர்.  அவன் அருகில்  போலீஸ்காரர்கள் . அவ்வளவு தான். ஒரே ஓட்டம் பிடித்தான். இவர்கள் எல்லோரும்  பின் தொடர்ந்து, அவனை விரட்டினர். தெருக்களில் போட்டிருந்த வண்ணக் கோலங்களை மிதித்து ஓடி, அலங்கோலங்கலாக மாற்றினர். அழகர்,   உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடினான்.  போலீஸ்காரர்கள் அனைவரும் பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்தனர். அவனைப் பார்த்து, டுமில் டுமில் என்று சுட, அதிலிருந்து தப்பித்து ஓடினான். இவர்களும் விட்ட பாடில்லை.


                                           தெருக்களிலிருந்து மெயின் ரோட்டைக் கடந்தனர். அழகர், ஒரு முடக்கில் திரும்பினான்.  அந்த இடத்தில் கல் தடுக்க, கீழே விழுந்தான். காலில் ரத்தம் வந்தது. அவர்கள் அருகில் வந்து விட்டனர். ரத்தம் வந்ததுகூட தெரியாமல் எந்திரித்து ஓடினான். ஓடும் போது எதிரே ஒரு இளம் பெண் புத்தாடை அணிந்து நடந்து வந்து கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணின் மீது மோத, இருவரும் அந்த இடத்தில் கீழே விழுந்தனர். அவளின் மேல் அழகர். "சாரிங்க்காவ்" னு கூறிவிட்டு எழுந்து ஓடினான். பின்னாடி வந்த ஒவ்வொருவரும் மோத,  அவள் அணிந்திருந்த புத்தம் புதிய ஆடை  அழுக்கு ஆடையானது.  "உங்களையெல்லாம் உள்ள தூக்கி வைக்கனும். ராஸ்கல்ஸ், ஸ்டுப்பிட்ஸ், கண்ணு மண்ணு தெரியாம ஓடுராங்கே" னு திட்டிக்கொண்டிருந்தாள்.


                                   இப்பொழுது போலீஸ்காரர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்தனர். திரும்பிப் பார்த்தான் யாரையும் காணோம்.  அப்படியே அழகர் வைகை ஆற்றில் இறங்கினான். வைகை ஆற்றில் கானல் நீர் கூட, காட்சி அளிக்க வில்லை. ஆங்காங்கே, கரையின் மேல் மறைந்திருந்த போலீஸ்கார்களும் கீழே இறங்கினர். அழகர் அங்கும் இங்கும் ஓட நான்கு பேரும் சுற்றி வளைத்து, கையில் துப்பாக்கியை எடுத்தனர். கொஞ்சம் கூட  அழகரின் விழிகளில் மரணத்தைப் பற்றிய பயம் தெரியவில்லை. அவன் தலையைக்  குறி பார்த்து டுமில்... டுமில்.. டுமில்.. டுமில்.. என்று சுட, அழகர் அப்படியே கீழே விழுந்தான்.


                                        "அய்யா.. அழகர் மாட்டிக்கிட்டாண்டா" என்று சொல்லிவிட்டு,நான்கு பேரும் கையைத் தட்டிக்கொண்டனர். துப்பாக்கியால் சுட்டு கீழே விழுந்த  அழகர், அப்படியே எந்திரித்து   சிரித்துக்கொண்டே சொன்னான், "டே சாமி, இப்ப நீ திருடன், நாங்கள் எல்லாம் போலீஸ் ஓ கே வா?".

ஆத்திக்காட்டு ராமன்




                            ஆத்திக்காடு கிராமத்திலிருந்து ராமன் படிக்க, திருப்பத்தூர் வரனும். அன்று பள்ளியில் ஓட்டப் பந்தயப் போட்டி நடந்துச்சு. ராமனும் கலந்துக்கிட்டான். நூறு மீட்டர் தூரத்தை 15 வினாடிகளில் கடந்து வெற்றி பெற்றான். ஆசிரியர்களுக்கு இன்ப கலந்த அதிர்ச்சியாக இருந்துச்சு. இவனின் திறமையை மேலும் செயல்படுத்த, தலைமையாசிரியர் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடுகளைச் செய்தாரு. அந்த நேரத்தில  ராமனின் அப்பா இறந்துட்டாரு. குடும்பத்தின் சுமை ராமனின் தலையில் விழுந்துருச்சு.  ரெண்டு தங்கைகளையும், அம்மாவையும் காப்பாத்துவதற்காக வேற வழியில்லாம  கட்டட வேலைக்குச் சென்றான். 


                                         ராமனின் தங்கச்சிக வயசுக்கு வந்துருச்சுக. "இதுகல எப்படி கரை சேக்கப் போறேனு" னுகிற வலி ராமன் மனசுல குத்த ஆரம்பிச்சுருச்சு. அந்த நேரத்தில முத்திருளாண்டியப் போயி  ராமன் சந்திச்சான். "ஏதாவது நல்ல சம்பதிக்கிற வேலையா இருந்தா சொல்லுக அண்ணே"னு கேட்டான். நான் பண்றது திருட்டுத்தொழில். "அத செய்வியா"னு முத்திருளாண்டி   கேட்டாரு. முதல திருடுருத்துக்கு பயந்த இவன் பின்னாடி ஒத்துக்கிட்டான். ராமன் அம்மாவிடமும் தங்கச்சிகளிடமும் காரைக்குடிக்கு வேலைக்குப் போவதாகச் சொல்லிட்டு  திருடுவதற்குக் கிளம்பினான். 


                                அன்று தான் முதல் திருட்டு. தனியாக ராமனை  மட்டும் பள்ளத்தூரில் ஒரு வீட்டில் திருடச் சென்னார்கள். முத்திருளாண்டி, பூட்டு ராசா, சண்முகம் ஆகிய மூனு பேரும் தூரத்தில் உட்காந்து அவனை எதிர்பாத்துக்கிட்டு இருந்தாங்க. ராமன் வீட்டினுள் மெதுவாக இருங்கினான். கொஞ்ச நேரத்தில் திடீர்னு போலீஸ் வந்துட்டாங்க.  கையும் களவுமாக பிடிபட, அவர்களைத் தள்ளிவிட்டு, சுவர் ஏறி குதித்து, தப்பித்து ஓடினான், போலீஸீம் விரட்டியது. துப்பாக்கியை எடுத்து குறிப்பார்பதற்குள் கண்ணுக்கு எட்டாத தூரத்திற்கு ஓடி விட்டான். ராமனின்  ஓட்டத்தைக் கண்டு கூட்டாளிகள்  முத்திருளாண்டி, பூட்டுராசா, சண்முகம்  மூனு பேரும் ஆச்சரியப்பட்டுப் போனங்க.


                                       முத்திருளாண்டி ராமனிடம் மன்னிப்புக்கேட்டாரு. "அண்ணே நீங்க எதுக்கு மன்னிப்பு கேக்குறீக"னு ராமன் சொல்ல. "போலீஸுக்கிட்ட சொன்னதே நா தாப்பா, ஒ திறமைய சோதித்துச்சுப் பாத்தோம் நீ ஜெயிச்சுட்டா"னு சொல்லி, செலவுக்குப் பணத்தையும் கொடுத்தாரு. இது போல பல திருட்டு வேலைய தொடந்து செய்தாங்க. 


                                  முத்திருளாண்டி, ராமன் தங்கச்சிகளுக்கு கல்யாணம் நடக்கிறதுனால காணாடுகாத்தான் நகரத்தார் வீட்டுல கொள்ளையடுச்ச அப்புட்டு பணத்தையும், நகையையும்  கொடுத்துட்டுட்டாரு. எவ்வளவு திருடுனாலும் சேத்து வைக்கிற பழக்கம் முத்திருளாண்டிக்குக் கிடையாது.  கிடைச்சப் பணத்தையும் நகையும் வச்சு, தன் ரெண்டு தங்கச்சிகளுக்கும் நல்ல படியா கல்யாணத்தை முடிச்சான் ராமன். பணத்தையும் நகையையும் பாத்த ராமனுக்கு, திருட்டுத் தொழில விட முடியல. தொடர்ந்து திருடிக்கொண்டே இருந்தான்.


                                      முத்திருளாண்டி, ராமனை தூக்கிவச்சுக்கிட்டு ஆடுனாரு.எந்த வீட்டுக்கும் திருடுறதுக்கு முன்னாடி, இப்பயெல்லாம் ராமன்கிட்டதான் யோசனைக் கேட்கிறது. இது சண்முகத்துக்கு கொஞ்சம் கூட புடிக்கல."என்னடா நேந்து வந்தவனுக்கு இம்புட்டு செய்றாரு" என்கிற ஆதங்கம். முத்திருளாண்டிய விட ராமன் திருடுரதுல கில்லாடிய ஆயிட்டான். போலீஸ், ராமன் கூட்டத்தைப் பிடிக்க வலை வீசி  தேட ஆரம்பிச்சாங்க. ஆறு மாதமாகியும் ராமனையும், அவனது கூட்டாளிகளையும் பிடிக்க முடியாம, காரைக்குடி இன்ஸ்பெக்டர் ஆதி உயர் அதிகாரிகளிடம் திட்டுவாங்கினாரு.


                                      இந்த முறை ஒக்கூர் ஆச்சி வீட்டில திருட முடிவ பண்ணாங்க. "எனக்கு ஒரு வேலையிருக்கு முத்திருளாண்டி   நா வரல"னு சொல்லி, சண்முகம் இந்த முறை, திருட்டுல கலந்துக்கல. முகத்துல கருப்புத்துணிய கட்டிக்கிட்டு கொள்ளையடிக்கிறது இவுங்க வழக்கம். அதன் படி இரவு நேரத்தில் வீட்டின் பின்பக்கமாகச் செவர் ஏறி ஒட்டப் பிரிச்சு குதுச்சாங்க. எப்பையும் போல பூட்டு ராசா தன் திறமையக் காட்ட, பீரோவ திறந்து இருக்கிற பணத்தை எடுத்துக்கொண்டிடுந்தார்கள் ராமனும்,  முத்திருளாண்டியும். எதார்த்தமாக ஆச்சி எந்திரித்து லைட்ட போட, மூன்று பேரும் மாட்டிக்கொண்டார்கள். ஆச்சி, "திருடேன் திருடேன் ...."என்று கத்த, ராமன்  சட்டென்று ஆச்சியின் கழுத்தில் கத்தியை வைத்தான். அவனின் முகத்தில் இருக்கிற துணிய இழுத்து முகத்தைப் பார்த்துருச்சு ஆச்சி. உடனே, வச்ச கத்தியால ஆச்சியின் கழுத்தை அறுத்துட்டான்.  முத்திருளாண்டியும் பூட்டு ராசாவும், அந்த இடத்தை விட்டு ஓடிட்டாங்க.  அப்படியே ஆச்சியை கீழேத் தள்ளிவிட்டு ஓட்டம் பிடித்தான் ராமன். போலீஸிக்குத் தகவல் தெரிந்து அந்த வீட்டில் விசாரனை செய்தார்கள்.


                      "ஏப்பா ராமா! இப்படிப் பண்ணிட்டீயே? இது வரைக்கும் கொள்ளைக்காரங்கனு தான் சொன்னாங்கே, இனி ஊருல கொலைகாரங்கே னுல  சொல்லப் போறங்கே" னு  முத்திருளாண்டி   வேதனைப்பட, "வேணுனு பண்ணல, ஏ முகத்தப் பாக்கவும் பயத்தில என்னை அறியாம நடந்துருச்சுண்ணே"னு ராமன் சொன்னான். "சரி இனி நடக்கிறது ஆண்டவன் கையில"னு  சொல்லிட்டு படுக்கச் சென்றார்கள். ராமனுக்கு அன்று நடந்த சம்பவம், இரவு முழுவதும், உருத்திக்கிட்டே இருந்துச்சு.


                                காலையில் ஒரு முடிவு பண்ணினான் ராமன். "நாளைக்கு திருடப் போறது தான் கடைசித் திருட்டா வச்சுக்குவம்.  ஏதாவது கடவச்சு பொழச்சுக்குலாம்ண்ணே, என்ன சொல்லுறீக"னு ராமன் கேட்க, கொலைக்கு பயந்து,  முத்திருளாண்டி ஒத்துக்கிட்டாரு. அப்ப தான் சண்முகம் வந்தான். நாளைக்கு காரைக்குடி  நகரத்தார்  வீட்ல திருடப் போற விஷயத்தை சொன்னாங்க. "சரி நாளைக்கு வந்துரேன்" னு சொல்லிட்டு சண்முகம் கிளம்பினான். ராமன் மேல் உள்ள கோபத்தில, நாளைக்கு திருடப்போகிற விஷயத்தையும், ஒக்கூர் ஆச்சிய கொன்ட விஷயத்தையும், இன்ஸ்பெக்டர் ஆதிக்கிட்ட போட்டுக்கொடுத்தான் சண்முகம்.


                                 காரைக்குடி இன்ஸ்பெக்டர் ஆதி, கான்ஸ்டபுள் ஆறுமுகம் உள்பட பத்து பேரு கொண்ட ஒரு தனிப்படை, சண்முகம் கூறியதன் பேரில்   நகரத்தார்    வீட்டை முற்றுகையிட்டாங்க. ராமனை, எப்படிப் பிடித்தலும் மின்னல் வேக ஓட்டத்தால் தப்பித்து விடுவான் என்பதால் ஆங்காங்கே கயிறைக் கட்டி, அதை மண்ணால் மூடிட்டாங்க. அந்த இருட்டில் போலீஸ்காரர்கள் ஒழிந்து கொண்டானர்.


                               மூனுபேரும் சண்முகத்துகாக காத்துக்கொண்டிருந்தார்கள். சண்முகம் வந்த பாடில்லை. அவன் வராததால் ராமனுக்குச் சந்தேகம் வந்துருச்சு. "நம்ம பய அப்படியலாம் செய்ய மாட்டேன் ராமா" னு  முத்திருளாண்டி   சொன்னதுனால ராமன் பெரிசா நினைக்கல. 'சரி வாங்கனு' நகரத்தார் வீட்டை நோட்டம் விட்டார்கள். ஆள் நடமாட்டம் இல்லை என்று தெரிந்தவுடன் வீட்டின் பின்புறச் செவர் ஏறி ஓட்டைப் பிரிச்சு  உள்ளே சென்றார்கள்.பூட்டு ராசா பீரோவைத் திறக்க,ராமன்  நகைகள் எல்லாத்தையும் எடுத்து முடிச்சான். போலீஸ்காரர்களின் பூட்ஸ் கால் சத்தம் கேட்டதால், போலீஸ் வந்ததை அறிந்தான் ராமன்.  முத்திருளாண்டியிடம் நகைகளைக் கொடுத்து, "எப்படியும் மாட்டப்போறோம் நான் முன்னாடி போனா என்னைப் பிடிக்கிறது தான் அவுக நோக்கமா இருக்கும். அப்ப நீங்க தப்பித்து ஓடுறீக" னு சொல்லிட்டு வெளியே ஓடியாந்தான், மறைந்திருந்த  போலீஸ்காரர்கள் கயிற்றைத் தூக்க,  கயிறு தடுக்கி ராமன் கீழே விழ, போலீஸீம் பிடிச்சுருச்சு


                                       இது வரைக்கும் ராமன் பண்ணத் திருட்டுல, பிடிக்க முடியமா மேல் அதிகாரிக்கிட்ட திட்டு வாங்கின ஆதி, "ராமா! இனி ஜென்மத்துக்கும் நீ திருடக்கூடாது, எத்தனை நாளு என்னைய அலைய விட்டுருப்பா வைக்கிறண்டா உனக்கு வேட்டு" என்று சொல்லி ஆத்திக்காட்டு ராமனின் திருட்டுக்கு மட்டும் அல்ல அவனின் ஓட்டத்திற்க்கும் முடிவு பண்ணினான். கை,கால் ரெண்டையும் கட்டிப்போட்டு துப்பாக்கியை எடுத்து காலுக்கீழே, நரம்பு மேலே சுட்டான் ஆதி. சுட்டதுல கால் நரம்பு கட்டாயிடுச்சு. ராமனுக்கு உயிர் இருந்துச்சு தவிர அவன் நடையில உயிர் இல்ல. கோர்ட்ல, 'ஓடும் போது சுட்டேனு 'சொல்லிட்டான் ஆதி.


                                       'ஆத்திக்காட்டு ராமனுக்கு  கொலை மற்றும் கொள்ளை வழக்கில் பத்துவருட சிறை தண்டனை' என்ற செய்தி செய்திதாளில் வெளிவந்தது. இதைப் பார்த்த ராமனின் தங்கச்சி வீட்டுக்காரர்,  "உனக்குப் போட்டது திருட்டு நகையா, அப்பவே தெரியும்டி ஒன்னுமில்லாதவனுக்கு ஏது இம்ம்புட்டு பணமுனு, நகைய எடுத்துக்கிட்டு மரியாதயா போயிடு" னு சொல்லி அடிச்சு அவுங்க ஆத்தா வீட்டுக்கு அனுப்பிட்டான். இன்னொரு தங்கச்சி விட்டுக்காரார், நல்ல மனசுங்கிறதுனால, ராமன ஜெயில போய்ப் பாத்துட்டு வந்தாரு. 


                                         போலீஸீக்கிட்ட இருந்து தப்பித்த  முத்திருளாண்டியும் பூட்டு ராசாவும்  நகையை காட்டுல பொதச்சு வைச்சாஙக. அந்த வாரம்  மழை பேஞ்சுக்கீட்டே இருந்துச்சு. முத்திருளாண்டியும் பூட்டு ராசாவும் நகைகளை பொதச்ச எடத்தில வந்து பார்ந்தாங்க மழைனால, மண்ணு அனைத்தும்  அந்த இடத்தில வந்து சேர்ந்திருச்சு. பொதச்ச இடமே தெரியாம போயிருச்சு. கடைசி காலம் வரைக்கும் நகையை கண்டு பிடிக்காமலே செத்துட்டாங்க.

வளர்த்த பிள்ளையும் வச்ச பிள்ளையும்




                        அப்பே ஆத்தா செத்துப் போயிட்டாலும், தன் தம்பி செல்வத்தை  நல்ல படியா படிக்க வச்சாரு கார்மேகம். கார்மேகத்துக்கும் துளசிக்கும் பிள்ளை பாக்கியம் இல்லையினு மருத்துவர் சொன்னாலும், தன் தம்பியையும் தன் இடத்தில வச்ச தென்னபிள்ளைகளையையும் தான், கொழந்தைய நினைச்சு வளர்த்தாரு கார்மேகம். துளசியும் தன் கொழுந்தன் மேல நல்ல பாசமா நடந்துக்கிட்டா. செல்வத்துக்கு கல்லூரி படிப்பும் முடிஞ்சது. பக்கத்து ஊரு மில்லுல கணக்காளார் வேலையும் கிடைச்சது. 

                            இதே ஊரைச் சேர்ந்த ஜெகனும், மில்லுல வேலைப் பார்த்தான். ஜெகன் அடிக்கடி மில்லில் பணத்தை எடுத்துவிட்டு கள்ளக் கணக்கை காண்பித்து வந்தான். செல்வம், ஜெகன் செஞ்ச மோசடியை அம்பலப்படுத்தினான். இதனால் மில் ஓனர் ஜெகனை வேலையை விட்டு நீக்கினாரு. செல்வம், ஜெகனின் பகையை வளர்த்துக்கிட்டான்.

                                தென்னம்பிள்ளைக்கு ஒரம் போடுறதும், ஒவ்வோரு நாளும் மறக்காமா தண்ணீர் விடுவதும், எதாவது  கன்டுவாடிப்போயிருந்தா அதனிடம் போயி நலம் வெசாரிப்பதும், என்று இதையே வழக்கமான வேலையாக வச்சுகிட்டு இருந்தாரு கார்மேகம். இப்படித்தான் ஒரு நா,  ஆடு தென்னம்பிள்ளையைக் கடிக்க,  ஆடு வளர்த்தவங்கள கேக்காத கேள்வி கேட்டு,இவரு அவுங்கள கடிச்சாரு.  எப்படியோ! அஞ்சு வருசத்துல தென்னம்பிள்ளை மரமா வளர்ந்து நின்னுச்சு.  

                                         அன்று ஒரு மரம் பாலை விட்டுருந்துச்சு. கொஞ்ச நாளிலே பூப்பூத்து காய் காய்த்துவிடும். ஒரு பெண் எப்படிப் பூப்படைகிறாளோ அது போலத்தான் தென்னமரம் பாலையிடுவது.  அதைப் பார்த்தவுடன் கார்மேகத்திற்கு ஆனந்த கண்ணீர் வந்திருச்சு. இந்த மகிழ்ச்சிய மனைவியிடமும், தம்பியிடமும் அக்கம் பக்கத்தினரிடமும் பகிர்ந்துக்கிட்டாரு.  ஆனா செல்வத்துக்குத் தோட்டந் தொரவு  மேல கொஞ்சம் கூட விருப்பம் கெடையாது. 

                                   வயசு இருப்பத்தேழு ஆனவுடன் தன் தம்பி செல்வத்துக்குப் பொண்ணுப் பார்க்க ஆரம்பிச்சாரு கார்மேகம். நடுத்தெருவில் வசிக்கும்  நாராயணன் தன் மகள எப்படியாவது செல்வத்துக்குக் கெட்டிக்கொடுத்துடனுமுனு நினைச்சான். கார்மேகம்த்திடம் பல முறை கேட்டும் ஒத்துக்கல. கார்மேகம், பக்கத்து ஊரு மில் ஓனர் பொண்ணு, பத்மாவ செல்வத்துக்கு பேசி முடிச்சாரு. அன்னையிலிருந்து நாராயணன் கார்மேகத்தை எதிரிய நினைக்க ஆரம்பிச்சான். எப்படியாவது செல்வத்தையும் கார்மேகத்தையும்  பிரிக்க முடிவு பண்ணினான். இவனுக்கு ஊரு வச்ச பேரு 'நாரதர்'. இவன் ஒரு எடத்திலிருந்தா,  அந்த எடத்தில கலகம் இல்லாம இருக்காது. ஊருக்குள்ளே எவனும் சந்தோசமா இருக்கிறது  இவனுக்குப் பிடிக்காது. 

                                      கல்யாணம் நடக்கத் தீவிர ஏற்பாடுகள் நடந்துகிட்டு இருந்துச்சு. கல்யாணக் கொட்டகை மேல யாருக்கும் தெரியாம, 'நாரதர்' தனது ஆளுகளிடம் தீயை வைக்க  சொல்ல, நன்றாகப் பத்திக்கிருச்சு. எதுவுமே தெரியாத மாதிரி வந்து, " கார்மேகம் தீப் பிடிக்குது ஒடியாங்க ஒடியாங்க "னு  கத்தினான். வேகமாக பக்கத்தில இருந்த தண்ணிய வச்சு தீய அனச்சாங்கா".  தாலி கட்ட வேண்டிய நேரத்துல இப்படி நடந்திருச்சேப்பா" என்று ஊரு பெரியவங்க முனுமுனுக்க ஆரம்பித்தனர் "எது நடந்தாலும் கல்யாணம் நடக்கும், போயி தாலியக் கெட்டுடா செல்வம்"னு கார்மேகம் சொல்ல, தாலியக் கட்டுனான் செல்வம். 

                                                முதன்முதலாக வீட்டிற்குள் செல்வமும்  பத்மாவும்  நுளைய, கரண்டு போயிடுச்சு. "என்ன நேரத்தில பொண்ணுப் பாத்தாங்களோ சகுனமே சரியில்லை இன்னும் என்னமெல்லாம் நடக்கப் போகுதோ" என்று மீண்டும் அந்தத் தெருவில் சிலர் பேசினார்கள். இருந்தாலும், துளசி எதுவும் நெனக்காம, "இந்த குடும்பத்து வாரிச   தழைக்க வைக்க  வந்த மகாலெட்சுமியே! வாமா"னு ஆளத்தி எடுத்தா. ஆனா பத்மாவின் செயல்பாடு வேறு விதமாக இருந்ததுச்சு.

                                     அவ்வப்போது தன் வேலையை கச்சிதமாகச் செஞ்சான் நாரதர். பத்மாவிடமும் செல்வத்திடமும் இல்லாத பொல்லாத விஷயங்களைச் சொல்லி கார்மேகத்தின்  மேல  வெறுப்பை உண்டாக்கினான். ஒரு நா நாரதர் செல்வத்தைப் பார்த்து, "மொத்த நாலு ஏக்கர்ல உனக்கு உள்ள ரெண்டு ஏக்கர நீ விக்கிறத இருந்தா, ஏக்கருக்கு நாலு  லெட்சம் கொடுத்து, நா வாங்கிக்கிறேன் என்ன சொல்லுருற" என்று செல்வத்திடம் சின்ன முடிச்சு போட்டுட்டுப் போயிட்டான். பத்மாவுக்கு இதுல உடன்பாடு இருந்துச்சு. பத்மா எவ்வழியே, செல்வமும் அவ்வழியே தான் .

                                                     செல்வம், கார்மேகத்திடம் போயிப் பேசினான். "அண்ணே, நான் தனியாப் போயிக்கிறோம்ண்ணே,  பத்மா நல்ல வசதியா வாழ்ந்தவ, அவளுக்கு  இங்க இருக்கப் புடிக்கல. எனக்கு வேண்டிய சொத்தப் பிரிச்சு கொடுத்துடுங்கண்ணே"னு சொன்னவுடன் கார்மேகத்துக்குத் தலையில இடி விழுந்த மாதிரி போச்சு. "இதுக்காகத்தான உன்னை வளத்து படிக்க வச்சமா"னு   கார்மேகம் கேட்க, அவனுக்கு எங்கிருந்து தைரியம் வந்ததோ," அண்ணே இது ஒன்னும் ஒங்க சொத்தில்ல, நம்ம தாத்தா சொத்து. நா ஏம் பங்கத்தான கேக்குறேன்"னு கேட்டவுடன் கார்மேகம் கண்ணீல் கண்ணீர்த்துளிகள். துளசி மனசும் நொந்து போச்சு.  அப்பொழுதும் தம்பி கேட்டதை தட்டிக்கழிக்காம ரெண்டு ஏக்கரும் அவனுக்கு சேர வேண்டிய வீட்டையும் பிரிச்சுக் கொடுத்தாரு கார்மேகம். செல்வமும், பத்மாவும் , வீட்டையும் தோப்பையும் விற்கிறவரைக்கும் இங்கேயே இருந்தாங்க.

                                              நாரதர், கார்மேகத்தை மேலும்  துன்பப்படுத்த, அடுத்த காயை நகர்த்தினான். "தம்பீ! செல்வம்  தென்னமரத்த வச்சு நா என்ன பண்ண, வெறும் இடமா வேணுமுனா கொடு  வாங்கிக்கிறேன்"னு சொல்லிட்டான்.  அடுத்த கட்ட வேலையில் இறங்கினான் செல்வம். 

                                            ரெண்டு ஏக்கருல உள்ள நூத்தி முப்பது மரத்தை அப்புறப்படுத்த செல்வத்தோட ஆளுக புல்டவுசரையும், ஜெ சி பி யையும் , கோடரியும் கொண்டு வந்தாங்க. இதைப் பார்த்தவுடன் பதறியடிச்சுக்கிட்டு ஒடியாந்தான் கார்மேகம். அக்கம் பக்கத்தில இருந்த ஊர் பெரியமனுசர்களும் வந்து விட்டார்கள். கார்மேகம் செல்வத்தைப் பார்த்து, "செல்வம், இத வளக்க பட்டபாட்டை கண்ணு முன்னாடிப் பாத்துட்டும், எப்படிடா அழிக்க, மனசு வந்துச்சு"னு கேட்க, "ஏ எடம் என்னவேணாலும் செய்வேன் உங்களுக்கு கேக்க உரிமையில்ல" னு சொல்லிட்டு கோடரிய எடுத்து ஒரு மரத்தை வெட்ட ஆரம்பிச்சான். வந்தது கோபம் கார்மேகத்திற்கு, இன்ன அடின்னு இல்ல.  இது நாள் வரைக்கும் தன் தம்பிய இப்படி அடிச்சதே இல்ல. அடிச்சாலும்  "தெரியாம அடிச்சிட்டேன்டா  மன்னிச்சுகோட"னு சொல்ல, "நா ஒன்ன கோர்ட்ல பாத்துக்கிறேனு " சொல்லிட்டு அந்த இடத்தை விட்டுக் கிளம்பினான் செல்வம்.

                                          நாரதர் இறுதிக் காயை நகர்த்த ஆரம்பிச்சான். இதற்கு  ஜெகனை ஆயுதமாகப் பயன்படுத்தினான். ஜெகனிடம்  அருவாளைக் கொடுத்து , "செல்வம் ஆத்துல குளிச்சுக்கிட்டு இருக்கான் வர்ற வழியில அவனை முடிச்சுட்டு வா, பலிய கார்மேகத்து மேல போட்டுக்கெல்லாம்"னு நாரதர்  சொல்ல, சொன்ன படியே செய்தான் ஜெகன்.

                                                   நாரதர் கார்மேகத்தை சந்திச்சு, "மில்லுல ஏதோ, பிரச்னை போல  அதனால உங்க தம்பிய கொலை பண்ண,   ஜெகன் ஆத்துபக்கமா போயிக்கிட்டு இருக்கான்"னு சொன்னாவுடன், கார்மேகம் பக்கத்தில கிடந்த அருவாவ கையில் எடுத்துக்கிட்டு ஓடினாரு  ஆத்தாங்கரையை நோக்கி.

                                                               ஒழிந்து கொண்டு இருந்தான் ஜெகன். குளித்து விட்டு கரையிலிருந்து இறங்கினான் செல்வம். அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத சமயம். செல்வத்தை எதிர்நோக்கியிருந்த ஜெகன், அருவாளை எடுத்து ஓங்க செல்வம் விழிப்பாக இருந்ததால், தலையில் வெட்ட வேண்டியது, கையில் பட்டது. இரத்தம்  கொட்டுகொட்டுனு கொட்டியது.  கார்மேகம், "செல்வம் .......... "னு கத்திக்கொண்டு ஒடியாந்தான். ஜெகன் அருவாவை எடுத்துக்கொண்டு கருவேலங்காட்டிற்குள் மறைந்தான்.  இரத்தம் அதிகமாக வெளியேறிதால் மயக்கம் அடைந்தான். தன் தம்பியை தோள்பட்டையில் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிலே கொண்டுபோய்ச் சேர்த்தாரு கார்மேகம். 

                                                               விஷயம் தெரிந்து துளசி, பத்மா, மற்றும் ஊர்க்காரங்க ஆஸ்பத்திரிக்கு வந்தாங்க. அப்ப, "சொந்தந்தான் விட்டுப் போயிரும்மா, இல்ல தலைய சொரிஞ்ச சுழி தான் அழிஞ்சு போகுமா? ரத்தப் பாசமய்யா! எப்படியிருந்தாலும்  தம்பிய  காப்பத்திட்டான்ல கார்மேகம்" என்று ஊர்க்காரர்கள் பேசிக்கிட்டு இருந்தனர்.

                                           படுத்திருந்த செல்வம் கண் விழிச்சான். எதிரே கார்மேகம் உட்கார்ந்திருந்தாரு.  "அண்ணே உனக்கு இவ்வளவு கெடுதல் பண்ணியும்  என்னக் காப்பாத்திட்டீயே! என்ன மன்னிச்சுடுண்ணே!" என்று செல்வம் சொல்ல, "நீ என்ன பேசுறதுனாலையோ திட்டினனாலையோ எனக்கு கோபம் வரல, தென்ன மரத்த வெட்டினியே  அதுதான் வருத்தம், உனக்கு ஒன்னுனா நா இருக்கேன், எனக்கு ஒன்னுனா நீ இருக்க, பாவம் எந்த வலியையும் சொல்லத்தெரியாத தென்னமரங்களுக்கு யார் இருக்கா?" னு கண்ணீர் மழ்க பேசினாரு கார்மேகம். தன் தவறை உணர்ந்தான் செல்வம்.பத்மாவும் மன்னிப்புக்கேட்டாள்.

                                               "எந்தச் சம்பவம்னாலும் நாரதர் வந்துடுவானே! எங்கப்பா ஆளக்காணோம்" னு ஊர்காரர் ஒருவர் சொன்னவுடன். சொன்ன நிமிசத்தில்,"நல்ல வேளை கார்மேகத்துக்கிட்ட நா சொல்லைனா? செல்வத்துக்கு என்ன ஆயிருக்கும்?" என்று  பேசிய படியே நாரதர் உள்ளே வந்தான். நாரதரை முறைத்துப் பார்த்தான் செல்வம்.



சொர்க்கத்தின் வாசப் படி





               மதுரை தமுக்கம் மைதானத்தில் மேஜிக் ஷோ நடந்தது. மேஜிக்கைக் காண மக்கள் படை எடுத்து வந்தார்கள். காரணம், மேஜிக் சைக்கிளில் ஏறி, கண்ணை மூடி, எந்த இடத்திற்கு போகனுமுனு நினைக்கிறமோ? அந்த இடத்தை அடையளாம். 50 ரூபாய்க்கு உலகத்தைச் சுத்திப் பார்க்கும் போது கூட்டம் வராதா என்ன? 



                    திருடுரதையே வேலையா வச்சுகிட்டு இருந்தான் சிவா. அன்னா நகரில் ஒரு வீட்டில் சிவா திருடிட்டு வெளியே வரும் போது, எப்படியோ போலீஸுக்குத் தகவல் தெரிந்து, சுத்தி வளைச்சுட்டாங்க. சிவா அவர்களிடமிருந்து தப்பித்து ஓட ஆரம்பிச்சான், போலீஸும் தொரத்தினார்கள். மதுரையில சந்து பொந்து எல்லாம் ஓடி, கடைசியாகத் தமுக்கம் மைதனாத்திற்குள் புகுந்தான். அங்கு மேஜிக் ஷோ நடக்கும் இடத்திற்குள் போனதால், போலீஸால் சிவாவை கண்டுபிடிக்க முடியல.




                       மேஜிக் ஷோல கலந்துகிட்ட சிவா சைக்கிள ஏறி உட்கார ஆரம்பிச்சான். மேஜிக் நிபுணர் சைக்கிளைப் பார்த்து, "பாஸ் இந்த பையன் எங்கு போகா வேண்டும் என்று நினைக்கிறானோ அங்கு செல்" என்று கூறினான். சிவா கண்ணை மூடி சிங்கப்பூருக்குப் போக வேண்டும் என்று நினைத்தான். கண்ணைத்திறக்க, அழகிய சிங்கபூரை அடைந்தான். இவனுக்கு உற்சாகம் தாங்கல. மீண்டும் கண் இமையை மூட மீண்டும் மதுரைக்கு வந்தான். மேஜிக் ஷோல அனுமதி ஒரு நிமிடம் மட்டும் என்பதால் சிவா வெளியேற்றப்பட்டான்.




                          போலீஸிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அந்தச் சைக்கிளை அடைய வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் உதித்தது. இரவு 1 மணி இருக்கும். தமுக்கம் மைதானத்தில் மேஜிக் ஷோ நடத்தவந்தவர்கள் அனைவரும், உறக்கத்தின் உச்சிக்கு சென்றிருந்தார்கள். யாருக்கும் தெரியாமல், அந்தச் சைக்கிளை எடுத்து, தப்பித்து விட்டான் சிவா.




                                சைக்கிள் கிடைச்சாலும், கிடைச்சுச்சு. இவன் போகாத நாடு இல்ல, பார்க்காத இடமும் இல்ல. திருட்டிப் புத்தி இருப்பதால் வித்தியசாமாக யோசிக்க ஆரம்பிச்சான். பணம் இருக்கிற இடத்திற்கும், நகைகள் இருக்கிற இடத்திற்கும், சென்று அனைத்தையும் கொள்ளை அடித்து, ஊர்த்திருடன் உலகத்திருடன் ஆனான். அனைத்துப் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் சைக்கிள் திருடனைப் பற்றிய செய்திகளே வந்தன.




                 ஆஸ்திரேலியா சிட்னியில் ஒரு வீட்டுல கொள்ளை அடிக்கும் போது, போலீஸ் சுத்திவளைக்க, வசமாக மாட்டிக்கொண்டான். அப்போது நினைத்தான் "எப்படி இருந்தாலும் எனக்கு மரணம் நிகழத்தான் போகிறது, "நிச்சயம் சொர்க்கத்திற்குப் போக மாட்டேன், நரகத்திற்குத்தான் போவேன் இந்தச் சைக்கிள வச்சாவது ஒரு முறை சொர்கத்தைப் பார்த்துவிடலாம்" என்று கண்ணை மூடி நினைக்க, சொர்க்கத்தை அடைந்தான் சிவா. "என்னாட ஆளக் காணமுனு" திகைத்து விட்டனர் ஆஸ்திரேலியா போலிஸ்காரர்கள்.




                               சொர்க்கத்தில், சைக்கிளிருந்து இறங்கியவுடன், அவனுக்குள் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது. ரம்பை, ஊர்வசி, மேனகை கூட்டாக நடனமாடிக்கொண்டு இருந்தார்கள். இவனும் கலந்துகொண்டு சொர்க்கத்தையே கலக்கினான். ரம்பைக்கு மிகவும் பிடித்து, சிவாவின் தோளில் கையை போடா, ஊர்வசிக்கும் மேனைகைக்கும் ரம்பையின் மேல் கோபம். இருந்தாலும் விட்டுக்கொடுத்துவிட்டார்கள் இந்த மன்மதனை. "சரி இனி கிளம்பலாம்" என்று சிவா சைக்கிளில் ஏற, "அத்தான்! உடனே கிளம்ப வேண்டுமா?" என்று ரம்பை சோக குரலில் கூறினாள். "போக வேண்டிய நேரம் வந்திருச்சு ரம்பையே!" என்று கண்ணை மூடி "மதுரைக்குப் போக வேண்டும் "என்று நினைத்து கண்ணைத் திறந்தான் சிவா.




                                கண்ணைத் திறந்த போதும், சொர்க்கத்தில் தான் இருந்தான். சிவாவுக்கு அடி வயிறு கலங்கிவிட்டது. பத்து முறைக்கு மேல் கண்ணைத்திறந்து மூடினாலும் இவன் நினைத்த இடம் வரல. கண்ணுல தண்ணீர் வந்துருச்சு. திடீர் னு ... யாரோ பேசுற சத்தம் கேட்டுச்சு. யாருனு பார்த்த சைக்கிளிருந்து வந்துச்சு அந்த சத்தம். "சிவா, நான் தான் பாஸ் பேசுறேன் வேற எந்த இடத்திற்குப் போயிருந்தாலும் திரும்பி உங்களக் கூட்டிட்டுப் போயிருப்பேன் ஆனால் நீங்க இங்க வரனுமுனு ஆசைப்பட்டீங்க, சொர்க்கத்திற்கு யாரு வாருவாங்கனு உங்களுக்குத் தெரியாதா ?". 

எமன்



                           அவளிடம் பல முறை காதலை வெளிப்படுத்தினான் பலனில்லை. முடிவு செய்தான் தற்கொலை செய்யலாம் என்று.  ஏறினான் எட்டு மாடிக் கட்டத்தில்.  எட்டாவது மாடி நுனியில் நின்று தற்கொலைக்குத் தயாராக நின்றான். அவள் பெயரைச் சொல்லி அழைத்தான். அவள் வந்தாள். முடிவாக, 'நீ என் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இந்த இடத்திலிருந்து குதித்துச் செத்து விடுவேன்' என்று கத்தினான்.


                        கீழே கூடிநின்ற  மக்கள் 'வேணாம் வேணாம்' என்று ஆரவாரம் செய்தனர். அவள் அந்த இடத்தை விட்டு நகர, இவன் கிழே குதிக்கத் தயாரானான். கீழே  காவல் துறை அதிகாரிகள் 'தற்கொலை செய்வது சட்டப்படி குற்றம் 'என்று எச்சரிக்கை செய்தனர்.

                 காவல்துறை அதிகாரிகள் அவளிடம் சமாதானப் புறாவைத் தூது விட்டானர்.  'எனக்குப் புடிக்காத ஆள எப்படி சார் மேரேஜ் பண்ணிக்க முடியும்' என்று அவள் வாதம் செய்தாள்.

                            இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே மேலிருந்து அவன் கீழே விழுக, இடையில் கம்பிவடத்தில் சிக்கிக் கொண்டான். அந்த கம்பி வடம் மழையில் நனைந்து  இற்றுப்போயிருந்தது. அவனைக் காப்பாற்ற காவல்துறை தீவிர ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தது. அதற்குள்ளேயும் அந்தக் கம்பி அறுந்துவிட, அப்படியே மேல் இருந்து கீழே விழுந்தான். தலை தரையில் பட, இரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்தது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளை அவள் காலடியில்  சிதறிக்கிடக்க.....

                 அவன், 'அம்மானு'  கத்திக்கொண்டு தூக்கத்தில் இருந்து கண் விழித்தான். 'நல்ல வேளை இது கனவா ' என்று தன் தலையைப் பிடித்து தொட்டுப்பார்த்தான். 'ம்ம்.. இரத்தம் இல்ல..  கனவு தான்' என்று உறுதிப்படுத்திக்கொண்டான்.  அவன் அம்மா, ' என்ன சாமி ஆச்சு'னு கேட்டு, பயந்து ஏதும் போயிருப்பான் என்று நினைத்து,  பூஜை அறைக்குச் சென்று,  'கடவுள் புன்னியத்தில எம் பிள்ளைக்கு எதுவும் ஆகாக்கூடாது'னு  மனதில் வேண்டி திருநீற்றைப் பூசி விட்டாள். அதற்குப் பின்  மீதி இரவு, அவனுக்கு சிவராத்திரி தான்.

                எழுந்து குளித்துவிட்டு வேலைக்குக் கிளம்பினான். பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் போது யதார்த்தாமாக எதிரில்  பார்த்தான். எட்டு மாடிக்கட்டடம் இவனை எதிர்பார்த்து நின்றது போல் இருந்தது. இவனுக்கு உடல் நடுங்கிவிட்டது. உடம்பெல்லாம் வேர்த்து விருவிருவித்துவிட்டது. அப்படியே பின்னாடி திரும்ப அவள் நின்று கொண்டிருந்தாள். அவ்வளவு தான் ஒரே ஓட்டம்.    'ஆத்தாடி! சுடிதார் போட்டு எமன் உருவத்தில்  வந்து நிக்கிறாளே?' னு மனசுல நினைத்துக்கொண்டு பின்னாடி திரும்பாம ஓடிக்கொண்டு இருந்தான் வீட்டை நோக்கி........

உலகம்





                        குழந்தைகளின் உலகம் விசித்திரமானது.கவலையில்லாமல் கனவுகளையும் விடாப்பிடிவாதத்தையும் தன் மனதில் வைத்துக்கொண்டு வாழ்கின்றவர்கள். அப்படிப்பட்ட குழந்தை தான் அகிலாவும். வயது 6,காலை வேளையில் பள்ளிக்கு வெள்ளைச் சீருடை அணிந்து வெண்புறா போல் சென்றாள் . 

                               அன்று அவள் தோழி ஷர்மிக்கு பிறந்தநாள். அகிலா வாழ்த்துக்களைக் கூற, தன் தந்தை வெளிநாட்டுப் பயணத்தின் போது வாங்கிய சாக்லேட்டைக் கொடுத்தாள் ஷர்மி. "ஏன் ஷர்மி இது வெளிநாட்டு சாக்லேட்டா, நீ வெளிநாட்டுக்கெல்லாம் போயிருக்கியா" என்று ஆதங்கத்துடன் கேட்டாள் அகிலா. ஷர்மியும் விளையாட்டுத்தனமாக கூறினாள், "ஆமா , நாங்க போன வருஷமே போனமே!". அவ்வளவுதான், அகிலாவிற்கு தொற்றிக்கொண்டது வெளிநாட்டு மோகம் . 

                   வீட்டிற்கு வந்த அவள் மூலையில் உட்கார்ந்தாள் கண்ணைக் கசக்கிக்கொண்டு. "என்னடி அழுகிற" என்று அம்மா மரகதம் கேட்க, "வெளிநாட்டிற்கு எப்பம்மா போவோம்" என்று அகிலா கேட்டாள். வந்தது கோபம் மரகதத்திற்கு, "ஏண்டி திமிரு பிடுச்சு போச்சா சாப்பாட்டுக்கே வழி இல்ல இதுல வெளிநாட்டுக்கு வேறயா" என்று பேசிவிட்டு தன் வேலையைக் கவனித்தாள். 


                            அகிலா அழுதுகொண்டிருக்க, அவள் அப்பா சண்முகம் வீட்டிற்குள் நுளைந்தான். விஷயம் தெரிந்தும் அகிலா மேல் உள்ள பற்றால் அடிக்காமல் அனைத்தான் மார்போடு. நள்ளிரவு 2 மணி அகிலாவிற்கு ஒரே காய்ச்சல் சும்மா  தீப்பிடிச்சு எரிஞ்ச மாதிரி இருந்தது உடம்பு. அந்த வேதனையோடும் புலம்பிக்கொண்டு இருந்தாள், வெளிநாட்டிற்கு போக வேண்டும் என்று .


                              அந்த நேரத்தில் அலரிக்கொண்டு டாக்டரிடம் காண்பித்தார்கள். அவர் "காய்ச்சலை குணப்படுத்துறது என் கையில ஆனா அகிலாவின் ஆசை உங்க கையிலதான்" என்று சொல்லிட்டாரு. ஊசிப் போட்டுக் கொண்டு, மாத்திரையும் வாங்கிவந்தர்கள். அவளும் எந்திருச்ச பாடுயில்ல. முடிவு பண்ணினான் சண்முகம், மனைவியிடம் பணம் பெற்றுக்கொண்டு போனவன் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் தவிச்சு போனாள் மரகதம். 

                         மாலை 6 மணி இருக்கும் ஒரு வழியா வந்தான் சண்முகம் கையில் பையுடன். அகிலாவை கூப்பிட்டான், "எந்திரிம்மா, அப்பா ஒனக்கு வெளிநாட்டைச் சுத்தி காட்றேன்" என்று  கூற, எந்திரிக்கவேயில்லை. அகில்லலலலானு.... கத்திட்டான். மரகதமும் கத்த வீடே சோகத்தில் மூழ்கியது. பையில் உள்ள பொருளை கையில் வைத்துக்கொண்டு அகிலா என்று சோகக் குரலில் மீண்டும் கூப்பிட, இமைகளை மெல்ல திறந்தாள் அகிலா. கையில் உலக உருண்டையை சுற்றிக்கொண்டு இருந்தான் சண்முகம்......... 

                  "அப்பா நம்ம இப்ப அமெரிக்கா போவோமா சர்ரு.. சர்ரு... சர்ரு".. அகிலாவும் சண்முகமும் அமெரிக்காவை அடைந்தார்கள் .. 

"அகிலா இப்ப நம்ம ஜப்பான் போகப்போறோம் .." என்று சண்முகம் சொல்ல ,

"அங்க வேணாம்ப்பா சுனாமியல்லாம் வரும்மாமே எங்க 

டீச்சர் சொன்னாங்க " .................


இப்படி, கனவு உலகில் பயணித்துக் கொண்டுயிருக்கிறார்கள்  அப்பாவும் மகளும் .
 
Copyright 2009 கதைக்களம். All rights reserved.
Free WordPress Themes Presented by EZwpthemes.
Bloggerized by Miss Dothy