RSS
Hello! Welcome to this blog. You can replace this welcome note thru Layout->Edit Html. Hope you like this nice template converted from wordpress to blogger.

வளர்த்த பிள்ளையும் வச்ச பிள்ளையும்




                        அப்பே ஆத்தா செத்துப் போயிட்டாலும், தன் தம்பி செல்வத்தை  நல்ல படியா படிக்க வச்சாரு கார்மேகம். கார்மேகத்துக்கும் துளசிக்கும் பிள்ளை பாக்கியம் இல்லையினு மருத்துவர் சொன்னாலும், தன் தம்பியையும் தன் இடத்தில வச்ச தென்னபிள்ளைகளையையும் தான், கொழந்தைய நினைச்சு வளர்த்தாரு கார்மேகம். துளசியும் தன் கொழுந்தன் மேல நல்ல பாசமா நடந்துக்கிட்டா. செல்வத்துக்கு கல்லூரி படிப்பும் முடிஞ்சது. பக்கத்து ஊரு மில்லுல கணக்காளார் வேலையும் கிடைச்சது. 

                            இதே ஊரைச் சேர்ந்த ஜெகனும், மில்லுல வேலைப் பார்த்தான். ஜெகன் அடிக்கடி மில்லில் பணத்தை எடுத்துவிட்டு கள்ளக் கணக்கை காண்பித்து வந்தான். செல்வம், ஜெகன் செஞ்ச மோசடியை அம்பலப்படுத்தினான். இதனால் மில் ஓனர் ஜெகனை வேலையை விட்டு நீக்கினாரு. செல்வம், ஜெகனின் பகையை வளர்த்துக்கிட்டான்.

                                தென்னம்பிள்ளைக்கு ஒரம் போடுறதும், ஒவ்வோரு நாளும் மறக்காமா தண்ணீர் விடுவதும், எதாவது  கன்டுவாடிப்போயிருந்தா அதனிடம் போயி நலம் வெசாரிப்பதும், என்று இதையே வழக்கமான வேலையாக வச்சுகிட்டு இருந்தாரு கார்மேகம். இப்படித்தான் ஒரு நா,  ஆடு தென்னம்பிள்ளையைக் கடிக்க,  ஆடு வளர்த்தவங்கள கேக்காத கேள்வி கேட்டு,இவரு அவுங்கள கடிச்சாரு.  எப்படியோ! அஞ்சு வருசத்துல தென்னம்பிள்ளை மரமா வளர்ந்து நின்னுச்சு.  

                                         அன்று ஒரு மரம் பாலை விட்டுருந்துச்சு. கொஞ்ச நாளிலே பூப்பூத்து காய் காய்த்துவிடும். ஒரு பெண் எப்படிப் பூப்படைகிறாளோ அது போலத்தான் தென்னமரம் பாலையிடுவது.  அதைப் பார்த்தவுடன் கார்மேகத்திற்கு ஆனந்த கண்ணீர் வந்திருச்சு. இந்த மகிழ்ச்சிய மனைவியிடமும், தம்பியிடமும் அக்கம் பக்கத்தினரிடமும் பகிர்ந்துக்கிட்டாரு.  ஆனா செல்வத்துக்குத் தோட்டந் தொரவு  மேல கொஞ்சம் கூட விருப்பம் கெடையாது. 

                                   வயசு இருப்பத்தேழு ஆனவுடன் தன் தம்பி செல்வத்துக்குப் பொண்ணுப் பார்க்க ஆரம்பிச்சாரு கார்மேகம். நடுத்தெருவில் வசிக்கும்  நாராயணன் தன் மகள எப்படியாவது செல்வத்துக்குக் கெட்டிக்கொடுத்துடனுமுனு நினைச்சான். கார்மேகம்த்திடம் பல முறை கேட்டும் ஒத்துக்கல. கார்மேகம், பக்கத்து ஊரு மில் ஓனர் பொண்ணு, பத்மாவ செல்வத்துக்கு பேசி முடிச்சாரு. அன்னையிலிருந்து நாராயணன் கார்மேகத்தை எதிரிய நினைக்க ஆரம்பிச்சான். எப்படியாவது செல்வத்தையும் கார்மேகத்தையும்  பிரிக்க முடிவு பண்ணினான். இவனுக்கு ஊரு வச்ச பேரு 'நாரதர்'. இவன் ஒரு எடத்திலிருந்தா,  அந்த எடத்தில கலகம் இல்லாம இருக்காது. ஊருக்குள்ளே எவனும் சந்தோசமா இருக்கிறது  இவனுக்குப் பிடிக்காது. 

                                      கல்யாணம் நடக்கத் தீவிர ஏற்பாடுகள் நடந்துகிட்டு இருந்துச்சு. கல்யாணக் கொட்டகை மேல யாருக்கும் தெரியாம, 'நாரதர்' தனது ஆளுகளிடம் தீயை வைக்க  சொல்ல, நன்றாகப் பத்திக்கிருச்சு. எதுவுமே தெரியாத மாதிரி வந்து, " கார்மேகம் தீப் பிடிக்குது ஒடியாங்க ஒடியாங்க "னு  கத்தினான். வேகமாக பக்கத்தில இருந்த தண்ணிய வச்சு தீய அனச்சாங்கா".  தாலி கட்ட வேண்டிய நேரத்துல இப்படி நடந்திருச்சேப்பா" என்று ஊரு பெரியவங்க முனுமுனுக்க ஆரம்பித்தனர் "எது நடந்தாலும் கல்யாணம் நடக்கும், போயி தாலியக் கெட்டுடா செல்வம்"னு கார்மேகம் சொல்ல, தாலியக் கட்டுனான் செல்வம். 

                                                முதன்முதலாக வீட்டிற்குள் செல்வமும்  பத்மாவும்  நுளைய, கரண்டு போயிடுச்சு. "என்ன நேரத்தில பொண்ணுப் பாத்தாங்களோ சகுனமே சரியில்லை இன்னும் என்னமெல்லாம் நடக்கப் போகுதோ" என்று மீண்டும் அந்தத் தெருவில் சிலர் பேசினார்கள். இருந்தாலும், துளசி எதுவும் நெனக்காம, "இந்த குடும்பத்து வாரிச   தழைக்க வைக்க  வந்த மகாலெட்சுமியே! வாமா"னு ஆளத்தி எடுத்தா. ஆனா பத்மாவின் செயல்பாடு வேறு விதமாக இருந்ததுச்சு.

                                     அவ்வப்போது தன் வேலையை கச்சிதமாகச் செஞ்சான் நாரதர். பத்மாவிடமும் செல்வத்திடமும் இல்லாத பொல்லாத விஷயங்களைச் சொல்லி கார்மேகத்தின்  மேல  வெறுப்பை உண்டாக்கினான். ஒரு நா நாரதர் செல்வத்தைப் பார்த்து, "மொத்த நாலு ஏக்கர்ல உனக்கு உள்ள ரெண்டு ஏக்கர நீ விக்கிறத இருந்தா, ஏக்கருக்கு நாலு  லெட்சம் கொடுத்து, நா வாங்கிக்கிறேன் என்ன சொல்லுருற" என்று செல்வத்திடம் சின்ன முடிச்சு போட்டுட்டுப் போயிட்டான். பத்மாவுக்கு இதுல உடன்பாடு இருந்துச்சு. பத்மா எவ்வழியே, செல்வமும் அவ்வழியே தான் .

                                                     செல்வம், கார்மேகத்திடம் போயிப் பேசினான். "அண்ணே, நான் தனியாப் போயிக்கிறோம்ண்ணே,  பத்மா நல்ல வசதியா வாழ்ந்தவ, அவளுக்கு  இங்க இருக்கப் புடிக்கல. எனக்கு வேண்டிய சொத்தப் பிரிச்சு கொடுத்துடுங்கண்ணே"னு சொன்னவுடன் கார்மேகத்துக்குத் தலையில இடி விழுந்த மாதிரி போச்சு. "இதுக்காகத்தான உன்னை வளத்து படிக்க வச்சமா"னு   கார்மேகம் கேட்க, அவனுக்கு எங்கிருந்து தைரியம் வந்ததோ," அண்ணே இது ஒன்னும் ஒங்க சொத்தில்ல, நம்ம தாத்தா சொத்து. நா ஏம் பங்கத்தான கேக்குறேன்"னு கேட்டவுடன் கார்மேகம் கண்ணீல் கண்ணீர்த்துளிகள். துளசி மனசும் நொந்து போச்சு.  அப்பொழுதும் தம்பி கேட்டதை தட்டிக்கழிக்காம ரெண்டு ஏக்கரும் அவனுக்கு சேர வேண்டிய வீட்டையும் பிரிச்சுக் கொடுத்தாரு கார்மேகம். செல்வமும், பத்மாவும் , வீட்டையும் தோப்பையும் விற்கிறவரைக்கும் இங்கேயே இருந்தாங்க.

                                              நாரதர், கார்மேகத்தை மேலும்  துன்பப்படுத்த, அடுத்த காயை நகர்த்தினான். "தம்பீ! செல்வம்  தென்னமரத்த வச்சு நா என்ன பண்ண, வெறும் இடமா வேணுமுனா கொடு  வாங்கிக்கிறேன்"னு சொல்லிட்டான்.  அடுத்த கட்ட வேலையில் இறங்கினான் செல்வம். 

                                            ரெண்டு ஏக்கருல உள்ள நூத்தி முப்பது மரத்தை அப்புறப்படுத்த செல்வத்தோட ஆளுக புல்டவுசரையும், ஜெ சி பி யையும் , கோடரியும் கொண்டு வந்தாங்க. இதைப் பார்த்தவுடன் பதறியடிச்சுக்கிட்டு ஒடியாந்தான் கார்மேகம். அக்கம் பக்கத்தில இருந்த ஊர் பெரியமனுசர்களும் வந்து விட்டார்கள். கார்மேகம் செல்வத்தைப் பார்த்து, "செல்வம், இத வளக்க பட்டபாட்டை கண்ணு முன்னாடிப் பாத்துட்டும், எப்படிடா அழிக்க, மனசு வந்துச்சு"னு கேட்க, "ஏ எடம் என்னவேணாலும் செய்வேன் உங்களுக்கு கேக்க உரிமையில்ல" னு சொல்லிட்டு கோடரிய எடுத்து ஒரு மரத்தை வெட்ட ஆரம்பிச்சான். வந்தது கோபம் கார்மேகத்திற்கு, இன்ன அடின்னு இல்ல.  இது நாள் வரைக்கும் தன் தம்பிய இப்படி அடிச்சதே இல்ல. அடிச்சாலும்  "தெரியாம அடிச்சிட்டேன்டா  மன்னிச்சுகோட"னு சொல்ல, "நா ஒன்ன கோர்ட்ல பாத்துக்கிறேனு " சொல்லிட்டு அந்த இடத்தை விட்டுக் கிளம்பினான் செல்வம்.

                                          நாரதர் இறுதிக் காயை நகர்த்த ஆரம்பிச்சான். இதற்கு  ஜெகனை ஆயுதமாகப் பயன்படுத்தினான். ஜெகனிடம்  அருவாளைக் கொடுத்து , "செல்வம் ஆத்துல குளிச்சுக்கிட்டு இருக்கான் வர்ற வழியில அவனை முடிச்சுட்டு வா, பலிய கார்மேகத்து மேல போட்டுக்கெல்லாம்"னு நாரதர்  சொல்ல, சொன்ன படியே செய்தான் ஜெகன்.

                                                   நாரதர் கார்மேகத்தை சந்திச்சு, "மில்லுல ஏதோ, பிரச்னை போல  அதனால உங்க தம்பிய கொலை பண்ண,   ஜெகன் ஆத்துபக்கமா போயிக்கிட்டு இருக்கான்"னு சொன்னாவுடன், கார்மேகம் பக்கத்தில கிடந்த அருவாவ கையில் எடுத்துக்கிட்டு ஓடினாரு  ஆத்தாங்கரையை நோக்கி.

                                                               ஒழிந்து கொண்டு இருந்தான் ஜெகன். குளித்து விட்டு கரையிலிருந்து இறங்கினான் செல்வம். அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத சமயம். செல்வத்தை எதிர்நோக்கியிருந்த ஜெகன், அருவாளை எடுத்து ஓங்க செல்வம் விழிப்பாக இருந்ததால், தலையில் வெட்ட வேண்டியது, கையில் பட்டது. இரத்தம்  கொட்டுகொட்டுனு கொட்டியது.  கார்மேகம், "செல்வம் .......... "னு கத்திக்கொண்டு ஒடியாந்தான். ஜெகன் அருவாவை எடுத்துக்கொண்டு கருவேலங்காட்டிற்குள் மறைந்தான்.  இரத்தம் அதிகமாக வெளியேறிதால் மயக்கம் அடைந்தான். தன் தம்பியை தோள்பட்டையில் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிலே கொண்டுபோய்ச் சேர்த்தாரு கார்மேகம். 

                                                               விஷயம் தெரிந்து துளசி, பத்மா, மற்றும் ஊர்க்காரங்க ஆஸ்பத்திரிக்கு வந்தாங்க. அப்ப, "சொந்தந்தான் விட்டுப் போயிரும்மா, இல்ல தலைய சொரிஞ்ச சுழி தான் அழிஞ்சு போகுமா? ரத்தப் பாசமய்யா! எப்படியிருந்தாலும்  தம்பிய  காப்பத்திட்டான்ல கார்மேகம்" என்று ஊர்க்காரர்கள் பேசிக்கிட்டு இருந்தனர்.

                                           படுத்திருந்த செல்வம் கண் விழிச்சான். எதிரே கார்மேகம் உட்கார்ந்திருந்தாரு.  "அண்ணே உனக்கு இவ்வளவு கெடுதல் பண்ணியும்  என்னக் காப்பாத்திட்டீயே! என்ன மன்னிச்சுடுண்ணே!" என்று செல்வம் சொல்ல, "நீ என்ன பேசுறதுனாலையோ திட்டினனாலையோ எனக்கு கோபம் வரல, தென்ன மரத்த வெட்டினியே  அதுதான் வருத்தம், உனக்கு ஒன்னுனா நா இருக்கேன், எனக்கு ஒன்னுனா நீ இருக்க, பாவம் எந்த வலியையும் சொல்லத்தெரியாத தென்னமரங்களுக்கு யார் இருக்கா?" னு கண்ணீர் மழ்க பேசினாரு கார்மேகம். தன் தவறை உணர்ந்தான் செல்வம்.பத்மாவும் மன்னிப்புக்கேட்டாள்.

                                               "எந்தச் சம்பவம்னாலும் நாரதர் வந்துடுவானே! எங்கப்பா ஆளக்காணோம்" னு ஊர்காரர் ஒருவர் சொன்னவுடன். சொன்ன நிமிசத்தில்,"நல்ல வேளை கார்மேகத்துக்கிட்ட நா சொல்லைனா? செல்வத்துக்கு என்ன ஆயிருக்கும்?" என்று  பேசிய படியே நாரதர் உள்ளே வந்தான். நாரதரை முறைத்துப் பார்த்தான் செல்வம்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Copyright 2009 கதைக்களம். All rights reserved.
Free WordPress Themes Presented by EZwpthemes.
Bloggerized by Miss Dothy