RSS
Hello! Welcome to this blog. You can replace this welcome note thru Layout->Edit Html. Hope you like this nice template converted from wordpress to blogger.

அறிவு மணியும் அழகு மீனாட்சியும்




                         மார்கழிமாதம், காலை வேளையில் படர்ந்திருந்த பனிக்கும் அஸ்தமித்த சூரியனுக்கும் சத்தம் இல்லாமல் யுத்தம் நடந்து கொண்டிருந்த நேரம். அப்பொழுது பிறந்து பத்துநாளே ஆன நாய்க்குட்டி,  வீட்டிற்கு வெளியே தாழ்வாரத்தில், குளிரில்நடுங்கி கத்திக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த லெட்சுமி விருவிருவென்று வீட்டிற்குள் சென்று, மயிலுக்கு போர்வை போர்த்திய பேகனைப்போல நாய்க்குட்டிக்கு தனது போர்வையை எடுத்து போர்த்திவிட்டாள்.  அப்படி போர்த்தியும், நாய்க்குட்டிக்கு குளிர் குறைந்த மாதிரி தெரியவில்லை. பனிக்கும் சூரியனுக்கும் நடந்த யுத்தம் சில மணி நேர போராட்டத்திற்குப் பிறகு முடிவுக்கு வந்தது. சூரியன் வெற்றி பெற்றான். நாய்க்குட்டியும் முற்றிலுமாக குளிரிலிருந்து மீண்டது. 


                     போர்வையை விலக்கிய நாய்க்குட்டி மெதுவாக தவழ்ந்து வீட்டிற்குள் வர, லெட்சுமிக்கு மகிழ்ச்சி தாங்கல. "இங்க பாருங்க நம்ம நாகுட்டி நடக்குது" என்று தன் கணவர் கருப்பையாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். மாறாக கருப்பையா " அடிச்சீ வெளிய போ நாயே"னு அதட்ட, "அவரு கெடக்கிறாரு நீ வா மணி "னு செல்லமாகக் கூப்பிட்டு குழந்தையை தோளில் தூக்குவது போல தன் தோளில் தூக்கி கொஞ்சிக்கொண்டாள். லெட்சுமி செல்லமாக மணி என்று கூப்பிட்ட பெயரே பின்னர் நாய்க்குட்டிக்கு நிரந்தரப் பெயராக மாறிப் போயிற்று.

                        கருப்பையா யாரிடமும் அன்பாக நடந்து கொண்டது கிடையாது. சும்மாவே கோபமான ஆளு. மணி மேலயும் கோபமடைவதற்குக் காரணம், ராஜபாளையத்தில் வேலை பார்க்கிற மகன் கார்த்தி, மணியை இரண்டாயிரம்ரூபாய் கொடுத்து வாங்கியது தான். இதனாலேயே அப்பனுக்கும் மகனுக்கும் சண்டை. "கஷ்டப்பட்டு படிக்கவச்சு வேலை வாங்கிக் கொடுத்தா? எனக்கு ஒத்தப்பைசா தரமாட்டிங்கிறான், ரெண்டாயிரம் போட்டு நாயை வாங்கிருக்கான் நாய"னு பக்கத்து வீட்டு ராமசாமியிடம் சில நாளைக்கு முன்பு புலம்பினார் கருப்பையா. பதிலுக்கு ராமசாமியும் "என் பயனும் இப்படிதான் வாங்கி வச்சுருக்கான்"னு புலம்பினார்.


                            கருப்பு வித்தியாசமான நாய். பிறந்து ஆறு மாதம் இருக்கும். குட்டியில் இருந்தே கட்டிப்போட்டு வளர்க்க தவறிவிட்டார்கள்.  தெருவில் போகிறவர்களை விடாது.யாரையாவது கடித்தால் பஞ்சாயத்துக்காக ராமசாமியை நாடுவார்கள்."என் பையன் நாள நான் கண்ட நாய்களுக்க்கிட்ட வசவுவாங்க வேண்டிருக்கு"னு தலையில் அடித்துக்கொள்வார்.

                            மணி பசியால் துடித்துக்கொண்டிருந்தது. லெட்சுமி பசும்பாலைக் காய்ச்சி அதற்கு என்று தனியாக ஒரு தட்டு ஏற்பாடுசெய்து அதில் பாலை ஊற்றிவைத்தாள். மணிக்கு குடிக்கத்தெரியாமல் தவித்துக்கொண்டு இருந்தது. லெட்சுமிக்கு ஒரு யோசனை வந்தது. தன் பேத்தி கீர்த்தியின் பால்பாட்டிலை எடுத்து, அதை நன்றாக நீரால்அலசி, அதில் பாலை ஊற்றிக்கொடுக்க, முதலில் குடிக்கத் தடுமாறியது பின்பு வச்ச வாயை எடுக்கல. பாலை குடித்து முடித்துவிட்டு லெட்சுமியைப் பார்த்தது. அது பார்த்த பார்வை "எனக்கு இன்னொரு பாட்டில் வேணும்" என்பது போல இருந்தது.


                      ஒரு முறை அலைபேசியில் லெட்சுமியிடம், "என்னம்மா மணி என்னபண்ணுது, நல்லாயிருக்கா" என்று நலம் விசாரித்தான் கார்த்தி. இவளும் பதிலுக்கு மருமகள் ஜெயாவையும் பேத்தி கீர்த்தியையும் நலம் விசாரித்தாள். 


                      ஒரு நாள், லெட்சுமி வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக்கொண்டு இருந்தாள். மணி உறக்கத்தில் இருந்து எழுந்து வெளியே வந்து, சிமெண்ட் ரோட்டைக் கடந்து, மணற்பாங்கான இடத்தில் காலைக்கடனை முடித்துக்கொண்டிருந்தது. அதை எதார்த்தமாக லெட்சுமி பார்க்க, "அக்காவ் மணிக்கு எம்புட்டு அறிவு பாத்தீங்களா" என்று எதிர்த்த வீட்டு இல்லத்தரசியிடம் கூற, "நீ வளக்கிற பிள்ளையா இருந்தாலும் சரி நாயா இருந்தாலும் சரி எல்லாம் ஒழுக்கமா இருக்குதுக.எங்க வீட்ல அப்படியா" என்று தன் வீட்டின் நிலைமையை நினைத்து புலம்பினாள் எதிர் வீட்டுக்காரி. மணியை தூக்கி, "அறிவுமணி வந்துருங்க ஏ செல்லம் வந்துருங்க "என்று கொஞ்சிக்கொண்டே லெட்சுமி வீட்டிற்குள் போக, எதிரில் கருப்பையா . " இந்த வீட்ல நாயிக்கு குடுக்கிற மரியாத கூட மனுசனுக்கு இல்ல" னு தன் தோளில் போட்ட துண்டை உதறிவிட்டு வெளியே சென்றார். 



                 மணி வந்த ஆறே மாதத்தில் கம்பீரமாக வளர்ந்து நின்றது. மணியையும் கட்டிப்போட்டு வளர்க்கவில்லை என்றாலும் கருப்பு மாதிரி யாரு வம்புக்கும் சண்டைக்கும் போகாது. தெருவில் புதிதானவர்கள் வந்தால் மட்டுமே குரைக்கும். இதன் குணத்தை அறிந்த அந்தத் தெருவில் வசிப்பவர்கள் "இது ராஜபாளையத்து நாயிதானா?  சந்தேகமா இருக்கே" என்று கிண்டல் அடிப்பார்கள்.


                          கீர்த்தியும் நல்லா பேச ஆரம்பித்துவிட்டாள். கீர்த்தியின் பேச்சுதான் இப்பயெல்லாம் ஜெயாவுக்கு பொழுதுபோக்கு. கீர்த்தியிடம் மணியைப் பற்றி அவ்வப்பொழுது சொல்லிக்கொடுப்பாள் ஜெயா. இதை கேட்ட கீர்த்தியின் மனதில் மணியின் நினைப்பு பச்சமரத்தில் அடித்த ஆணியைப் போல் ஆழமாக பதிந்துவிட்டது. ஒரு நாள் சாப்பிட முரண்டுபிடித்தாள் கீர்த்தி. "மணியைப் பாக்கனுமா இல்லையா சாப்புட்டாதான் மணிக்கிட்டா கூட்டிட்டு போவேன்"னு ஜெயா சொல்ல. கடகடனு சாப்பிட்டு முடித்தாள் கீர்த்தி. பிறகு, "நா மணியப் பாக்கனும் மணிட்ட இப்பவே கூட்டிட்டு போ"னு அடம்பிடித்து அழுக ஆரம்பித்து விட்டாள். ஜெயா எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. ஆபிஸ் முடிந்து வந்த கார்த்தி அழுகைமுகமாக இருந்த கீர்த்தியப்பார்த்தவுடன்,காரணம் அறிந்து "அடுத்து ஊருக்குப் போரப்ப நிச்சயம் அப்பா உன்னை கூட்டிட்டுப் போவனாம்" என்று சொல்லி சமாதானப்ப்டுத்தினான்.

                        டங்..டுங்..டிங்.. என்று பாத்திரம் உருட்டும் சத்தங்களைக் கேட்டு அடுப்பறைக்கு போய்ப் பார்த்தாள் லெட்சுமி. நான்கு ஐந்து எலிகள் கபடி ஆடிக்கொண்டு இருந்தது. லெட்சுமி போகவே ஆட்டம் களைந்தது. ஒரு எலி லெட்சுமியின் காலுக்குள் வர அம்மா...என்று அலரிவிட்டாள். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு கருப்பையாவும் பதறிப்போய் ஓடி வந்து,. "எலிக்குத்தான் இம்புட்டுப் பயமாடி நான் கூட பாம்புனு நினைச்சேன்"னு  நக்கலடித்தார்.


                         லெட்சுமி தினந்தோறும் அலைபேசியில் கார்த்தியிடம் பேசிக்கொள்வது வழக்கம். கார்த்தியிடம் பேசிய பின்னர், பேத்தி கீர்த்தியிடம் பேசினாள் லெட்சுமி. . "மணிட்ட பேச்சனும் போன குடு அப்த்தா "னு கீர்த்தி பேசின பேச்சக் கேட்டுவிட்டு லெட்சுமிக்கு என்ன செய்வதுதென்று தெரியவில்லை. பேத்தியை சமாளிக்க கருப்பையாவிடம் அலைபேசியை கொடுத்து, "பேத்திக்கிட்ட நம்ம மணி மாதிரி பேசுங்க"னு சொல்ல, லெட்சுமியை முறைத்துப் பார்த்துக்கொண்டு வெறுப்புடன் பேசினார். 



"வவ் வவ் ..நான் மணி பேசுறேன் நீங்க யாரு பேசுறா ..வவ் வவ் "



"என்ன மணி எங்கத் தாத்தா மாறி பேச்சுற " 


"நான் தாத்தா இல்ல வவ் மணிதான் பேசுறேன்" 

" அப்டியா மணி சாப்ட்டியா,அப்த்தாவ நல்லா பாத்துக்கனும் என்னா?"

"சரிங்க வவ் வவ் .." 

"சரி மணி தூக்க தூக்கமா வர்து நாளக்கி பேச்சுவோமா " 

என்று மணியுடன் பேசிய மகிழ்ச்சியுடன் படுக்கச்சென்றால் கீர்த்தி. கருப்பையா, எந்த மணியை வெறுத்தாறோ இப்பொழுது பேத்திக்காக மணி மாதிரி வேஷம் போடவேண்டியதா போச்சு.

       இந்த மாதிரி ஒவ்வொரு நாளும் கீர்த்தியை சமாளிக்க வேண்டியிருந்தது கருப்பையாவுக்கு.

                  கீர்த்திக்கு, மணியைப் பார்க்கும் வாய்ப்பு வந்துவிட்டது. அத்தை மகன் சுரேஷின் திருமணத்திற்காக அடுத்த மாதம் ஊருக்குச் செல்லும்போது கூட்டிக்கொண்டு போவதாக கார்த்தி வாக்குறுதி அளித்தான். 


              ஒருநாள் வீட்டிற்குள் நாற்றம் தாங்கவில்லை. "எங்கயோ எலி செத்துக்கிடக்குப் போல" என்று கருப்பையாவும் லெட்சுமியும் தேடினார்கள்.கண்டுபிடித்தப் பாடில்லை. "ஓட்டு வீடு என்பதால எந்த இடத்தில எலிமாட்டியிருக்கோ"னு கருப்பையா புலம்பிக்கொண்டே இருந்தார்.  செத்த எலி, முகட்டு இடுக்கில் சிக்கிக்கொண்டு இருந்ததைப் பார்த்து, ஒரு வழியாக எலியை வெளியேற்றி விட்டார்கள். நாற்றம் மட்டும் அடித்துக்கொண்டே இருந்தது. எலியின் தொந்தரவுக்கு முடிவுகட்ட திட்டத்தை தீட்டினாள் லெட்சுமி.



               அந்தத்திட்டம் மணிக்கு அதிர்ச்சியாக இருந்தது. லெட்சுமி,கிராமத்திற்குப் போயிட்டு வர்றப்ப மீனாட்சிங்கிற பூனையை கொண்டு வந்தாள்.   மீனாட்சியின் உடம்பு உலவம் பஞ்சை ஒட்டவைத்த மாதிரி மென்மையாகவும், முயல் குட்டி மாதிரி, வெள்ளைவெளேர்னு அவ்வளவு அழகாகவும் இருந்தது. அதன் இரண்டு கண்களையும் பார்க்கும் போது ஐஸ்வர்யாராயின் கண்கள் தான் மீனாட்சிக்கு இருக்கா? இல்லை மீனாட்சியின் கண்களைத்தான் ஐஸ்வர்யாராய் நகல் எடுத்து ஒட்டிக்கொண்டாளோ என்ற உணர்வு வரும். வயலினால் வாசித்தால் எப்படி ஒரு இசை வெளிவருமோ அப்படி இருந்தது மீனாட்சியின் மியாவ் மியாவ் சத்தம்.


                            மீனாட்சி வந்ததும் கருப்பையாவுக்குப் பிடிக்கவில்லை. பூனை குறுக்க வந்தாலே காரியம் உருப்படாதுனு நினைப்பவர். எதோ எலி தொந்தரவுகளிலிருந்து தப்புவதற்குக்காக மீனாட்சி வீட்டில் வளர்க்க ஒத்துக்கொண்டார்.



                        மணி, மீனாட்சியை முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தது."எனக்குப் போட்டியா வந்துட்டில"னு கூறியது போல் இருந்தது அது பார்த்தப் பார்வை. இப்ப அதன் நோக்கமெல்லாம் எப்படியாவது மீனாட்சியை வீட்டில இருந்து துரத்த வேண்டும். ஒரு முறை மீனாட்சி வீட்டிற்கு வெளிய வந்து எட்டிப்பார்க்க,  மணி தன் வாயால் கவ்வியது. லெட்சுமி பார்த்து அதட்டியதால் மீனாட்சிக்கு மறுஜென்மம் கிடைத்தது.



                          மணிக்கும் மீனாட்சிக்கும் பஞ்சாயத்துப் பண்ணவே லெட்சுமிக்கு நேரம் சரியாக இருந்தது. அது மட்டுமல்லாமல் கருப்பையா வேற,  பூனை பேலுவதற்கும், லெட்சுமி மீனாட்சியை செல்லமாக தூக்கும் போதெல்லாம் "முடி மூக்குக்குள் போனா ஆஸ்த்துமா வந்து தொலைச்சுரும்டி" என்று கூறியும் லெட்சுமியிடம் சதா சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்.


                      கருப்பையா, அன்று காலையில் தூக்கத்தில் இருந்து எந்திரிக்க, பக்கத்தில் இரத்தம் சொட்டு சொட்டாக இருப்பதைப் பார்த்தார். அதைப்பார்த்தவுடன் அவருக்கு அதிர்ச்சியாக போயிற்று. இரத்தச் சொட்டுக்கள் எங்கே முடிகிறது என்று பின்னாலயேபோயிப் பார்த்தார். முடிந்த இடத்தில், எலியை தன் வாயால் கடித்து தின்றுகொண்டிருந்தது மீனாட்சி. எலியை கொண்டுவிட்டதுல கருப்பையாவுக்கு சந்தோஷம். இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கல.

                          மீனாட்சி வீட்டைவிட்டு வெளியே வந்து தெருவில் ஓட, விரட்டியது கருப்பு. பின்தொடர்ந்து சென்றது மணி. மீனாட்சியை கருப்பு வாயால் கவ்விக்கொண்டு ஓடியது. அதுவரை மீனாட்சியை எதிரியாக நினைத்த மணி, இப்ப மனதில் என்ன நினைத்ததோ கருப்புவிடம் சண்டைப்போட்டு மீனாட்சியை மீட்டு வீட்டுக்குள் கொண்டுவந்து சேர்த்தது.

                        அன்றுமுதல் இருவரும் நண்பர்களாக மாறி விட்டார்கள். இப்பயெல்லாம் மீனாட்சிக்கு மணிஉடம்புதான் மெத்தை மாதிரி. மணி மேல் மீனாட்சி படுத்துக்கிடந்தைப் பார்த்துக்கொண்டிருந்த லெட்சுமி மகிழ்ச்சியின் உச்சத்தைத் தொட்டாள். அன்று லெட்சுமி பால் வாங்கப் போனாள். லெட்சுமியின் வலது பக்கம் மணியும், இடது பக்கம் மீனாட்சியும் பாதுகாவலர்களாகச் சென்றார்கள். "எதோ மகாராணிக்குப் பின்னாடி பூனைப்படையும் நாய்ப்படையும் போற மாதிரில இருக்கு"  என்று அந்த தெருவில் உள்ளவர்கள் பேசிக்கொண்டது லெட்சுமியின் காதில் விழுந்தது. அவர்களின் கண் திருஷ்டியைப் போக்க, அன்று இரவே கற்பூறம் வாங்கி மணிக்கும் மீனாட்சிக்கும் மூன்று சுத்துசுத்தி வீட்டிற்கு வெளியே முச்சந்தியில் பற்ற வைத்தாள். அதைப் பார்த்த கருப்பையா ,"நானும் ஒருத்தன் இந்த வீட்டில இருக்கிறேன்டி " என்பதைபோல் லெட்சுமியைப் முறைத்துப் பார்த்தான். 

           நள்ளிரவு மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. வெகுநேரமாகியும் வரவில்லை. லெட்சுமிக்கு வேர்த்து ஊற்றிவிட்டது. காற்றாட தாழ்வாரத்தில் போய்ப் படுத்தாள். கால்மாட்டில் மணியும் தலைமாட்டில் மீனாட்சியும் வந்து படுத்தது. மீனாட்சியிடம் கொர்.. கொர்.. என்ற சத்தம் வெளிப்பட்டது. பூனைகள் பொதுவாக யாரிடம் அன்பு அதிகமாக வைத்துள்ளதோ அவர்களிடம் மட்டும் தான் இப்படிச் சத்தம் போடுமாம். மீனாட்சியின் கொர் கொர் என்ற சத்தம், லெட்சுமியின் மேல் வைத்துள்ள அன்பின் அடையாளத்தையே காட்டியது.

                    கார்த்தி இந்த முறை லெட்சுமியிடம் அலைபேசியில்,"மணியும் மீனாட்சியும் எப்படி இருக்கிறது" என்று பேசிக்கொண்டிருக்கும்போது பின்னால் செவியின் அருகே சென்று, அலைபேசி ஒட்டுகேட்பைக் கையாண்டாள் கீர்த்தி.  கார்த்தி பேசிமுடித்துவிட்டு அலைபேசியை வைக்க. கீர்த்தி கேட்டாள் ஒரு கேள்வி. " மீனாட்சி யாருப்பா?. அவ்வளவு தான். மீனாட்சி பற்றிய ரகசியங்கள் அம்பலமானது. மணியுடன் பேச வேண்டும் என்கிற என்னத்தை மறந்து, மீனாட்சியின் பக்கம் இடம் மாறினாள்.

                            இரவு ஒரு மணி இருக்கும், கீர்த்தி கண்விழித்தாள். தூங்கிக்கொண்டிருந்த கார்த்தியைத் தட்டி எழுப்பினாள். "அப்பா மீனாச்சிட்ட பேச்சனும் போனப்போட்டு குடு" என்று கீர்த்தி கூற,  மகள் மேல் உள்ள அன்பால் "மீனாட்சி தூங்கியிருக்கும், காலையில் பேசிக்கெலாம் போயிப்படுமா" என்று சாந்தமாகக் கூறி படுக்க வைத்தான். 

                             சற்று நேரத்தில் ம்ம்.....ம்ம்ம் ....ம்ம்ம்ம்... என்ற அழுகின்ற குரல் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.  சத்தத்தைக் கேட்டு எந்திரித்தான் கார்த்தி.  கீர்த்தியின் விழிகளில் கண்ணீர் துளிகள்.  எந்திரித்த அவள், "அப்பா மீனாச்சிட்ட் பேச்சனும் ....."  என்று திரும்ப திரும்ப கேட்க மனம் இறங்கினான் கார்த்தி. 

                             அந்த நள்ளிரவில் லெட்சுமிக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டான் கார்த்தி. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து பதறி எழுந்து " ஆத்தாடி ஏ மவனுக்கிட்ட இருந்துல போனு வருது" என்று பேச ஆரம்பித்தாள் லெட்சுமி.  பேத்தியின் விருப்பத்தை நிறைவேற்ற உச்ச கனவில் உறங்கிக்கொண்டிருந்த கருப்பையாவை எழுப்பினாள். 

               " இந்தாங்க போனு நம்ம பேத்தி கீர்த்தி பேசுறா,மீனாட்சிக்கிட்ட பேசனுமுனு அடம்பிடிக்கிறாளாம் கோவுச்சுக்காம மீனாட்சி பேசுற மாதிரி பேசுங்க" 

                           தூக்கம் களைந்த விரக்தியில், "இதுக்கு முன்னாடி நாய் வேஷம் இப்ப பூனையா? மொத நாயும் பூனையும் வீட்டில் இருந்தாத் தானடி நைட்டு ரெண்டு மணிக்கு பேசச் சொல்லிவிங்க. விடியட்டும் காலையில பாத்துக்கிறேன்"  னு லெட்சுமியப்பார்த்து பேசிவிட்டு பேத்தியிடம் பேசினார் கருப்பையா.

" மியாவ் ... மியாவ் ...யாரு பேசுறா நான் மீனாட்சி பேசுறேன் நீங்க யாரு "

" நா கீர்த்தி பேச்சுறேன், உன்னப் பாக்கனும் போல இருக்கு மீனாச்சி,நீ எப்டி இருப்ப "

" முயல்குட்டி மாதிரி இருப்பேன் ,நீ எப்படி இருப்ப மியாவ் " 

"எங்க அப்த்தா மாறி இருப்பனாம் ஜெயா சொல்லுவா"

"அப்படியா மியாவ் "

" சரி எங்கப்பத்தாவ வையக்கூடாதுனு தாத்தாக்கிட்ட சொல்லுவியா"

" சரி மியாவ் " என்று பேசி முடித்தார் கருப்பையா.

                   பேத்தி பேசுன பேச்சுதான் இரவு முழுவதும் கருப்பையாவின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. "பேத்திக்கூட நம்மல இப்படிப் புரிஞ்சு வச்சுருக்கே " னு கவலை இருந்தாலும், சின்னப்பிள்ளை சொன்னதிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்று எண்ணி, "இனி மேலாவது லெட்சுமியிடம் கோவப்படக்கூடாது"னு முடிவு பண்ணினார்.

                  காலையில் வெகுநேரமாகியும் தூக்கத்திலிருந்து எந்திரிக்கவில்லை கருப்பையா. காரணம் இரவு நீண்ட நேரம் கழித்து உறங்கியது தான். மணிக்கும் மீனாட்சிக்கும் தெரியாம பலசரக்கு வாங்க லெட்சுமி, கடைக்குச் சென்றுவிட்டாள். மணி வீட்டிற்கு வெளியே படுத்திருந்தது. மீனாட்சி, எலியை வேட்டை ஆட வீட்டின் முகட்டில் காத்து இருந்தது. 

                              வீட்டின் பின்புறமாக ஜன்னல் வழியே ஒரு நல்ல பாம்பு உள்ளே வர, மேலே இருந்த மீனாட்சி அதைப் பார்த்துவிட, மியாவ் மியாவ் ...என்று கத்திக்கொண்டு கீழே இறங்க, பாம்பு கருப்பையாவின் தலைக்கு நேராக வந்து நின்றது. 

                         மீனாட்சி கத்தின சத்தத்தில் மணி உள்ளே ஆஜர் ஆனது. மணி பாம்பின் தலையைக்கடிக்க, மீனாட்சி பாம்பின் வாலைக்கடித்தது. மணி,மீனாட்சி போட்ட சத்தங்கள் கருப்பையாவின் செவியைப் பதம் பார்த்தது. சட்டென்று எந்திரித்த கருப்பையா என்ன நடந்தது என்றரியாமல் "ச்சீ.. போங்க தூங்க விடுதுகளா மனுசனை " என்று மணியையும் மீனாட்சியையும் விரட்டியடித்தார் . 

                            பின்பு பார்த்தார், அந்த அறைமுழுவதும் ரத்தத்தால் கோலம் போட்டது மாதிரி இருந்தது. எலியைத்தான் கொண்டு இருக்குமென்று மெல்ல எந்திரித்தார். எதார்த்தமாக தலைமாட்டில் பார்க்க துண்டிக்கப்பட்ட பாம்பின் தலை, சிறிது உயிர் இருக்குமோ என்னவோ மெதுவாக நகர்ந்தது. அதைப் பக்கத்தில் இருந்த கம்பியால் அடித்து வெளியே தூக்கிப்போட்டார்.

                         வெளியே இருந்த மணியையும் மீனாட்சியையும் பார்த்தவுடன் " ஏ உசுர காப்பத்துனா சாமிக வந்துருங்க "னு கட்டிப்பிடித்து ஆனந்தக்கண்ணீர் விட்டார் கருப்பையா. ரெண்டையும் கருப்பையா கொஞ்சிக்கொண்டிருந்தைப் பார்த்தவுடன் " இது இவரு தானா " என்ற சந்தேகமும் லெட்சுமிக்கு வந்தது. நேற்று வரை மணிமேலேயும் மீனாட்சிமேலேயும் இருந்த கோபம் கருப்பையாவுக்கு இன்றுடன் முடிவுக்கு வந்தது. 

                     பக்கத்துவீட்டு ராமசாமியின் நாய் கருப்பு, தெருவில் போகிறவர்களை கடிப்பதும் கடிபட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதும் ராமசாமிக்கு வழக்கமாகி விட்டன. இந்த முறை கருப்பு, வார்டு கவுன்சிலர் மகனை தொடையில் கடித்துவிட, ராமசாமியை கவுன்சிலர் இன்ன கேள்வி என்று இல்லாமல் கேட்டுவிட்டார். வாய்ச்சண்டையில் ஆரம்பித்த சண்டை முடிவில் அடிதடியில் முடிந்தது. அந்தத் தெருவில் உள்ளவர்கள் சண்டையை விலக்கிவிட்டார்கள்.

                             இந்தத் தொந்தரவிலிருந்து தப்பிக்க, வீட்டில்வைத்திருந்த சங்கிலியை எடுத்து கருப்பை கட்டிப்போட்டார் ராமசாமி. " நீயெல்லாம ஒரு நாயி து..மணி மூத்தரத்தை வாங்கி குடிச்சாலும் உனக்கெல்லாம் புத்தி வராது, கறிக்கு ஆசைப்படுற உன்னால எத்தன பேத்துக்கிட்ட வசவு வாங்கிறது" என்று திட்டித்தீர்த்துவிட்டார் ராமசாமி. "என்னையா கட்டிப்போடுற " னு சொன்ன மாதிரி கருப்பு சங்கிலியை அத்துக்கொண்டு ஒரே ஓட்டம்.

                                    இப்பயெல்லாம் கருப்பையாவுக்கு, மணியும் மீனாட்சியும் விளையாடுகிற விளையாட்டைப் பார்ப்பது தான் பொழுது போக்கு. 

                  சுரேஷின் திருமணம் காரைக்குடியில் நடப்பதால் கார்த்தி,ஜெயா,கீர்த்தி மூன்று பேரும் ராஜபாளைத்தில் இருந்து அப்படியே அங்கு சென்று விட்டனர்.  மணியையும் மீனாட்சியையும் விட்டுட்டுப் போக லெட்சுமிக்கும் கருப்பையாவுக்கும் மனமில்லாமல் எதிர் விட்டுக்காரியிடம் " மணியையும் மீனாட்சியையும் பத்திரமா பாத்துக்குங்க நாளக்கழிச்சு வந்துருவோம் " என்று சொல்லிவிட்டு காரைக்குடி சென்றனர்.

                                      சுரேஷின் திருமணம் நல்லபடியாக முடிந்தது. அனைவரும் ஒன்றாக வீட்டுக்குத் திரும்பினார்கள். கீர்த்தி பேருந்தில் வந்த களைப்பில் கார்த்தியின் தோள்பட்டையில் உறங்கிக்கொண்டிருந்தாள் . மணியையும் மீனாட்சியையும் பார்க்கிற ஆர்வம் கார்த்தியிடமும் ஜெயாவிடமும் தெரிந்தது.

                            எதிர் வீட்டுக்காரியைப் பார்த்தார்கள் ஆள் இல்லை. வெளியே தாழ்வாரத்தில் மணியைப் பார்த்தார்கள் காணவில்லை. அந்த இடத்தில் மீனாட்சி படுத்திருந்தது. இவர்களைப் பார்த்தவுடன் மியாவ்.. மியாவ் ..என்ற கத்தி கூப்பாடு போட்டுவிட்டது. "அதான் அம்மா வந்துட்டுன்ல ஏ இப்படி கத்துற " என்ற சொன்ன படியே வீட்டின் கதவை திறந்தாள் லெட்சுமி. மீனாட்சி கத்திக்கொண்டே லெட்சுமியின் கால்களை சுற்றிக்கொண்டே வந்தது. மணி ..எங்க போச்சு, மணி.. மணி......  " என்று அக்கம் பக்கத்தில் தேடினார் கருப்பையா. பாயை விரித்து கீர்த்தியை படுக்கவைத்தனர் கார்த்தியும் ஜெயாவும்.               

                        அந்தப்பக்கமாக வந்த ராமசாமியப் பார்த்தார் கருப்பையா."ஏப்பா ராமசாமி மணியப் பாத்திய " என்று கேட்க. ராமசாமி தயக்கத்துடன் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு கூறினான் " ஊருல ரேபிஸ் நோய் பரவிவருதுனு சொல்லி பேரூராட்சியிலிருந்து, லைசன்ஸ் இல்லாத அம்புட்டு நாயயையும், ஊசிப்போட்டு கொண்டுப்போட்டாங்கண்ணே"னு சொல்லி முடிக்க. " என்னது மணி செத்துப்போச்சா ஏ மணியை கொண்ட சண்டாளன் யாரு"னு கதறி அழுதுவிட்டார் கருப்பையா. அதைக் கேட்ட லெட்சுமி "அய்யய்யோ......."னு நெஞ்சில் அடித்துக்கொண்டு கீழே விழுந்து அழுது புலம்பிட்டாள். சமாதானப்படுத்தினர் கார்த்தியும் ஜெயாவும்.   

                             "அம்புட்டுக்கும் நம்ம கவுன்சிலர் சண்முகம் தான் ணே காரணம், கருப்ப பலிவாங்கனுமுனு நினைச்சு மணியையும் கொண்டுப்புட்டானே" னு ராமசாமி சொல்ல. " யாரச்சொல்லி என்ன பண்றது இனி மணி வரவாப் போகுது "னு தன் மனதை தேற்றிக்கொண்டார் கருப்பையா. மீனாட்சியை, லெட்சுமி பார்த்து,"மீனாட்சி மணி செத்துப்போச்சுனு சொல்லுறதுக்குத்தானா? அப்படிக் கத்துகத்துனு கத்துன " னு சொல்லி மீனாட்சிய கட்டிப்பிடித்து அழுதாள்.

                               கீர்த்தி உறக்கத்தில் இருந்து கண்விழித்தாள். அனைவரும் சோகத்தில் அமர்ந்திருந்தார்கள். எந்திரித்து மெதுவாக வெளியே வந்தாள். தாழ்வாரத்தில் மீனாட்சி படுத்திருந்ததது. மீனாட்சி எப்டி இருக்க நா தான் கீர்த்தி, போனுல பேச்சுவோம்ல " என்று கீர்த்தி மீனாட்சியைப் பார்த்து பேசினாள். மீனாட்சி அமைதி காத்தது. "தாத்தா என்னோட மீனாச்சி பேச்ச மாட்டிங்குது "  என்று கருப்பையாவைப் பார்த்து கேட்க,  "மணி ஊருக்குப் போயிருச்சுல அந்த  வருத்தத்தில தான் மீனாட்சி பேச மாட்டிங்குது " என்று மணி இறந்ததை மறைத்துப்பேசி இப்போதும் சமாளித்தார் கருப்பையா.

                          அன்று இரவு சாப்பிட யாருக்கும் மனது வரவில்லை. கீர்த்திக்கு மட்டும் கடையில் இரண்டு இட்லியும் பாலையும் வாங்கிக்கொடுத்து படுக்கவைத்தார்கள்.  கீர்த்திக்கு கொடுத்தது போக மீதிப் பாலை மீனாட்சிக்கு தட்டில் ஊற்றி வைத்தாள் லெட்சுமி. பாலைக் கண்டாலே சும்மா கப்புகப்புனு அடிக்கிற மீனாட்சி முகர்ந்து கூட பார்க்காம லெட்சுமியின் முகத்தைப் பார்த்தது. "உங்களுக்கு மட்டும் தானா சோகம் எனக்கு இல்லையா?" என்பதுபோல் இருந்தது அதன் பார்வை.

                            கீர்த்தி, காலையில் ஊருக்குப் போகுமுன் மீனாட்சியிடம் போயி மீண்டும் பேசினாள். அப்போதும் மெளனத்தை கடைப்பிடித்தது. முடிவாக பேசினாள், "என்கிட்ட பேச்சமாட்டிங்கிறில உன்னோடு கா. நீ யா வந்து பேச்சினாத்தான் இனி உங்கிட்ட பேச்சுவேன்" னு சொல்லிட்டு திரும்ப, கீர்த்தியின் பாவடையை தன் பல்லால் கடித்து இழுத்த மீனாட்சி அதன் மொழியால் பேசியது "மியாவ்... மியாவ்....." என்று.

தொட்டில் குழந்தை

              செல்வி வறுமையில பிச்சை எடுக்க ஆரம்பிச்சா, காலச் சூழ்நிலைநால நிரந்திரத் தொழிலா வச்சுக்கிட்டா. அழுக்குச் சீல, கிழிஞ்ச சாக்கெட் உடம்புல உடுத்தி இருந்தாலும் முக லட்சணமா இருப்பா. இவமுகத்தப் பார்த்துப் பிச்சைப் போட்டவங்க தான் அதிகம்.  வெள்ளி,செவ்வாய் கோயில்களிலும் மற்ற நாளுல தெருவுலையும் பிச்சை எடுப்பா. சில சமயம் யாரவது சாப்பாடு போட்டாலும் வாங்கிக்குவா.


            செல்வி மேல ஒரு கண்ணு, சாமிக்கன்னுக்கு. தன் வீட்டுக்குப் பிச்சை எடுக்க வரும் போதெல்லாம் மிச்சம் மீதி சாப்பாட்டை போடுவான். மனிதபிமானத்தில இல்ல அவளை அடையுனுங்கிற ஆசையில. சாமிக்கண்ணு பொண்டாட்டி சித்ராவும் சாப்பாடு போடுறதுக்கு ஒன்னும் சொல்ல மாட்டா.  செல்வி மேல மட்டும் இல்லை யாரு உதவினு கேட்டாலும் செய்யுறதுல்ல பாரி வள்ளல். எப்படா? வாய்ப்பு வாருமுனு காத்துக்கிட்டு இருந்தான் சாமிக்கன்னு.



                வாய்ப்பும் வந்துச்சு. தன் மனைவி வெளியூர் போன சமயம். "உங்க அக்கா வீட்டில இல்ல ஏகப்பட்ட சோறு மிச்சமாப் போச்சு வந்தா வீட்டுப்பக்கம் வாமா " என்று ரோட்டில பார்த்து சாமிக்கண்ணு சொல்ல, அதையும் நம்பி வீட்டுக்கு போனாள் செல்வி. வயிறு நிறைய சாப்பிட போனவளுக்கு வயிறுல விதையை விதச்சு அனுப்பிவிட்டான். ஒவ்வொரு மாதமும் கடக்க செல்வி வயிற்றுல விதைச்ச விதை மொளைக்க ஆரம்பிருச்சு. ஊருக்குள்ள யாரும் இப்ப பிச்சை போடுறது இல்ல. "எவனுக்கிட்டயே போயி வகுத்த நிறைச்சுக்கிட்டு வந்துட்டா" னு சொல்லி யாரும் சாப்பாடும் போறதுமில்ல, காசும் கொடுக்கிறதுமில்ல. கோயில போடுற சாப்பாடும், தெருக்குழாய் நீரும் தான் இப்போதைக்கு அவள் பசியை ஆத்துச்சு. 


              அன்று இரவு செல்விக்கு இடுப்பு வலி வந்துருச்சு. எந்தப் பிரச்சனையும் இல்லாம               பெத்து எடுத்தா ஆம்புளப் பிள்ளையை. குழந்தைக்குப் பசி தாங்காம கத்த, தன் மார்புகளால் பால் கொடுத்தா செல்வி. சட்டியில இருந்தத்தான அகப்பையில வரும்ங்கிற மாதிரி ஆயிடுச்சு செல்வி பால்கொடுத்த கதை. ஊருக்குள்ள இவளப் பத்தி தப்பா பேசுனாங்களைத் தவிர யாரும் உதவி செய்ய முன் வரல.  "உன்னை வளத்து இதுக்கு மேல ஒரு பாவத்தை சாம்பாதிக்க விரும்பல" னு சொல்லி தன் குழந்தையை பிள்ளையார் கோவில் அருகே ரோட்டு ஓரமா இருக்கிற குப்பைத்தொட்டிக்கிட்ட போட்டுட்டு நடைபிணமா நடக்க ஆரம்பிச்சா. பசி தாங்காம குழந்தை கத்துனது, மழையில்லாம தவிச்ச பயிரப் போல இருந்தது. 


            கொஞ்ச நேரத்தில், அந்த ரோட்டில் ஒரு காரு வந்து நின்றது. பக்கத்தில இருக்கிற பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட, காருல இருந்து இறங்கினாங்க ரெண்டு பேரு. அப்படியே கோயிலுக்குள் சென்றனர். எதோ சத்தம் கேட்குதுனு காருக்குள்ள இருந்த பப்பி நாய் வெளியே எட்டிப்பார்த்துச்சு குப்பைத் தொட்டியை நோக்கி. 


காருக்குள் இருந்த பப்பி நாயி கீழ் இறங்கி குப்பைத்தொட்டியில் இருக்கும் குழந்தையின் அருகே சென்று குழந்தை அழுவதை பார்த்துக் கொண்டிருந்த்து. கோவிலில் இருந்து திரும்பிய அந்த ரெண்டு பேரும் காருக்குள்ள பப்பி நாயக் காணமுனு தேடிப் பார்க்க, குப்பைத் தொட்டிக்கு அருகே இருப்பதைக் கண்டு பெரு மூச்சு விட்டனர்.

எப்பவும் கூப்பிட்டவுடன் வரும் பப்பி பலமுறை கூப்பிட்டும் வரவில்லை. ஆதலால் தொட்டிக்கு அருகிலேயே சென்று இருவரும் வற்புறுத்தித் தூக்கிட்டு வந்தனர். காரில் ஏறும் வரை பப்பி நாய், அந்தக்குழந்தையை பார்த்துக்கொண்டே இருந்தது .



பூமாலை



        ஒரு பை நிறைய ரோஜாவும் மற்றோரு பையில் கனகாமரமும், மல்லிகையையும் தூக்கிக்கொண்டு பூஞ்சோலை கிராம பஸ்டாப்பில் இறங்கினான் பூவரசன். மயில்தோகையாக இருந்தாலும் கட்ட வண்டியில அதிகமாக ஏத்துனா வண்டி அச்சானி  எப்படி முறியுமோ அது மாதிரி பூவரசன் தோள்பட்டையும் முறிஞ்சு போன மாதிரி ஒரு வலி .


           பூ விற்பவர்களின் பொழப்பு கட்டு கம்பியில் நிற்கிறமாதிரி. கல்யாணம், கேதம், தேர்தல், கோயில் திருவிழா அப்ப மட்டும் தான் இவர்களுக்கு வாழ்க்கை.



                   வீட்டிற்கு வந்ததும் இறக்கி வைத்தாள் அவன் மனைவி கல்யாணி. "நெஞ்சு வலிக்குது கொஞ்சம் தண்ணி கொடுமா? என்று வாங்கி குடித்தான் பூவரசன். ஊருக்குள்ளே ஒரே கொட்டு சத்தம் ட்ர்ங்ட்ட.. ட்ர்ங்ட்ட ..ட்ர்ங்ட்ட.. ட்ர்ங்ட்ட ..என்று. அந்த வழியாகப் போன கொத்தனார் துரை பூவரசனைப் பார்த்து, "என்னப்பா இன்னைக்கு உங்க காட்டில் மழை தான், தெற்க்குத்தெரு ஆறுமுகம் செத்துட்டாரு போல" என்று கூற, "என்னைக்கும் மத்தவுங்க செத்து நாங்க வாழனுமுனு நினைக்க மாட்டோம்ப்பா" துரையிடம் வருதத்துடன் கூறினான் பூவரசன். "சும்மா தமாசுக்கு சொன்னேன்"னு கிழம்பினான்" துரை. 


              துரை பேசியதை பூவரசனின் மகன் ராஜா பார்த்துக்கொண்டு இருந்தான். "ஏப்பா , ஆறுமுகத் தாத்தா செத்ததுல நமக்கு நிறைய மாலை விக்கிமுல" . "விற்கும்பா ஆனா நம்ம அப்படி நினைக்க கூடாது " என்று சொல்ல, அதை காதிலேயே வாங்கல ராஜா .


               எதிர்த்த வீடு தாத்தாவைப் பார்த்த ராஜா, "ஆறுமுகத் தாத்தா போயிட்டாரு நீ எப்ப தாத்தா போற" என்று நக்கலாக கேட்டான் ராஜா. "நமீதாவுடன் போட்டா எடுக்காமா இந்தக் கட்டை போகாது"னு சொல்லிட்டாரு போட்டா தாத்தா. இந்த ஊருக்கு சூட்டிங் வருகிற எல்லாம் நடிகைகளிடம் போட்டா எடுத்து வீட்டில மாட்டி அழகு பார்ப்பாரு. அதனாலயே அவரு பேரு போட்டா தாத்தா.


                   அன்று நவம்பர் 14, பக்கத்து ஊருல விளையட்டுப்போட்டி. டாட்டா காட்டி வழி அனுப்பி வச்சாங்க பூவரசுனும் கல்யாணியும். போட்டி முடிந்ததும் கையில பதக்கத்தோடு இறங்கினான் பேருந்தில் இருந்து. ஊருக்குள்ள மீண்டும் கொட்டுச்சத்தம் ட்ர்ங்ட்ட.. ட்ர்ங்ட்ட என்று. ராஜாவுக்கு ஒரே சந்தோஷம், அவன் கால்கள் குத்தட்டம் போட்டது. "பாவம் போட்டா தத்தா போயிட்டாரு அய்யா ஜாலி நம்ம அப்பாவுக்கு நிறைய மாலை விக்கிமுல" ..என்று மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு அருகில் வந்தான்.


               சங்குச் சத்தம் முழங்க, கொட்டுச்சத்தம் அதிகரிக்க, இவன் நடையின் வேகம் குறைய, பெண்கள் கதறல் சத்தத்தின் மத்தியில் இவனின் அன்னை கல்யாணி அழுதுகொண்டு இருக்க, பூவரசனைச் சேரில் உட்காரவைத்திருந்தார்கள் பூமாலைகளைப்போட்டு.
 
Copyright 2009 கதைக்களம். All rights reserved.
Free WordPress Themes Presented by EZwpthemes.
Bloggerized by Miss Dothy