RSS
Hello! Welcome to this blog. You can replace this welcome note thru Layout->Edit Html. Hope you like this nice template converted from wordpress to blogger.

காதல் வந்திருச்சு



நேர்முகத்தேர்வு காலை 10 மணிக்குத்தான். ஆனால் காலை 6 மணிக்கே  அவன் ஆஜார் ஆனான் .  இடைப்பட்ட நான்குமணிநேரத்தைஅருகில் உள்ள தேநீர்கடையில் செய்தித்தாள்கள் படித்தும், தேநீர் அருந்தியும், அங்கும் மிங்கும் நடந்தும் கொண்டும், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை ரசித்து கொண்டும் நேரத்தைப் போக்கினான்.

 சென்னையில் கோடிஸ்வரர்கள் குடி இருந்தாலும் சாமனிய மனிதர்களும் வசிப்பதை உணர்ந்தான். வீடு இல்லாமல், தார்பாயைக்கூரையாக அமைத்து, உடுத்திய ஆடையை இறுக்கப் போர்த்திக்கொண்டு,  படுத்தவர்களைப் பார்த்து மனம் உருகினான். அதில் ஒரு முதியவர்  உடுத்திய ஆடை விலகி அசிங்கமாக இருந்ததை கண்டு சரி செய்தான்.  யாரோ அவள் ? அவனின் நடவடிக்கையை ஓராக் கண்ணால் பார்த்து விட்டுச் சென்றாள்.     

நேர்முகத்தேர்வில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே  இருந்தது.  
அந்த நேரத்தில் அவள் வந்தாள். அழகான முகம், குள்ளமான ஆளு, அசட்டுச்சிரிப்பு, வெகுளித்தனமான பேச்சு … அந்தக் கூட்டத்தில் அவன் பார்வைக்கு,  தனியாகத் தெரிந்தாள்.
டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் தேர்வானவர்களை உள்ளே அழைக்க, புற்றிலிருந்து ஈசல் வெளிப்பட்டதை போல் முந்திஅடித்துகொண்டு உள்ளே சென்றனர். அப்போது தான் தெரிந்தது நாட்டில் இருக்கும் வேலையின்மைப் பற்றி.

எப்படியாவது பேச வேண்டும் அவளுடன் பழக வேண்டும் அவனின் எண்ணங்கள் ஓட்டமிட்டது. தன் கையில் கட்டிருந்த வாட்சை அவிழ்த்து சட்டைப்பையில் மறைத்து கேட்டான், ‘என்னங்க மணி எத்தனை’?

கேட்டவுடன் இவனின் இதயத் துடிப்பு, கடிகாரத்தில் இருக்கும் நொடி முள்ளை விட பன்மடங்கு வேகம் காட்டியது.
அவள் பதில் சொன்னாள்.

‘மணி 10 ஆச்சு உள்ள வாங்கனு அழைச்சாங்களே கேட்கல?’ என்றாள்.

‘இல்ல நா கவனிக்கல’ என்றான்.

அவள் அடுத்த வார்த்தை பேசும் முன்,
‘உங்க பேரு’ என்று பேச ஆரம்பித்து  இறுதியில் முடிந்தது அவள் வீட்டு முற்றுச் சுவர் வரை.

 ‘நீங்க நல்ல பேசுறீங்க’ என்றாள்.

‘நீங்களும் தான்’ என்றான் .

‘நமது பழக்கம் இதோடு போக்கூடாது மறக்காம உங்க கல்யாணத்துக்குக் கூப்பிடனும்’ என்று சிரித்துகொண்டே  சொன்னாள்.

அவன் இதயத்தில் பறந்த பட்டாம்பூச்சிகள் அவள் உச்சரித்த வார்த்தைகளைக் கேட்டு அங்கிருந்து இடம்பெயர்ந்தது.
என்ன சொல்லவதென்று அறியாமல் பேயடித்தது போல நின்றான்.

‘என்னங்க நா எதுவும் தப்பா சொல்லிட்டேனா?’ என்றாள்.

இல்ல ….இல்ல…… என்று சொல்லி அவனின் நா நடித்தது.

சிறிது நேரம் கழித்து மீண்டும் பழைய நிலையை அடைந்தான்.

‘உங்க செல் நம்பர் கிடைக்குமா’ என்றான்.

‘எதுக்கு’ என்று ஒரு முறைப்புடன் கேட்டாள்.

‘கல்யாணம் வச்சா உங்களுக்கு சொல்லனும்ல அதான்.

கல்யாணத்துக்கு வருவீங்களா?’

கோபமாக இருந்த அவளின் முகத்தில் சந்தோஷம் சங்கமித்தது.

‘நிச்சயம் வருவேன். கல்யாண மண்டபத்தில பஸ்ட் ரோவுல பஸ்ட் சேர்  எனக்குத்தான்.  இன்டர்வியு நல்ல பண்ணுங்க ஆல் தி பெஸ்ட் ’என்று கூறி புன்னகை பூத்தாள்.  

நேர்முகத்தேர்வு முடிந்தது. கலந்தாய்வுக்கு இன்னும் இரண்டு வாரங்கள். அப்போது தான் இனி அவளைப் பார்க்க முடியும். ஆதலால் அவளுக்காக கேட்டின் வெளியே காத்திருந்தான். எத்தனையோ பெண்கள் கடந்து சென்றும் அவள் மட்டும் வரல. ஒரு வேளை சீக்கிரம் இன்டர்வியூ முடிஞ்சு போயிட்டாளோ?  சரி இனிக்  கிளம்புவோம் ‘ என அரை மனசுடன் கிளம்பினான் .

ஊருக்கு வந்ததிலிருந்து  அவளைப்  பற்றிய நினைவலைகள் அவன் இதயத்தில் அவ்வப்போது மோதியது. 
ஆனால் அவளுக்கோ அவனைப் பற்றிய  நினைப்போ வேற எண்ணங்களோ தோன்றல. ஜாலியாகத் தன் தோட்டச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றியும்,  செல்லமாய் நினைக்கும் நாயுடன் விளையாடிக்கொண்டும் பொழுதைப் போக்கினாள்.   

அச்சமயத்தில் பாரதி   தன் கல்யாணத்திற்கு, பத்திரிக்கை வைப்பதற்காக  அவள் வீட்டிற்கு  வந்திருந்தாள்.
பாரதி அவளின் அம்மாவைப் பார்த்து , ‘நீங்க அவசியம் கல்யாணத்திற்கு வரணும் அப்பாவையும் கூட்டிட்டு வந்திருங்க’ என்று அன்பு ததும்ப அழைத்தாள்.
‘கட்டாயம் குடும்பத்தோட வர்றேம்மா கல்யாண மண்டபத்தில மொதவரிசையிலிருந்து ஒங்கல்யாணத்தைப் பாப்போம் சரியா?’

பாரதியிடம்  அவள் அம்மா கூறிய இந்த வார்த்தைகள் அவளின் செவியில் சட்டென்று விழுந்தது. அந்த வார்த்தைகளைக் கேட்டதிலிருந்து நினைவுழந்தாள். அவன் நினைப்பில் ஆழ்ந்தாள்.
 ‘ போயிட்டு வர்றேண்டி  சிந்தனயெல்லாம்  வேற எங்கேயோ இருக்கு போல…. இவளுக்கும் கால காலத்தில கல்யாணத்தைப் பண்ணிவைங்கம்மா ‘ என்று  பாரதி தன் பங்குக்கு பற்றவைத்து சென்றாள்.    

 அன்று இரவே கவுன்சிலிங்காக சென்னை கிளம்பினாள். பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்தாள்.  சில்லென்று வாடைக்காற்று அடித்தது. குளிர் தாங்காமல் அருகில் உள்ள குழந்தை அழ, ஜன்னலை அடைத்தாள்.  அவள் அந்தக் குழந்தையின் பஞ்சு போன்ற மிருதுவான பிஞ்சு விரல்களைத் தடவிப் பார்த்தாள். தூக்கி விளையாடினாள். கொஞ்சினாள், நெற்றியில் முத்தமிட்டாள். அழுகைச் சத்தம் குறைந்தது. குழந்தை சிரித்தது.  ‘இங்க பாரு ..பெத்த அம்மா எனக்கிட்ட இருக்க அழுகிறேன்  உன் கிட்ட சமத்த இருக்கிறானே! ‘ ……. என்று பேசிய அந்த குழந்தையின் அம்மா பேச்சில் ஒரு பொறாமை தெரிந்தது.  ‘ அவளும் பொம்பள தான, கொழந்தைப் பாசம் இருக்காத பின்னே ..‘ என்று  சகபயணியின் பேச்சு  வேற.  

  சென்னை வந்தவுடன் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்திற்கு விரைந்து வந்தாள்.  வெகு நேரமாக அவளின்  விழிகள் அங்குமிங்கும் நோட்டமிட்டது.

‘காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்’ என்ற பாடல் அருகில் உள்ள தேநீர் கடையில் ஒலித்துக்கொண்டிருக்க, அவன் அவள் முன் தோன்றினான்.

‘யாரையோ தேடுறீங்க போல’ என்று அவன் கேட்க
அவளிடமிருந்து, தென்றல் காற்றைப் போல வார்த்தைகள் மெல்ல வந்தன.

‘உங்களைத் தான்’…..

'எதுக்கு தேடுனீங்கனு தெரிஞ்சுக்கலமா? 

‘உங்க கல்யாணத்திற்கு என்னைக் கூப்டிருந்தீங்க. சாரி ….என்னால பஸ்ட் ரோவுல  உட்காந்து பார்க்க முடியாது அந்த நிலைமைல நா இருக்கேன் …..’

‘ஏன் என்னாச்சு…. ’  

‘ஏன்னா அன்னைக்கு உங்க பக்கத்தில்  மணப்பெண்ணா நா  உட்காரும் போது எப்படி பஸ்ட்ரோவில  உட்காந்து கல்யாணத்தைப்பார்க்க முடியும் ‘ என்று அவள் சொல்லி முடிக்க, 

 உடம்பு சிலிர்த்தது, கண்ணீல் ஆனந்தக் கண்ணீர் வர எங்கையோ பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சிகள் மீண்டும் அவன் இதயத்தில் குடிஅமர்ந்தது.

 
Copyright 2009 கதைக்களம். All rights reserved.
Free WordPress Themes Presented by EZwpthemes.
Bloggerized by Miss Dothy