RSS
Hello! Welcome to this blog. You can replace this welcome note thru Layout->Edit Html. Hope you like this nice template converted from wordpress to blogger.

வைகை எக்ஸ்பிரஸ்


           

         


                                                  மதுரையிலிருந்து எழும்பூர் செல்லும் வைகை எக்ஸ்பிரஸ், காலை மணி 6.45 ஆனவுடன் டடக் ..டடக்..டடக் ..டடக்.. சத்தத்துடன்  என்ற மெதுவாக கிளம்பியது. குரு, ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் அவசரமாக ஏறி தனது இருக்கையில் அமர்ந்தான். அந்த இடம் நடுவில் அமைந்துவிட்டது. பக்கத்தில் இருந்தவர்கள் இரண்டு பேரும் முதியவர்கள். இடதுபக்கத்தில் இருப்பவரைப் பார்க்கும் போது சாப்பாட்டுக்குக் கவலை இல்லாதவர் மாதிரி நன்கு தடித்து இருந்தார். வலது பக்கத்தில் இருப்பவரைப் பார்க்கும்போது குளித்தால் அழுக்குப் போயிரும் என்ற கவலையில் அப்படியே வந்துவிட்டார் போலத் தெரிந்தது. இவர்களின் இரண்டு பேருக்கும் இடையில் சிக்கித் தவித்துவிட்டான் குரு. அது மட்டுமல்லாமல் எதிரே இருந்த மூன்று பேரில் இரண்டு பாட்டிகள். குருவுக்கு இந்தச் சூழ்நிலை நெருப்பின் மேல் அமர்ந்து பயணம் செய்த மாதிரியே இருந்தது. ஆறுதலாக மூன்றாவதாக அமர்ந்த பெண்மனி கையில் நான்கு வயது பையனுடன் அமர்ந்திருந்தாள். அந்தப்பையன் சற்று சுட்டித்தனம் பன்னுவான்போல, அவள் அம்மா அடித்தஅடியால் கண்ணைக் கசக்கிக்கொண்டு இருந்தான். 

                                டிடிஆர் டிக்கெட்டைச் சரி பார்த்தவுடன் அங்கு உள்ளவர்கள் சிலர் இடம்மாறிக் கொண்டார்கள். "பாட்டி நீ இங்க வா ஜன்னல்பக்கத்தில உட்காந்துக்கிறே"னு சொல்லி ஒரு இளம்பெண் குருவுக்கு அருகில் வர, ஜன்னல் ஒரத்தில் உடகார்ந்திருந்த பாட்டி எழுந்தவுடன், அந்த இடத்தில் அமர்ந்தாள் அந்தப் பெண். "கவிதா பாத்து இருந்துக்கோமா" னு சொல்லி அவள் இருந்த இடத்திற்கே சென்றாள் அவளின் பாட்டி. அவள்முகம் பவுணர்மி நிலவில் பதிக்கப்பட்ட மாதிரி அவ்வளவு அழகாக இருந்தாள். இப்ப, குருவின்பார்வை கவிதாவின் மேல் விழுந்தது. இவளுக்கு கவிதா என்று பெயர் வைத்ததற்குப் பதிலாகக் கவிதை என்று வைத்திருக்கலாம்" என்று மனதில் நினைத்தான். இப்போது ரயில் பயணம் அவனுக்கு பூக்களின் மேல் அமர்ந்து பயணம் செய்த மாதிரி இருந்தது.

                      தை மாதத் தரைப்பனியை விலக்கிய ரயில், கொடை ரோட்டைக் கடந்தது. கதிரவனின் ஒளி கவிதாவின் கன்னத்தில்அடிக்க, முறைத்துப் பார்த்தான் கதிரவனை. "ஏ கதிரவனே நீ மட்டும் அருகில் இருந்தால் உன்னை நான் அறைந்திருப்பேன்" என்று நினைத்தது போல் இருந்தது அவனின் முறைப்பு. தன்னை ஒருவன் பார்க்கிறான் என்பதை உணர்ந்தவுடன் முகம் சுழித்தால். சற்று நிமிடத்திலேயே அந்தஇடத்தை விட்டு அகன்று மீண்டும் பழைய இடத்திலே போய்அமர்ந்தாள். "இந்த வயசான காலத்தில் ஏண்டி இப்படிப் பாடாப்படுத்திரே"னு சத்தம் போட்டாள் கவிதாவின் பாட்டி. வெறுப்புடன் குரு, மீண்டும் நெருப்பின்மேல் அமர்ந்து பயணிக்க ஆரம்பித்தான்.

                      பொழுது போகாமல் எழுந்தஅவன், ரயில் பெட்டிப் படிக்கட்டில் நின்று இயற்கையை ரசித்துக் கொண்டு இருந்தான்.ஒரு வளைவில் ரயில்முழுவதையும் பார்க்கும் போது சீனப்பெருஞ்சுவருக்கு சக்கரம் கட்டி தண்டவாளத்தில் ஓடவிட்டா எப்படியோ, அப்படி இருந்தது ரயிலின் ஓட்டம்.

                         திண்டுக்கல்லில் ரயில் நின்றது. "சென்னையில இருந்து வர்றவண்டி கிராஸ் பண்ணிப்போரதால ரயில்கிளம்ப இன்னும் பத்துநிமிஷம் ஆகும் போல" என்று சிலர் பேசிக்கொண்டார்கள். இவனுக்கு வயிறு கலங்கியது. ரயில்பெட்டியின் கழிப்பறைக்குப் போகாமல் திண்டுக்கல் ஜங்ஷனில் இருந்த கழிப்பறைக்கு ஓடினான். 
                             ரயில் கிளம்பியது. வண்டியின் வேகம் அதிகரிக்க அவசரமாக ஓடிவந்து ஏறினான் குரு. "ஏப்பா தம்பி எங்க போன" என்று தடித்தமுதியவர் கேட்க, "டாய்லெட்டுக்குப் போனேன் அதான் லேட்டா ஆயிடுச்சு"னு குரு சொன்னான். "நல்ல ஆளுய்யா ரயிலேயே இருக்கிறப்ப அங்கே எதுக்குப்போன" ,"இல்லய்யா ரொம்ப அவசரம். இங்க போனா ஜங்ஷனில் தான் விழும் நிறையபேரு வந்துபோர இடம், அத கிளின் பன்றவுங்களும் பாவம் மனுஷங்கதான அதனாலதாய்யா அங்கபோனேன் "னு சொன்னதக் கேட்டவுடன், அந்த பெரியவர் " படிச்சப் பிள்ளைகள்உங்கள் மாதிரி ஆளுங்கக்கிட்டதாய்யா நாங்க கத்துக்கிறனும் ,எங்களுக்குஅந்தக்கூறுவாறெல்லாம் தெரியாது "னு சொல்லி முடித்தார். பக்கத்தில் இருந்தவர்களுக்கு குருவின் மேல் ஒரு நல்லமதிப்பு உண்டானது.

                    பிச்சை எடுக்கிறத தொழிலா வச்சு பிழைப்பவர்கள் இன்னமும் ஒழிந்த பாடில்லை. ஒருவன் லுங்கியை ஏத்திக் கட்டிக்கொண்டு எப்பவோ தொடையில் ஏற்பட்ட காயத்தழும்பைக் காட்டி பிச்சைக் கேட்டுக்கொண்டு வந்தான். குரு எழுந்து "உழைச்சு பிழைக்களைனாலும் ஒழுக்கமா பிச்சை எடுய்யா"னு சொல்லி தன்கையால் அவன் லுங்கியைச் சரி செய்தான். இந்த "மாதிரி ஆளுங்க இருக்கிறவரைக்கும் இந்தியா உருப்படாது"னு சொன்னார் அழுக்குமுதியவர். பிச்சைஎடுக்க வந்தவன் குருவை முறைத்துப்பார்த்துக் கொண்டே சென்றான்.

                                    "விஜி எனக்கு சாக்லெட் வேனும்" னு அடம் பிடித்தான் குருவிற்கு எதிரில் இருந்த அந்தச் சின்னப்பையன். அவன் அவனுடைய அம்மாவ பேரு சொல்லி கூப்பிடுவது வழக்கம்போல. "ராகுல், சாக்லெட் தின்னா பூச்சி கடிக்கும் உதைவாங்கப்போற பாரு" என்று விஜி அதட்ட,மதுரையில் நண்பன் திருமணத்தில் கொடுத்த சாக்லெட்டை தன் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுத்து ராகுலை நண்பனாக்கிட்டான் குரு.

                          ரயிலில் உணவுப்பொட்டலம் விற்பவர்களும், சிறு வியாபாரிகளும், பிச்சை எடுப்பவர்களும், அப்பப்ப வந்து சென்றார்கள். ஒரு பார்வை தெரியாதச்சிறுவன் " எது எடுத்தாலும் பத்து ரூபா... எது எடுத்தாலும் பத்து ரூபா.." என்று சத்தம்போட்டு விற்றுக்கொண்டே ரயிலில் தடுமாறி வந்தான். பத்துரூபாயிக்காக அவன் கொடுக்கும் பொருள்கள் ஒரு பால்பயிண்ட்பென்,பென்சில்,ரப்பர்,ஸ்கேல் இவை அனைத்தும் ஒரு சின்ன பாக்ஸில் அடைத்திருந்தது. தன்னை யாரும் ஏமாற்றிவிடக் கூடாது என்பதாலோ என்னவோ இப்படி வைத்திருக்கிறான் போல. அவன் ஒருவரிடம் ,"வாங்கிங்க சார் ப்ளீஸ் பத்துரூபாதான் .." என்று திரும்பத்திரும்பக் கேட்டான் ."எனக்கு என்னத்துக்குத் தம்பி வேனும்னா இந்தப் பத்து ரூபாய செலவுக்கு வச்சுக்கோ"னு சொல்ல. "நான் உழைச்சு சம்பாரிக்கனுமுனு நினைக்கிறேன் சார் என்ன பிச்சைக்காரன ஆக்கிடாதீங்க"னு சொன்னது அவர்முகத்தில் அடித்தமாதிரி போயிற்று.
                         "தம்பி இங்க வா"னு கூப்பிட்ட குரு, அனைத்தையும் வாங்கிக்கொண்டு இருநூறு ரூபாயைக் கொடுத்தான் அந்தப் பார்வையில்லாச்சிறுவனிடம். வேண்டாம் என்று சொன்னவரும், அதில் இருந்து ஒரு பாக்ஸை வாங்கிக் கொண்டார். வாங்கியதை அந்தப் பெட்டியில் உள்ள அனைவருக்கும் கொடுத்தான் குரு. கவிதாவிடமும் அதைக்கொடுக்க எந்தவொரு வெளிப்பாடும் இல்லாமல் வாங்கிக் கொண்டாள். "இன்னமும் என் மேல கோபமாகத்தான் இருக்கிறாளோ" என்று மனதிற்குள் நினைத்தது, அவனின் முகத்தில் தெரிந்தது.

                              ரயில் திருச்சியில் நின்றது. "குரு, ராகுல பாத்துக்கோங்க நா வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வந்துருறேன் "னு விஜி ரயிலை விட்டு இறங்கினாள். அந்தக்கடையில் ஒரேக்கூட்டம். பெரும்பாலனோர் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீருக்காக போட்டிப் போட்டுக்கொண்டு வாங்கினார்கள். வைகைஎக்ஸ்பிரஸ் அதிகநேரம் எந்த ஜங்ஷனிலும் நிற்க்காது என்பதால் சற்றுநேரத்தில் ரயில் மெதுவாக நகர ஆரம்பித்தது. வாட்டர் பாட்டில் வாங்கிக்கொண்டு, மாறி வேற பெட்டியில் ஏறி விட, தன் பையனைக் காணாமல், குஞ்சப்பிரிஞ்ச கோழிமாதிரி தவிச்சுப் போனாள் விஜி. வைகை, வற்றிய காவிரி ஆற்றின்மேல் பறந்துசென்றது.

                           பக்கத்தில் உள்ளவர்கள் விஜிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே வந்தார்கள். அரியலூர் வந்ததும் ரயிலைவிட்டு இறங்கி, ராகுலை நோக்கிஓடினாள் .  "நா இல்லாம ராகுல் அழுதுகிட்டுல இருப்பான் " என்றுநினைத்துக்கொண்டு போய்ப் பார்த்தாள். அவளுக்கோ இன்ப அதிர்ச்சியாக இருந்தது. குருவின் மடியில் அமர்ந்த ராகுல் கல கலனு சிரித்துக்கொண்டு இருந்தான். "குரு, ராகுல் அழுதானா?" என்று விஜி கேட்க, "ரயில விற்க்கிற எல்லாத்தையும் வாங்கிக்கொடுத்தா எப்படி அழுவான் "னு தடித்தமுதியவர் சொன்னார். "இந்தாங்க தம்பி, இதை செலவுக்கு வச்சுக்கிங்க " என்று நூறு ரூபாய்த்தாளை நீட்டினாள் விஜி. "எ அக்காபிள்ளைக்கு செஞ்சதா நினைச்சுக்கிறேன்"னு சொல்லி வாங்கமறுத்தான் குரு. ராகுலிடம் நடந்துகொண்ட விதத்தைப் பார்தததும் குரு மேல கவிதாவுக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டானது.

                      விருத்தாசலத்தைக் கடந்து, ரயில் விழுப்புரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. தடித்தமுதியவர் கழிப்பறைக்குப் போயிட்டு, கதவ திறக்கும்போது கதவு காலில் அடிக்க, அப்படியே கீழே விழுந்துவிட்டார். அந்த ரயில்பெட்டியில் உள்ளவர்கள் அனைவரும் பதறிப்போய்ப் பார்த்தார்கள். கூட்டத்தைக்களைத்துவிட்டு, குரு விஜியிடம் அயோடக்ஸ் தையிலத்தை வாங்கி அடி பட்டஇடத்தில் நன்றாகத் தேய்த்தான். குருவின் உதவியால் தடித்த முதியவருக்கு வலி சற்றுக்குறைந்தது. இதைப்பார்த்த கவிதா "ச்சே ஒரு நல்லவர சந்தேகப்பட்டுடோமே "னு வாயிக்குள் முனுமுனுத்தாள்.  

          விழுப்புரத்தில் அரவாணிகள் நான்கு ஐந்து பேர் ஏறினார்கள். அரவாணிகளுக்குப் பயந்துக்கொண்டு சில்லரைகளைக் கையில் கொடுப்பவர்களும் உண்டு. அவர்களின் பிறப்பைப்பற்றியும் நடத்தையைப் பற்றியும் தவறாகக் கூறுபவர்களும் உண்டு. அரவாணிகள் தவறான வழியில் செல்லுவதற்கும், பிச்சைஎடுப்பதற்கும் காரணம் இந்தச் சமுதாயத்தில் யாரும் வேலை கொடுக்கவில்லை என்பதனாலே தான் போல. ஒரு அரவாணி "தர்மம் பண்ணுங்க நீங்க நல்லஇருப்பீங்க"னு ஒவ்வொருவரிடமும் கேட்க. சிலர் கொடுத்தார்கள் சிலர் தகாதவார்த்தைகளால் பேசினார்கள். "அக்கா நில்லுங்க, இந்தாங்க பணம்" என்று இருபதுரூபாய் நோட்டைக் கொடுத்தான் குரு. வாங்கிக்கொண்ட அரவாணி "இந்தச் சமுதாயத்தில எங்கள யாரும் ஒறமுறை சொல்லிக் கூப்பிட்டதில்ல, நீங்க நல்லா இருக்கனும் தம்பி "னு சொல்லி, கண்ணீருடன் கையை குருவின் தலையில் வைத்து ஆசிர்வாதம் பண்ணிட்டுப் போனாள்.

                           செங்கல்பட்டில் ரயில் நின்றவுடன் அழுக்குமுதியவரும் தடித்தமுதியவரும் இறங்க. குரு, தடித்தமுதியவரை கைத்தாங்கலா கீழே இறக்கிவிட்டான். "தம்பி நீங்க போங்க நானும் இதேஊரு தான் அவர அவுங்க வீட்லவிட்டுட்டு நா அப்பறம் போறேன்" னு சொல்லி அழுக்குமுதியவர் தன் மனதுவெள்ளையினு நிரூபித்தார்.

                             கவிதாவின் சிந்தனைகள், அனைத்தும் குருவின் நினைப்பாகவேஇருந்தது. அவளின் கால்கள் அந்தஇடத்தை விட்டு நகர முயற்சிசெய்ய, அதைஅவளின் மனது தடுத்தது.

                       ஓங்கிஉயர்ந்த கட்டடங்களும் அந்தக்கட்டடத்தின் வெளியே கண்ணாடியால் அலங்கரிக்கப்பட்டதும், ரயிலில் இருந்து ஜன்னல் வழியாகப் பார்த்தவர்களுக்கு சென்னை அருகில் வந்தவிட்ட உணர்வை உண்டாக்கியது. காற்றில், புகையும் இரைச்சலும் கலந்துவர தாம்பரமும் வந்தது. விஜியும் ராகுலும் குருவிற்கு டாட்டாக் காட்டி விட்டு ரயிலில் இருந்து தாம்பரத்தில் இறங்கினார்கள். இறங்கிய ராகுல் திரும்ப ரயிலில் ஏறி ஓடினான் குருவை நோக்கி. போனவுடன் குருவின் முகத்தில் முத்தங்களைப்பொழிந்து தனது அன்பைத்தெரிவித்து விட்டு கீழே இறங்கினான் ராகுல்.

                      குரு தனது இடத்திலிருந்து எழுந்து படிக்கட்டில் நின்று ரயிலின்வெளியே எதார்த்தமாக எட்டிப்பார்த்தான். தூரத்தில் இருந்த மின்சாரக்கம்பம், இமைகள் மூடித் திறக்கும் நேரத்தில் அவனின் முகத்தை நோக்கி வர, சட்டென்று முகத்தை எடுத்ததால் மரணத்தின் பிடியிலிருந்து தப்பித்தான். 

                                 பயத்தில் குருவிற்கு முகம் வியர்த்து விருவிருத்தது. அவனின் முகத்தில் வியர்வைத் துளிகள் முத்துமுத்தாக நின்றது. "ஏப்பா தம்பி சென்னைக்கு புதுசா எந்த சாமி புண்ணியமோ தப்பிச்ச, இல்ல அடிபட்டுச் செத்துருப்ப"என்று அவன் அருகில் இருந்த ஒருவர் சத்தம்போட்டார். மீண்டும் அவனின் இடத்தில் போயி அமர்ந்தான் . அவனின் இதயத்தின் துடிப்பு அதிகரித்தது, உடம்பு நடுங்கியது, வியர்வை அருவியாக ஊற்றியது. 

                                         பதற்றத்தைப் போக்க கண்களைமூடித் தியானம் செய்தான். சற்று நேரத்தில் விழியை மெல்லத்திறக்க அவன்எதிரே அமர்ந்திருந்தாள் கவிதா. இவனுக்கோ ஆச்சரியம், வெட்கப்பட்டு அவளைப்பார்க்க இவனின் விழிகள் தடுமாறியது. கவிதா தனது பார்வை ரசத்தை அவன்மீது பாய்ச்சிக்கொண்டிருந்தாள். கவிதாவின் இமைகள் விசிறியாக விசிற, குருவின்முகத்தில் இருந்த வியர்வை துளிகள் மறைந்தது. அவளின் இதயத்தில் ஒருஈர்ப்பு உதித்தது. இருவருடைய சந்திப்பு நன்றாகத் தொடங்கிய நேரத்தில் எழும்பூர்சந்திப்பு வந்தது. இருவரும் பரிமாறிக்கொண்டார்கள் அலைபேசிஎண்களை.

                    சில நாட்களில் அவ்வப்போது அலைபேசியில் பேசிக்கொண்டார்கள். ஒரு முறை அலைபேசியில் பேசும் போது குரு ரயிலில் கவிதாவைப் பார்த்து ரசித்ததையும் தான் வர்ணித்ததைப் பற்றியும் கூற,  கவிதா சிரித்துக்கொண்டே "நீங்கள் கவிஞர் மட்டும் அல்ல என் காதலனும் கூடத்தான்" என்று வெட்கப்பட்டே சொல்லிமுடித்தாள். அவ்வளவு தான், அன்று முதல் இருவருக்கும் காதல் தீ  பற்றிக்கொண்டது. அடுத்த சில வாரங்களில், சென்னையில் அடிக்கடி சந்தித்துக்கொண்டார்கள். போகாத இடங்கள் இல்லை, பார்க்காத சினிமா இல்லை.

                அன்று ஞாயிற்றுக்கிழமை, கவிதா அவனின் அலைபேசிக்கு தொடர்புகொண்டாள். அப்பொழுது "நீங்கள் தொடர்பு கொள்ளும் வோடபோன் நம்பர் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது" என்று அவளின் செவியில் , அதே பதில் அன்றுமுழுவதும் மீண்டும் மீண்டும் ஒலித்தது. இரண்டு மூன்று நாள் திரும்பத்திரும்பப் போட்டுப்பார்த்தாள். வெறுத்துப்போயி, நேராக அவனின் அறைக்குச்சென்று பார்க்க அங்கும் ஆள் இல்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்த போது "குருவா?அப்படி யாரும் இல்லம்மா ராமுனு ஒரு பையன் அந்த ரூமுல தான் தங்கிஇருந்தான் சனிக்கெழமதான் ரூமக் காலி பண்ணிட்டுப் போனான்" னு பக்கத்தில் இருந்தவர் கூறியவுடன், கவிதாவின் உடம்பு நடுங்க, இதயத் துடிப்புஅதிகரிக்க, முகம் வியர்த்து விருவிருக்க...

                       " அடப் பாவி !... நல்லவன் மாதிரி நடிச்சு ஏ வாழ்க்கையக் கெடுத்துட்டுப் போயிட்டீயே" னு கதறி அழுது, புலம்பிக்கொண்டு இருந்தாள் கண்ணீருடன்.

                           ராம், குணா என்ற பெயரில் தனது அடுத்தப் பயணத்தை குருவாயூர்எக்ஸ்பிரஸில் பயணிக்கத் தொடங்கினான்.
 
Copyright 2009 கதைக்களம். All rights reserved.
Free WordPress Themes Presented by EZwpthemes.
Bloggerized by Miss Dothy