RSS
Hello! Welcome to this blog. You can replace this welcome note thru Layout->Edit Html. Hope you like this nice template converted from wordpress to blogger.

கடிதம்



                                         பணப் பிரச்னையில், அன்று ரவிக்கும் ராஜேஷுக்கும் பயங்கர சண்டை நடந்து கொண்டிருந்தது. ராஜேஷ், "டே! உன்னக் கொல்லாம விட மாட்டேன்டா" என்று சொல்லி  அவன் கழுத்தில் கை வைத்து நெரிக்க, பக்கத்தில் முத்தையா என்கிற பெரியவர்  வீட்டுக்குள் வந்து விலக்கி விட்டார். "ஏப்பா  படிக்க வந்த எடுத்துல இப்படித்தான் சண்ட போடுறதா, இதுக்குத்தான் மதுரயில இருந்து வந்தீகளா, நல்ல பிள்ளைக" என்று சொல்லி சமாதானப் படுத்திவிட்டுப் போனார். இவர்கள் சண்டை போடுவதும் கூடிக்கொள்வதும் புதிதல்ல. சற்று நேரத்தில் கூடிக்கொண்டனர்.


                                        அந்தத் தெருவில் யாரும், யார்வீட்டில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். நகரங்களில் இவ்வாறு இருப்பது சகஜம் தானே. அருகில் உள்ளவர்களிடம் போய்ப் பேசினால் யாரும் முகம் கொடுத்து பேசமாட்டார்கள். இதனால் இவர்கள் வேலை உண்டு, படிப்புண்டு என்று இருந்தனர். முத்தையா, பெரியவர் மட்டும் அவ்வப்போது வந்து சண்டையை விலக்கி விடுவார்.

                                           இவர்கள் இருப்பதோ கீழ் வீடு. மாடி வீட்டிலிருந்து ஒரு பொண்ணு  கீழே இறங்கி தினமும்  பள்ளிக்கூடத்திற்குச் செல்வாள். இவர்களின் வீட்டு வாசப்படியைக் கடந்துதான் செல்ல வேண்டும். அவள் பெயர் ப்ரியா. பண்ணிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். அவள் அப்பா ஒரு முரடன் பகல் எல்லாம் ஓட்டலில் உழைத்துவிட்டு, இரவு ஆனவுடன் குடிக்க ஆரம்பித்துவிடுவார். ப்ரியாவின் அம்மாவிற்கு அவரை சமாளிப்பது தான் வேலை.


                                           அன்று,  ப்ரியா மாடியிலிருந்து கீழே வரும்போது யதார்த்தமாக ரவியைப் பார்த்துத்  திரும்ப, ரவிக்கு மனசுக்குள்  'திக்' என்று இருந்தது. அன்று முதல் ரவி அவளைப் பார்க்க ஆரம்பித்தான். அவள் பள்ளிக்குப் போகும் போதெல்லாம் வெளியே வந்து நிற்பான். ஒரு நாள்,  ராஜேஷிடம் இந்த விஷயத்தை சொல்ல, ராஜேஷ், "மாப்புள இந்தக் காலத்தில் நல்ல பொண்ணு கிடைக்கிறதே!  கஷ்டம், காலேஜ் போனாலே பொண்ணுக கெட்டுப் போயிரும், லவ்வச் சொல்லிரு" என்று காதலுக்கு அடித்தளம் போட்டான். 

                                             அம்மா அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கவக்கிறார்கள்,   என்கிற எண்ணம் துளிகூட ரவியிடம் இல்லாம போச்சு. இதற்கு ராஜேஷும் ஒத்துஊதினான். ரவி, அவளிடம் எப்படிப் போயி பேசலாம் என்று ராஜேஷிடம் யோசனை கேட்க. "எக்ஸமுக்கு +2 புக்கு  தேவைப்படுதுனு சொல்லி பேசுடா" என்று சொன்னான். மாடிப்படியிலிருந்து கீழே இறங்கி வருவாள் என்று தெரிந்து ரவி கீழே காத்திருந்தான். மெதுவாக படியிலிருந்து கீழே இறங்கி வந்தாள் ப்ரியா. ரவியின் முகம் மலர்ந்தது.  பின்னால் அவளின் அப்பாவும்  இறங்கி வந்தார். அவரைப் பார்த்தவுடன் மலர்ந்த முகம் கூம்பிடுச்சு.   அப்படியே வீட்டிற்குள் போய் மறைந்து கொண்டான். நல்ல வேளை ப்ரியாவின் அப்பா, ரவியப் பார்க்கல.

                                    வீட்டில் பார்த்துக்கேட்டால் வம்பாயிடும் என்று தெரிந்ததால், பள்ளிக்குச் செல்லும் வழியில் கேட்க்கலாம் னு  ரவியும் ராஜேஷும் பிள்ளையார் கோயில் அருகில் காத்திருந்தனர். அன்ன நடை போட்டு மெல்ல வந்தாள்.  கதிரவன் ஒளி, அவளின் முகத்தில் அடிக்க,   தங்கத் தாமரையே  நடந்து வந்ததது போல் இருந்தது. ரவி அவளை மறிக்க, ப்ரியா கொஞ்சம் பயந்த உணர்வுடன் அவனைப் பார்த்தாள். "டி.என்.பி.எஸ்.சி எக்ஸமுக்கு படிக்க +2 தமிழ் புக் வேணும் தரமுடியமா?" என்று ரவி  கேட்க,  "இந்தாங்கண்ணா  படிச்சு முடிச்சுட்டு குடுங்க" என்று கூறிவிட்டு தலை குனிந்த படியே போனாள்.

                                   "டே ராஜேஷ், அவ என்னை அண்ணானு சொல்லிட்டாலே டா  " என்று ரவி கூற, "பொண்ணுக எல்லோரிடம் மொத அப்படித்தான் பேசுவாங்க,பேசிப்  பாரு பழகப் பழகப் பாலும் புளிக்கும் மாதிரி நிச்சயம் பேசுடுவா டா"னு சொல்லி உசுப்பேத்திவிட்டான் ராஜேஷ். முதலில் யோசிச்ச ரவி அப்பறம்  அவளை தன் வழியில் கொண்டுவரத் திட்டமிட்டான்.

                                          அதற்கு, ராஜேஷ்  ஒரு யோசனை தெரிவித்தான்.   "அந்தப் புத்தகத்தை திருப்பி கொடுக்கும் பொழுது,  அதில் உன் விருப்பத்தை எழுதி கொடுடா னு" ராஜேஷ் சொல்ல, கடிதம் எழுதினான் ரவி. 'ப்ரியமான ப்ரியாவுக்கு, உன் மேல் எனக்கு பிரியம். என் காதலை ஏற்றுக்கொள். இப்படிக்குப் பிரியமானவன்', என்று எழுதி புத்தகத்தில் வைத்து, அவளிடம் கொடுப்பதற்காக  அதே  பிள்ளையார் கோயிலில்  அருகே நின்று  கொண்டிருந்தனர். ரவி அவளிடம் போய்ப் பேசத் தயங்க, ராஜேஷ் அவளிடம் போய்ப் பேசினான். "ரவிக்கு உன்னைப்  பிடிச்சிருக்காம், ஒ மனசுல என்ன இருக்குனு கேட்கச் சொன்னான்" என்று கூற, ராஜேஷ் கையில் இருந்த புத்தகத்தை வாங்கிக்கொண்டு, "நா அவுங்கள அப்படி நினைக்கலண்ணா" என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். அந்தப் புத்தகத்தினுள் கடிதம் இருந்தது ப்ரியாவுக்குத் தெரியாது. கையில் புத்தகம் வைத்தப்படியே வீட்டிற்குள் நுளைந்தாள்.

                                                  அன்று ப்ரியாவின் அக்கா, மாமா, குட்டிஸ் மிதுளா எல்லாம் வந்திருந்தார்கள். அக்கா.... என்று கட்டிப் பிடித்து சந்தோஷப் பட , மிதுளா ,'சித்தி' என்று தன் மழலை மொழியில் ப்ரியாவை கூப்பிட்டாள்.  ப்ரியாவின்  அப்பா வழக்கம் போல குடித்துவிட்டு வந்திருந்தார். இருந்தாலும் இன்று கொஞ்சம் குறைவு தான். எல்லாரும் சந்தோஷமாகப் பேசிக்கொண்டு இருந்தனர்.

                                             அப்பொழுது கீழே வைத்திருந்த புத்தகத்தை மிதுளா எடுக்க, அதில் இருந்த கடிதம் வெளியே வந்தது. அதை மிதுளா எடுத்து கையால் கசக்க,  ப்ரியாவின் அப்பா, " ஏம்மா இது என்ன பேப்பரு சின்னப் பிள்ளை, விளையாட்டுப் போக்க கிழிக்கப் போகுது" என்று கூறி, அதை எடுத்து  அவர் யதார்த்தமாகக் கடிதத்தைப் பார்த்துவிட்டார். பார்த்த, நிமிடத்திலேயே, "படிக்கப் போறியா?....இல்ல  ல்வ் பண்ணப் போறியா? யாருடி இதக் குடுத்தா?... சொல்லு....சொல்லு..........." என்று  அடிஅடினு அடித்துவிட்டார். எல்லாரும் விலக்கிவிட்டர்கள். அப்படியிருந்தும் துள்ளிக்குதித்த அவர், ஓங்கி  வயிற்றில் உதைக்க, ப்ரியா சுவரில் மோதி அப்படியே கீழே விழுந்தாள். சுவரில், இரத்தம்  வழிந்து கொண்டிருந்தது.

                                      அக்கம் பக்கத்தில்  யாருக்கும் சொல்லாமல்,  இரவோடு இரவா, சடலத்தை அடக்கம் செய்தார்கள். அன்று முதல் ப்ரியாவின் அப்பா தன் மகள சாகடித்துவிட்டோம் என்கிற விரக்தியில் சாப்பாட்டையே மறந்து விட்டார். தன் மகள் புகைப்படத்தைப் பார்த்த படியே இருந்தார்ரவியும், ராஜேஷீம் வீட்டைக் காலி பண்ணனும்முனு முடிவு பண்ணினர். ஆனால் வீட்டு ஓனர் வெளியூர் போனதால அங்கேயே இருக்கிறதா ஆயிடுச்சு.

                                   ஒரு நாள், இரவு 10 மணி இருக்கும். படிக்க போகிறததுக்கு முன் ஆப்பிள் தின்னுவது இவர்களின் வழக்கம்.  கத்தியை எடுத்து ஆப்பிளை நறுக்கினான் ராஜேஷ். இருவரும் தின்றார்கள். அடுத்தப் பழத்தை நறுக்கலாமுனு கத்தியை வச்ச இடத்தில பார்க்க, கத்தியைக் காணோம். வீட்டில் எங்க தேடியும் கிடைக்கல. இருவருக்கும் வாக்கு வாதம் மீண்டும் சண்டை. "நீ தாண்டா எடுத்த"....     " இல்ல நீ தாண்டா எடுத்த."... என்று. ஒரு வழியாகப் படுத்தார்கள். படுக்கும் போது இருவருக்கும் 'கத்திய யாரு எடுத்துருப்பா' என்கிற சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. ரவி தூங்கிட்டான். ராஜேஷுக்கு தூக்கம் வரவில்லை. அந்த நேரத்தில் எங்கேயோ ஒரு ஓலச் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தது. எந்திரித்து வெளியே வந்து பார்த்தான். 

                தெருவில் உள்ள விளக்குகள் அமந்து அமந்து எரிந்தது. ஆயிரக்கணக்கான வெள்ளைக் காகிதங்கள் தெருக்களில் பறந்து கொண்டிருந்தது. அதில் ஒரு காகிதம் பறந்து வந்து ராஜேஷின் முகத்தில் மோதியது. பயந்த உணர்வுடன் அதைப் பார்த்தான். அது ப்ரியாவிற்கு எழுதிய கடிதம். பார்த்த வினாடியிலே இவனின் நாடியின் வேகம் அதிகரித்தது. என்ன செய்வதறியாமல், வேகமாக வீட்டிற்குள் சென்று, சட்டென்று கதவைச்சாத்தினான். ரவியை எழுப்பி அந்தக் கடிதத்தைக் காட்ட, அது வெறும் காகிதமாகவே தெரிந்தது. "டே சும்மா போய்ப்  படுடா, நானேப் பயப்படல நீ எதுக்குப் பயப்பிடுற" னு சொல்லிப் படுத்தான். 

                                           அதிகாலையில்  5 மணிக்கு கண் விழித்தான் ராஜேஷ். அப்பொழுது பக்கத்தில் படுத்திருந்த ரவியைக் காணோம். "எங்க போயிருப்பான் "னு தேடி வெளிய வர, பாத்ரூம்மில் லைட் எரிந்து கொண்டு இருந்தது. "அப்பாடா" என்று பெருமூச்சு விட்டான். வெகு நேரமாகியும் வரவில்லை என்பதால், பாத்ரூம் கதவை மெல்ல திறந்து, உள்ளே  போயிப் பார்க்க, ரவி கத்தியால் குத்தப்பட்டு இருந்தான். அப்படியே ஆடிப்போயிட்டான்.  அவன் வயிற்றில் சொருகப்பட்ட கத்தி, இரவு ராஜேஷ் ஆப்பிளை அறுத்தக்கத்தி. ராஜேஷ் அப்படியே பயத்தில் மயங்கி விழுந்தான்.

                        அந்த இடம் முழுவதும், வெள்ளைத்தாள்கள் பறந்து கொண்டே, ராஜேஷை சுத்திக் கொண்டிருந்தது. அப்பொழுது, "பர்மா காலனியில ஒரு கொல நடந்துருக்கு  உடனே வாங்க சார்" என்று யாரோ ஒரு பெண், தொலைபேசி மூலம் போலீஸிடம் புகார் சொல்லும் குரல்சத்தம், கேட்டுக்கொண்டிருந்தது. 

                                        ராஜேஷ், கண்விழித்துப் பார்க்கையில் சுற்றிலும் போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தனர். பக்கத்தில் ரவியின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அந்த இடத்தில் மக்கள் ஒன்று  கூடி வேடிக்கைப் பார்க்க, போலீஸ்காரர்கள் ராஜேஷை கைது செய்தனர். 

                         கோர்ட்ல் கொலை செய்யப்பட்டதற்குச் சாட்சியமாக ராஜேஷ் கைரேகை பதிந்திருந்த கத்தியைக் காண்பித்தனர். மற்றொரு சாட்சியமாக முத்தையாவை அழைத்தார்கள். "ஐயா, ரெண்டு பேரும் அடிக்கடி சண்ட போடுவாங்கே. ஏற்கனவே ஒரு மொற இப்படித்தான சண்டப் போட்டு ராஜேஷ், ரவி கழுத்த நெருச்சத நா கண்ணால பாத்தேன்" என்று அவர் அளித்த வாக்குமூலம் ராஜேஷுக்கு ஆயுள் தண்டனையை உறுதிசெய்தது. 


                                            ராஜேஷை சிறையில் அடைத்தார்கள். அப்பொழுது ஒரு காகிதம் அவனை நோக்கி வந்தது. அதில் எதோ எழுதிருந்தது. ராஜேஷ் படித்தான். 

                                            "உங்களப் போல ஆளுகனால தான் என்னை மாதிரி நல்ல பொண்ணுகளும் படிக்கிற வயசுல, கெட்டுப் போயிறாங்க.  என்னோடு, அண்ணன் யாரும் பிறக்காதுனால, ரவிய அண்ணன நினைச்சுத்தான் பார்த்தேன். ஆனா ரவி அப்படி நடந்துக்கல,  ரவி பண்ணத் தவறுக்கு ஏ உயிர் போயிடுச்சு. ரவி  மட்டும் தப்பு பண்ணல நீயும் தான். தவறு செய்தவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல, தவறுக்கு உடந்தையாக இருந்தவர்களும், குற்றவாளிகள் தான்" என்று இருந்ததை, ராஜேஷ்  படித்து முடித்தான்.

                                     படித்து முடித்தவுடன், அந்தக் கடிதம் அப்படியே சிறைச்சாலையில் இருந்து வானத்தை நோக்கி பறந்து, சென்று கொண்டிருந்தது. ராஜேஷின் விழிகளில் கண்ணீர்த் துளிகள்  கசிந்தது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Copyright 2009 கதைக்களம். All rights reserved.
Free WordPress Themes Presented by EZwpthemes.
Bloggerized by Miss Dothy