RSS
Hello! Welcome to this blog. You can replace this welcome note thru Layout->Edit Html. Hope you like this nice template converted from wordpress to blogger.

பெத்ததாயி


                                                                 
   





அன்னக்கி பார்வதியம்மா சந்தை ஏவாரம் முடிஞ்சு இரவு ஏழு மணிக்குதான் வீட்டுக்கு வந்துச்சு. நல்ல ஏவாரம் இருந்தாலும் முகத்துல சந்தோஷம் இல்ல. காரணம் தனது ரெண்டு மகன்கள் செந்திலுக்கும், குமாருக்கும் கல்யாணம் பண்ணி வச்சு, கொஞ்ச நாளிலேயே பொண்டாட்டிப் பேச்சைக் கேட்டுக்கிட்டு தனிக் குடித்தனம் போயிட்டாங்க.


     மாசா மாசம் ஆளுக்கு ஆயிரம் ஆயிரம் தர்றதா சொல்லி மதுரைக்குப் போனவங்க, பார்வதியம்மாவைப் பார்க்கக் கூட வரதே இல்ல.லிங்காவடி கிராமத்தையே மறந்துட்டாங்க. பால்காரன் ராசு மகன் கந்தன் படிக்க மதுரைக்குப் போயிட்டு வர்றப்ப, அண்ணன் தம்பி ரெண்டு பேரும் பணத்தக் கொடுத்துவிடுவாங்க. பார்வதியம்மா தன் மகள் அம்முவுக்கு வாங்கிய கல்யாணக் கடனை எப்படியாவது கட்டணுங்கற வைராக்கியத்துல, சந்தை ஏவாரத்த விடாம பார்த்துச்சு. என்ன ஏவாரம் பார்த்தாலும் பெத்த பிள்ளைகள் பக்கத்துல இல்லைங்கற வருத்தம் அது முகத்துல தெரிஞ்சுது. 'புருஷன் இல்லாட்டினாலும் பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்துச்சு. ஆனா பிள்ளைங்க பெத்ததாய விட்டுட்டு போயிட்டாங்க' என்று அக்கம்பக்கத்துல பேச்சு. 

    பார்வதியம்மாவுக்கு ஒரே அண்ணன் பேரு பாண்டி. சத்திரப்பட்டில பெட்டிக்கடை வெச்சுருக்காரு. அவர் மட்டும் அப்பப்ப பார்த்துட்டு போவாரு. இதுவும் சத்திரப்பட்டி சந்தைக்கு போரப்ப அண்ணனைப் பார்த்துட்டு வரும். மத்தப்படி சின்னச் சின்ன வீட்டு வேலை பார்க்கறதெல்லாம் கந்தன்தான்.

     சத்திரப்பட்டியில அன்னக்கி சந்தை ஏவாரம் நல்லா இருந்துச்சு. ஏவாரிக கூவி கூவி வித்துக்கிட்டு இருந்தாங்க. காய்கறிகள் எல்லாம் பச்சை பசேர்னு இருந்துச்சு. பொம்பளைகளும், ஆம்பளைகளும் காய்கறி வாங்கறதுக்கு அலை மோதினாங்க. பார்வதியம்மாகிட்ட காய்கறி வாங்கறதுக்கு தனிக்கூட்டம் இருக்கும். மனசுல எத்தனை பிரச்னை இருந்தாலும் சந்தைக்கு வர்றவங்கக்கிட்ட அனுசரனையா நடந்துக்கும். 

     மழை பேஞ்சாத்தான் விவசாயிக்கு வாழ்க்கை. மழை பெய்யலைனாதான் சந்தை ஏவாரிக்கு வாழ்க்கை. மழைக்காலம் வந்தாலே ஏன்டா வந்துச்சுனு நெனப்பாங்க ஒவ்வொரு சந்தை ஏவாரியும். மழையில காய்கறி நனைஞ்சா விலையும் கொறஞ்சு போகும். மறுநா சீக்கிரம் அழுகிப்போகும். 'நல்ல வேளை இன்னிக்கு மழை வரல'னு சந்தை ஏவாரத்த முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தா பார்வதியம்மா.

      ஒரு நா மதுரைக்கு காசு வாங்கப் போனான் கந்தன். மாசம் ஆயிரம் ரூவா கொடுத்த குமாரு, "அடுத்த தடவை ரெண்டாயிரமா சேர்த்து கொடுத்திடறன்னு அம்மாகிட்ட சொல்லுரு'னான். செந்தில் கொடுத்த ஆயிரத்த மட்டும் வாங்கி வந்து பார்வதியம்மாகிட்ட கொடுத்தான் கந்தன்.

       இந்த மாசம் எப்படி வட்டிக் கட்டறதுனு யோசிச்சிக்கிட்டு இருந்தப்ப வெளில யாரோ கதவைத் தட்டினாங்க. வந்தவரு, "சத்திரப்பட்டிகிட்ட ஆக்சிடண்ட் ஆயி மதுரை பெரிய ஆஸ்பத்திரியில உங்கண்ணனை சேர்த்திருக்காங்க'னு சொன்னாரு. இதைக் கேட்டதும் பார்வதியம்மாவுக்கு கையும் ஓடலை காலும் ஓடலை.

     ஆஸ்பத்திரியில போயி பாண்டி சம்சாரம் சரச பார்த்தவுடன், 'அத்தாச்சி...' என்று அழுதுக்கிட்டே கட்டிப்பிடிச்சா பார்வதியம்மா. "பார்வதி உங்க அண்ணனை போயி பாருடி"னு சரசு சொல்ல ஒத்தல் காலு இல்லாம கிடந்த பாண்டிய பாத்து துடிதுடிச்சு போனா பார்வதியம்மா.

      அண்ணனுக்கு ஏற்பட்ட விபத்தால் ஒரு வாரம் ஆஸ்பத்திரியிலேயே இருக்க வேண்டியதாயிடுச்சு. ஒரு வழியா சோகத்துல இருந்து மீண்டு ஏவாரத்தை தொடங்கினா பார்வதியம்மா.

         வட்டி ஒழுங்கா கட்டலைன்னு வட்டிக்கடைக்காரன் வீட்டு வாசலுக்கே வர, 'இன்னும் ஒரு வாரத்துல கட்டறன்னு' பார்வதியம்மா சொல்லுச்சு. வந்தவங்க போனாங்க எப்படா அடுத்த வாரம் வரும்முனு. தீபாவளி பண்டிகையினால வெள்ளிக்கிழமை வெக்க வேண்டிய சந்தைய லிங்காவடியில வியாழக்கிழமையே வெச்சாங்க.

       அசலூரு ஏவாரிங்க வர மாட்டாங்கறதால இருக்கற மூவாயிரத்துக்கும் காய்கறி வாங்கிப் போட்டுச்சு. இன்னிக்கு ஏவாரத்துல சம்பாரிச்சு வட்டிக் கட்டணும்னு நெனச்சு, கந்தனையும் தொணைக்கு கூப்பிட்டுச்சு பார்வதியம்மா. தீபாவளி ஏவாரம்ங்கறதால, ஜனங்க எல்லோரும் சீக்கிரமா வர ஆரம்பிச்சாங்க. 

         திடீருனு, சூரியன் மேகங்கிட்ட சரணடைஞ்ச மாதிரி, வானத்துல இருந்து ஒரு சொட்டு மழைநீரு பார்வதியம்மாவின் முகத்துல வேர்வையோடு வேர்வையா கலந்துருச்சு.

          மழை சட சடனு ஆரம்பிக்க பார்வதியம்மாவும், கந்தனும் படுதாவ காய்கறி மேல மூடினாங்க. ஜனங்க எல்லாரும் ஓடி ஒழிய ஏவாரிங்க என்ன செய்யறதுனு தெரியாம தத்தளிச்சாங்க. மழை எப்படியும் நிக்கும்னு ஏக்கத்துடன் பார்வதியம்மாவும், கந்தனும் சந்தைய விட்டு நகராம இருந்தாங்க. சந்தை, தாழ்வான இடத்துல நடக்கறதால மழைத் தண்ணி குட்டைப் போல தேங்கிடுச்சு.

      மழை இனி நிக்காதுனு தோண பார்வதியம்மாவும், கந்தனும் அரை மனசோட காய்கறிகளோடு வீட்டுக்கு போனாங்க. அடுத்த நாளே, தக்காளியும், வெங்காயமும் அழுகிப் போனதால, பார்வதியம்மா மனசு நொந்து போச்சு. அன்னையில இருந்து சரியா சாப்பிடலை, தூங்கலை. கடங்காரங்க தொல்லை ஒரு பக்கம்னா; பிள்ளைகளை பார்க்க முடியலையேங்கற ஆதங்கம் ஒரு பக்கம். அண்ணன் கால் ஒடஞ்சு கிடக்கற கவலை ஒரு பக்கம்.

       பார்வதியம்மாவுக்கு கந்தனோட கருனை மட்டும்தான் ஆறுதல தந்துச்சு. பால்கார ராசு வீட்டில எல்லாரும் பழனிமுருகனுக்கு மாலை போடறது வழக்கம். இந்த முறையும் போட்டாங்க, கந்தனும் போட்டான். கந்தன், பார்வதியம்மாவுக்கு அப்பப்ப வீட்டுலயிருந்து சாப்பாடு கொண்டாந்து கொடுப்பான். அவுங்க அம்மா சத்தம் போட்டாலும் காதுல வாங்கிக்க மாட்டான்.

      ஒரு நா, 'பெத்த பிள்ளைகளைப் பார்க்கணும் போல இருக்கு, போனப் போட்டு வரச் சொல்லுடா'னு பார்வதியம்மா சொல்ல, கந்தனும் எல்லாத்துக்கும் போனப் போட்டு கூப்பிட்டான். 

       திடீருனு, 'ஒரு வா பால் குடிக்கணும் போல இருக்கு கந்தா. வாங்கிட்டு வர்றியா?'னு பார்வதியம்மா கேட்டுச்சு. அது எப்பவும் அப்படி வாய் விட்டு கேட்டதே இல்லை. அவசரமா வீட்டுக்கு போயி அவங்க அப்பா ஏவாரம் பார்த்துட்டு மிச்ச வெச்ச பாலை, வீட்டுலயே காய்ச்சு கொண்டாந்தான்.

      குடும்பத்தோட சேர்ந்து எடுத்த போட்டாவ கையில வெச்சு, பார்வதியம்மா வெறிச்சு பார்த்துக்கிட்டு இருந்துச்சு. கந்தன் வந்ததைக் கூட அது கவனிக்கலை. பிள்ளைகளை பார்க்கலைனு மனசுக்குள்ள அவ்வளவு ஏக்கம் போலிருக்குனு நினைத்த்துக் கொண்டு, "அம்மா, போட்டோவ பார்த்தது போதும். பால் ஆறிடப் போவுது. குடிங்க'னு சொம்பை நீட்டினான். பார்வதியம்மாகிட்ட எந்த சலனமும் இல்லை. ஜடம் போல கிடந்துச்சு.

          கந்தனுக்கு விஷயம் புரிய, மறுபடியும் போன் போட்டான் குமாருக்கு. 
 'எல்லாரும் சேர்ந்து வர்றோம் கந்தா. அம்மாகிட்ட சொல்லிரு'னு சொன்னான் குமார். 

    ' தேவையில்லை ணே. இனி அம்மாவுக்கு எது சொன்னாலும் கேக்காது. அம்மா நம்மள விட்டுட்டுப் போயிடுச்சு. வேமா வாங்கண்ணே.' என கந்தன் சொல்ல, கதறி அழுதபடி, குடும்பத்துடன் ராவோடு ராவா ஓடியாந்தான் குமார்.
   
    பார்வதியம்மா தூங்கறது மாதிரியே இருந்துச்சு. அதை பார்த்து, 'அம்மா, நாங்க நல்லா இருக்கணும்னு தனியாப் போயி, உன்ன சாகடிச்சிட்டோமே'னு குமாரும், செந்திலும் வாய் விட்டு அழுதாங்க.

    'பாசமா வளர்த்தியே..இப்படி பாடையில போயிட்டியே'னு பார்வதியம்மா மகள் அம்மு, ஒப்பாரி வெச்சு அழுதுக்கிட்டு இருந்தா.

   சேதி தெரிஞ்சு பாண்டியும், சரசும் ஆட்டோவுல அர்த்தராத்திரி வந்து சேர்ந்தாங்க. ஒத்தக் காலோடு கையில குச்சிய வச்சு நொண்டி அடிச்சுக்கிட்டு வந்து, தங்கச்சிய பார்த்து தேம்பி தேம்பி அழுதாரு பாண்டி.

   பார்வதியம்மா போயிட்ட விஷயம் காலையில எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சு. பால்கார ராசு, 'நாம சாமிக்கு மாலை போட்டிருக்கோம். கேத வீட்டுக்கெல்லாம் போகக் கூடாதுடா.'னு கந்தனிடம் செல்போனில் எச்சரிச்சான்.

'  மனுசன் செத்ததாளதான் சாமியே வந்துச்சு' னு சொல்லி மாலைய கழட்டிட்டான் கந்தன்.

பார்வதியம்மாவின் சடங்குல லிங்காவடி ஜனங்க எல்லாரும் கலந்துக்கிட்டாங்க. கரகாட்டம், தப்பாட்டம் ஒரு பக்கம், வாண வேடிக்கை ஒரு பக்கம்னு லிங்காவடி கிராமமே அதிர்ந்துச்சு.

   எறங்கு பொழுதுல பொணத்த தூக்கறதுதான் ஊரு வழக்கம். மணி மூணு ஆனதும் தூக்கினாங்க.

     குமார், செந்திலோடு சேர்ந்து கந்தனும் தூக்கினான்.

   ஊர்வலம் முடியற வரைக்கும் சரவெடிய சரசரமா வெடிச்சாங்க. லிங்காவடில நல்லதுக்கு கூட இப்படி யாரும் செலவு பண்ணியிருக்க மாட்டாங்க.

 பெத்ததாயிக்கு தலைமகன்தான் மொட்டை போடுவாங்க. ஆனா, பார்வதியம்மாவுக்கு குமார், செந்தில் மட்டும் இல்லாம, கந்தனும் மொட்டை போட்டது, ஊரு ஜனத்த ஆச்சரியப் பட வெச்சுது.


    'பெத்ததாயி மேல பிள்ளைகளுக்கு எவ்வளவு வாஞ்சையிருந்தா இவ்வளவு செலவு செஞ்சு தூக்கிப்போட்டுருப்பாங்க'னு ஒருவர் அங்கலாய்ப்பது கந்தன் காதுல விழுந்தது.

   'ஒலகத்துல பணமோ, பாசமோ மனுசன் உசுரோடு இருக்கற வரைதான. செத்தப் பிறவு செஞ்சு என்ன பிரயோசனம்'னு கந்தன் மனசுல நினைச்சது, குமாருக்கும், செந்திலுக்கும் காதுல விழுந்திருக்க வாய்ப்பில்லை.

1 கருத்துகள்:

kadhaikkalam சொன்னது…

thanks mama

கருத்துரையிடுக

 
Copyright 2009 கதைக்களம். All rights reserved.
Free WordPress Themes Presented by EZwpthemes.
Bloggerized by Miss Dothy