உண்டியல்
மீன் உருவ உண்டியலை பத்து ரூபாய்க்கு சந்தையில் வாங்கி வீட்டில் வைத்தவுடன் குட்டியின் வீட்டுச் சுவருக்கு அழகே கூடியது.
அன்று முதல் குட்டி, தினந்தோறும் பெரியம்மா கொடுக்கும் ஐம்பது பைசாவையும் ஆயா கொடுக்கும் ஒரு ரூபாயையும் அதில் தான்
போட்டு வந்தான். எப்படியாவது உண்டியலை நிரப்பிட வேண்டும் என்கிற ஆசையால் காசு கையில் கிடைக்கும் போதெல்லாம் மீன் உண்டியலில் போட்டுக் கொண்டே இருப்பான். குட்டியின் அம்மா மட்டும் எப்போதும் குட்டிக்கு காசு கொடுக்கவே மாட்டாள். 'வேணுங்கிறதக் கேளு காசு மட்டும் கேக்கேவே கேக்காத' என்று ஒரு நாளில் சொன்ன பிறகு அம்மாவிடம் மட்டும் காசு கேட்கவே மாட்டான்.
அவ்வப்போது பள்ளி முடிந்த மாலை நேரங்களில் மந்தையில் இருக்கும் முத்தாலம்மன் கோவிலை பார்க்கும் போதெல்லாம் திருவிழா வராதா ?யாராவது உறவினர்கள் வரமாட்டார்களா? இரண்டு ரூபாயாவது தர மாட்டார்களா ? என்று தன்னந்தனியே பேசிக் கொண்டிருப்பான். குட்டி, நினைத்த மாதிரி ஒரு முறை புரட்டாசி மாத சாத்திரை திருவிழாவிற்கு வந்த சுசிலா அத்தை பத்து ரூபாய் கொடுக்க, ஆறுமுகம் செட்டியார் கடையில் போய் பத்து ரூபாய்க்கும் சில்லறைகளை மாற்றி ஒவ்வொரு காய்னையும் போட்டுக் கொண்டே ,'உண்டியல் நிரம்பி இருக்குமாம்மா 'என்று அவன் அம்மாவிடம் கேட்டான்.
'ஒனக்கு வேற இல்லையாடா எப்ப பாரு உண்டியலே கெதினு கெடக்க. மொத அத ஒடச்சதான் அப்பறம் பேசாம கெடப்ப' முகத்தில் அடித்த மாதிரி
சொல்லிவிட்டாள்.
என்ன தான் அம்மா சொன்னாலும் .
அதையெல்லாம் குட்டி கண்டு கொள்ளவே இல்லை.
ஆனால் குட்டிக்கு மூப்பாக பிறந்த கிஷ்ணாவோ குட்டியின் உண்டியல் மீது கண்ணும் கருத்தாய் இருப்பான்.
அவ்வப்போது கிஷ்ணா , குட்டிக்குத் தெரியாமல் உண்டியலில் வெளக்கமாத்து குச்சியை வச்சு அவ்வப்போது காசை எடுத்துக்கொண்டிருந்திருக்கிறான்.இந்த விஷயம் குட்டிக்கு
வெகுநாளாகத் தெரியாமலே தான் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு தான் சேர்த்து வைத்த எல்லாக் காசும் கிஷ்ணாவுக்குத்தான் என்று தெரிந்தது.
ஒரு நாள் காலை வேளையில் எதிர் வீட்டு ராசு கூப்பிடவும் குட்டி போனேன். எப்போதும் ராசு எதாவது வேலை என்றால் குட்டியைத் தான் கூப்பிடுவார். கூப்பிடுவது மட்டும் அல்லாமல் கையில் செலவுக்கு சில்லறைகளையும் கொடுப்பார். பாசமாகப் பேசுவார். அன்பாக நடந்து கொள்வார்.
தன் மகன் நேருவை விட குட்டியின் மீது அன்பு செலுத்துவார். செலவுக்கு காசு கொடுப்பார் என்பதை விட அவருடைய அன்பிற்காகவே அவர் வீடே என்று கெதியாய் கெடப்பான்.
ஒரு நாள் நண்பகல் வேளையில் போனவுடனேயே ,
' இந்த லெட்டரை போஸ்ட் பண்ணிட்டு வா சின்னப்பளே ' என்றார்.
அவனும் ஊர் எல்லையில் போஸ்ட் ஆபிஸில் இருக்கும் தபால் பெட்டியில் லெட்டரை போட்டு வந்தவுடன் ,'இந்தடா சின்னப்பளே செலவுக்கு ' என்று வழக்கம் போல இரண்டு ஒரு ரூபாய் காய்னைக் கொடுத்தார்.
கொடுத்த இரண்டு ரூபாயை உண்டியலில் போடலாம் என வீட்டுக்குப் போக,
கிஷ்ணா கையில் ரத்தத்துடன் வீட்டுத் திண்ணையில் மயங்கிய நிலையில் படுத்திருந்தான்.
குட்டிக்கு கையும் ஓடல.காலும் ஓடல.
கிஷ்ணாவைக் கூட்டி வந்த மகேஷிடம் எப்படி அடிபட்டது என்கிற விவரம் கேட்டான்.
'அடிபம்பல தண்ணி அடிக்கிறப்ப கைய உள்ள விட்டுருச்சு' என்றான்.
காட்டுக்குப் போன அவனின் அம்மா மாடை பிடித்துக் கொண்டு தூரத்தில் வந்து கொண்டிருந்தாள். அதற்குள்ளையும் வெள்ளை வேட்டியைக் கிழித்து விரலில் கட்டி முடித்தான்.
வந்தவுடன் பதறினாள் அம்மா.
' சாமி என்னாச்சு வா மொத டாக்டருக்கிட்ட போலாம் ' என்று சொல்லி கையில் வைத்திருந்த மணிப் பரஸைப் பார்த்தாள். பர்ஸ் காலியாக இருந்தது. அப்போது அம்மா, சுவரில் வைத்திருந்த மீன் உண்டியலைப் பார்த்தாள். பக்கத்தில் கிடந்த கல்லை வைத்து உண்டியலை உடைத்தாள் அம்மா. சிறுக சிறுக சேமித்த வைத்த சில்லறைகள் அறுபது ரூபாயும் அம்பது காசும் இருந்தது.
1.30 சிலுவத்தூர் வண்டியில் நத்தத்தில் போய் டாக்டரிடம் கூட்டிட்டுப் போயிட்டு பொழுது சாய்ந்தரம் அம்மாவும் கிஷ்ணாவும் வீடு திரும்பினார்கள்.
கிஷ்ணா அப்போது தெளிச்சியாக இருந்தான்.கையில் வெள்ளைக் காரத் துணியால் கட்டுப் போடப் பட்டிருந்தது.
அதைப் பார்த்த அவன்,
'கிஷ்ணா எப்படி இருக்கே' என்றான்.
'நல்லா இருக்கேன்டா' என்றான்.
குட்டி தன் மீன் உண்டியலைப் பார்த்தான். தலை வேறு முண்டம் வேறு என்று சிதறிக் கிடந்தது.
வழக்கம் போல
அடுத்த வாரம் நத்தம் ஞாயிற்றுக் கிழமை சந்தைக்கு குட்டியின் அம்மா போய்த் திரும்பினாள் .
பை நிறைய காய்கறிகளும்
மளிகை சாமான்களும் வாங்கி வந்திருந்தாள்.
கூடவே ஒரு உண்டியலையும் வாங்கி வந்திருந்தாள்.
உடனே வாங்கி வந்த உண்டியலைப் எடுத்துப் பார்க்க ஆரம்பித்து விட்டான். ரெம்ப அழகாக இருந்தது.
உண்டியலுக்கு தன் உதடை குவித்து குட்டி ஆசையாய் முத்தமிட்டான்.
அப்போது அவனின் அம்மா திடீரெனக் கூப்பிட்டாள்.
'டே ! இந்தா ஒரு ரூபாய அதுல போட்டு வச்சுக்க'






